நன்றி குங்குமம் தோழி முத்தமிழ் கலைவிழி‘‘எட்டுத் தோட்டாக்கள் படத்தை எடுத்த இயக்குநர் ஸ்ரீகணேஷ். 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது நிகழ்ச்சியில் என்னோட ஆக்டிவிட்டிஸ் பார்த்துட்டு, உங்க முகம் ரொம்பவே நடிக்கிது. பேஸ் எக்ஸ்பிரஸிவா இருக்கு, நடிக்குறீங்களான்னு கேட்டார். முதலில் மறுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக கன்வின்ஸாகி பிறகு நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தோட பெயர் ‘குறுதி ஆட்டம்’ ’’ என நம்மிடம் பேசத் தொடங்கினார் முத்தமிழ் கலைவிழி. சென்னையில் இயங்கி வரும் நீலம் அமைப்பின் நிறுவனர். அமைப்பு, சமூகத் தொண்டு என பரபரப்பாக இயங்கியவர் எப்படி நடிப்புக்குள் என்ற நம் கேள்விக்கு சிரித்துக் கொண்டே பேசத் துவங்கினார்.குறுதி ஆட்டம் படம் பற்றிச் சொல்லுங்கள்?எனக்கு இதில் அதர்வாவின் அக்கா கேரக்டர். மேயாதமான் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் இதில் ஹீரோயின். ராதிகா, ராதாரவி போன்ற பெரிய நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். ஒரு அப்பாவியாக உலகமே தம்பிதான் என நினைக்கிற தம்பிக்காக எதையும் செய்கிற பாசக்கார அக்காவாக நடிச்சுருக்கேன். படத்தில் என்னை அதர்வாவோடு சேர்த்துப் பார்க்கும்போது நடிகர் முரளியின் குடும்ப உறுப்பினர் மாதிரியே இருக்கேன் என கலகலவெனச் சிரிக்கிறார். நடிகர் அதர்வா பற்றி?அதர்வாவிற்கு அக்கா கேரக்டர் என்றதும் எப்படி இருக்குமோ என முதலில் யோசித்தேன். எந்த தயக்கமும் இல்லாமல் அதர்வா என்னிடம் ரொம்பவே கேஷுவலாகப் பேசினார். நடிப்பைத் தாண்டி செண்டிமென்டலா எங்களுக்குள் அக்கா-தம்பி பாசம் உருவானது. பிரேக்கில் நிறைய பேசிப் பகிர்ந்துகொண்டோம். ஒரு புரிதலோடு இருவரும் பேசிவைத்து நடிப்போம். ஒரு எங்ஸ்டராக அந்த வயதுக்குரிய நிறைய விசயங்களை அதர்வாவிடம் உணர்ந்தேன். டவுன் டூ எர்த்தா எல்லோருக்கும் மரியாதை கொடுத்து பேசுற ஒரு தன்மையும் அதர்வாவிடம் இருந்தது. உடன் நடிக்கும் கோ-ஆர்ட்டிஸ்டை மதிக்கும் கலைஞனாகவும் அவரை என்னால் பார்க்க முடிந்தது.நடிப்புக்குள் எப்படி வந்தீர்கள்?சின்ன வயதில் இருந்தே நடிப்பில் எனக்கு நிறைய ஆர்வம் இருந்தது. என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் சிலர் இயக்குநர்களாக இருக்கிறார்கள். அதில் ‘பூவரசம் பீப்பீ ’ பெண் இயக்குநர் ஹலிதா ஷமீமின் என்னோட நெருங்கிய நண்பர். அவர் மின்மினிகள் என ஒரு பீரியாடிக்கல் படத்தை இயக்கி வருகிறார். அதில் ஒரு ஆசிரியர் கேரக்டர் வருகிறது. அந்தக் கேரக்டர் என் இயல்போடு ஒத்துப் போவதால் அதில் நடிக்கச் சொல்லி என்னிடம் கேட்டார். டெஸ்ட் சூட் போனேன். ஓ.கே. ஆச்சு. 2016ல் படப்பிடிப்பு தொடங்கியது. ஊட்டியில் படப்பிடிப்பு இருந்தது. இன்னும் நிறைவடையலை. 2019ல் தான் ரிலீஸ் ஆகும். தொடர்ந்து ‘நாடோடிகள்’ ஆவணப்பட இயக்குநர் சித்திரைச் செல்வனின் ‘வனதேவதை’ என்கிற டெலிபிலிம் ஒன்றில் நடித்தேன். அதில் பழங்குடி கிராமத்தில் உள்ள ஆசிரியருக்கும் குழந்தைக்குமான உறவை கதையாக்கினார். அதில் ஆசிரியராக நடித்தேன். கொடைக்கானலில் 15 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு இருந்தது.புகழ், உதயம் என்.எச்.4 படங்களை எடுத்த இயக்குநர் மணிமாறன் சாரின் இயக்கத்தில் ‘சங்கத் தலைவன்’ என்கிற படத்திலும் நடித்து வருகிறேன். இவர் இயக்குநர் வெற்றிமாறன் சாரிடம் பணியாற்றியவர். ஒரு நாவலை பேஸ் பண்ணி இந்தப் படத்தை எடுத்து வருகிறார். இதில் தாரா என்கிற ஒரு போராளி கேரக்டர் என்னுடையது. இது ரொம்ப ஸ்ட்ராங்கான கேரக்டராக வந்திருக்கு. அனைத்துப் படங்களுமே 2019ல் ரிலீஸ். சில முக்கியமான இயக்குநர்கள் படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று படங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கிறது.தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இருக்கிறதா?நடிப்பை ஒரு ஃபேஷனாக செய்யும் எண்ணத்தில் இருக்கிறேன். கேரக்டர் தேர்வைப் பொறுத்தவரை, அம்மா ரோல் வந்தாலும் நடிக்கத் தயார். ஆனால் அந்த கேரக்டர் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது, மக்கள் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணுமா என்பதை மட்டுமே பார்க்கிறேன். இன்னும் சேலன்ஜிங்கான கதாபாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து பண்ணலாம் என நினைக்கிறேன்.நடிப்பிற்காக எதுவும் பயிற்சி எடுத்தீர்களா? நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஏதோ ஒரு நிமிடத்தில் எல்லோரும் நடித்துக்கொண்டுதான் இருக்கோம். எல்லோருக்குள்ளும் நிறைய முகமூடிகள் இருக்கு. கற்றுக்கொள்ளாத நடிப்பு எல்லோருக்கும் நன்றாகவே வரும். அதைத்தான் ஷேக்ஸ்பியர் ‘உலகமே ஒரு நாடக மேடை. அதில் எல்லோருமே நடிகர்கள்’ என்றார். ஆனால் ஸ்டேஜ் ஃபியர், பப்ளிக் ஃபியர் இதுதான் இங்கு அனைவரின் பிரச்சனை. அந்த ஃபியரை தூக்கிப் போட்டுவிட்டால் எல்லோருக்கும் நடிப்பு வரும். அந்த பயிற்சியைத்தான் தியேட்டர் நமக்கு கற்றுத் தருகிறது. ஸ்ரீசித்தின் கட்டியக்காரி குழுவில் இருக்கிறேன். தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக பயிற்சி எடுத்து வருகிறேன். தியேட்டரில் இணைந்த பிறகே படம் செய்யும் எண்ணம் எனக்கு வந்தது. படத்திற்காக டெக்னிக்கலாக சில விசயங்களைத் தவிர நடிப்பு எனக்கு பிரச்சனையே இல்லை. சமீபத்தில் மஞ்சள் நாடகத்தில் கட்டியக்காரி ரோலை எடுத்து செய்தேன். மீண்டும் கட்டியக்காரியில் ஷோலோ பெர்பாமன்ஸ் ஒன்றைச் செய்கிறேன். தியேட்டரில் கிடைக்கும் பயிற்சி, வொர்க்ஷாப், ஆக்டிவிட்டிஸ் அனைத்தும் நம்முடைய சொந்த வாழ்க்கையையும் சேர்த்தே ரெஃப்ரெஸ் செய்கிறது. தியேட்டர் பயிற்சி கூடுதலாக நமக்கு ஒரு பலத்தை தருகிறது. கேமரா முன்பு நடிக்கும்போது நடிப்பு பற்றிய பதற்றமும், பயமும் சுத்தமாக இருக்காது. மேலும் சின்ன வயதில் இருந்தே நடிப்பு, டிராமா, டான்ஸ் என இருந்ததால் எனக்கு நடிப்பதில் பெரிய தயக்கம் இல்லை. ஸ்கூல் படிக்கும்போது நான் ஒரு டான்ஸ் டீம் வைத்திருந்தேன். ராஜ் டி.வி.யில் ஜான் மாஸ்டரோட ‘டான்ஸ் டான்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெர்பாமன்ஸ் செய்திருக்கேன். படிப்பைவிட எனக்கு ஆர்ட் தொடர்பான விசயங்கள் இயல்பாகவே ரொம்பப் பிடிக்கும்சமூக செயற்பாட்டாளராய் சினிமாவை பற்றி..?இங்கு கலைதான் மிகப் பெரிய கருவி. அதற்குள் நாம் என்ன பேசினாலும் நம் குரல் வெளியில் போய் சேரும். நம்மை சுற்றி இருக்கும் அரசியல் மற்றும் சினிமாவைச் சேர்ந்த நண்பர்களைப் பார்க்கும்போது கலை எப்படி ஒரு ஆயுதமாக இருக்கு என புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு சமூக செயற்பாட்டாளராய் பேசுவதைவிட, அதையே பிரபலம் பேசினால் உடனே மக்களை சென்று சுலபமாய் சேர்கிறது. அது அரசியலாகட்டும், சாதிய ரீதியிலான பிரச்சனையாகட்டும், புரட்சி பேசுவதாகட்டும். சினிமாவைப் பொறுத்தவரை இயக்குநராகவும் டெக்னிக்கலாகவும் பெண்கள் குறைவாக உள்ளனர். அரசியல் புரிதலோடு, பெண்களுக்கான பிரச்சனைகளை முன்னெடுத்துப் பேசுகிற பெண்கள் இதில் மிகவும் குறைவு. குறைவாக செயல்படும் இடங்களில் பெண்களின் குரலாய் இருந்து சில விசயங்களைச் செய்ய வேண்டும் எனவும் நினைக்கிறேன். சென்சிபிளான பெண்கள் சினிமாவில் நிறைய வரவேண்டும். சினிமாவை வெளியில் இருந்து பார்ப்பதற்கும், உள்ளே போய் வேலை செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சினிமாவிற்குள் இயங்கும் போதுதான் அத்தனைபேரின் உழைப்பும் நமக்கு புரியுது. ஏதோ நடிக்கக் கூப்புடுறாங்க போறோம் நடிக்கிறோம்னு இல்லாமல் அந்த கேரக்டரை உள்வாங்கி நடிப்பதில் ரொம்பவே சிறப்பாகவும், சில காட்சிகள் இயல்பாகவும் வந்திருக்கு என முடித்தார்.– மகேஸ்வரி படங்கள் ஏ.டி.தமிழ்வாணன் …
அதர்வாவின் அக்கா நான்…
previous post