கலசபாக்கம், ஆக. 27: கலசபாக்கம் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் 8 ஊராட்சிகளில் ₹2.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கலைஞர் முதல்வராக இருந்தபோது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நூலகம், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம், குளம், எரிமேடை, சுற்று சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் முயற்சியால் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் மக்கள் தொகை அடிப்படையாகக் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரேஷன் கடை, நெற்களம், சிமெண்ட் சாலை, குளம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கலசபாக்கம் ஒன்றியத்தில் நடப்பாண்டு கேட்ட வரம் பாளையம், வீரலூர், காந்தபாளையம், காலூர், தேவராயன் பாளையம், ஆணைவாடி மட்ட வெட்டு தென் மகாதேவமங்கலம் உள்ளிட்ட 8 ஊராட்சிகளுக்கு ₹2.50 கோடி செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் பணிகளை விரைந்து முடிக்க கடந்த வாரம் எம்எல்ஏ பெ சு தி சரவணன் தலைமையில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. விரைவில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு எம்எல்ஏ ஆலோசனை வழங்கினார். இந்நிலையில் நேற்று கலசபாக்கம் ஒன்றியம் தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் ஊராட்சித் தலைவர் எழில்மாறன் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ₹13.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.தற்போது கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதாலும் முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் சாலை வசதி செய்து தருவதாலும் பொதுமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்