திண்டுக்கல், செப். 16: திண்டுக்கல் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று கலெக்டர் பூங்கொடி பரிசு வழங்கி பாராட்டினார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றன.
இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 27 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழக முதுகலை மாணவர் டிக்சன் முதல் பரிசும், திண்டுக்கல் எம்.வி., முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவி பவித்ரா இரண்டாம் பரிசும், பழநி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி மாணவர் நாகார்ஜுன் மூன்றாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000த்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் பூங்கொடி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் இளங்கோ மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்த கொண்டனர்.