ஆரணி, செப்.25: மறைந்த அண்ணாவை பற்றி பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சித்தது தவறு என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜவுடனான அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பாஜ தலைவர் நட்டாவை சந்தித்து என்ன பேசவேண்டுமோ அதை பேசிவிட்டனர். அண்ணாவை பற்றி பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தது தவறு. மறைந்த அண்ணாவை போன்ற தேசிய தலைவர்களை பற்றி யார் விமர்சனம் செய்தாலும் தவறு.
அதிமுக கூட்டணி கட்சியான தமாகா, பாமக உள்ளிட்ட ஒத்த கருத்துள்ள கட்சிகள் பாஜவுடனான கூட்டணியில் வெற்றி பெறும். இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான குழுவை முன்னாள் ஜனாதிபதி தலைமையில் அமைத்து ஆய்வு நடந்து வருகிறது. இந்த தேர்தல் மூலம் செலவுகள் குறையும். அதனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.