சிதம்பரம், ஆக. 20: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை சந்திக்க சென்ற தொகுப்பூதியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்து அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியர்களாக 202 பேர் பணியாற்றி வருகின்றனர். இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் சுமார் 14 ஆண்டுகளாக ரூ.4000 ஊதியத்தில் இந்த 202 குடும்பத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் நிர்வாண போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் செல்லும் வழி பல்கலைக்கழக வளாகம், துணைவேந்தர் பங்களா உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் தொகுப்பூதியர்களில் 5 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசனை சந்திக்க சென்றனர்.அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துணைவேந்தரை சந்திக்க முடியாது என துணைவேந்தர் அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தொகுப்பூதியர்கள் துணைவேந்தரை சந்தித்து தங்கள் கோரிக்கையை தெரிவித்தனர். பல்கலைக்கழக வளாகம் எதிரே கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை வெளியேறுமாறு கூறி கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர். இதனால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வார காலத்தில் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களை நடத்த இருப்பதாக ஊழியர்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.