விழுப்புரம், நவ. 10: அண்ணாமலை இனி திருத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞரின் கவிதைகள், திரைப்பட, நாடக வசனங்கள் ஒப்பித்தல் போட்டி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியானதற்கு காரணமே பெரியார்தான். தமிழகத்தில் ஆணும் பெண்ணும் சமம், அனைவரும் படிப்பதற்கு பெரியார் தான் காரணம். வடமாநிலத்தவரும் பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர் , காமராஜர் போன்றவர்கள் அடிதட்டு மக்களுக்காக, பெண்ணுரிமைக்காக எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது அவருக்கே நன்கு தெரியும். பெரியாரின் சிலை வைக்கும் நோக்கமே பகுத்தறிவு அடித்தளத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமாகும். அண்ணாமலை தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை செயலாளர் பெயர்கூட அழைப்பிதழில் இடம் பெறவில்லை. அவருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. முன்பெல்லாம் எங்களுக்கு முறையாக அழைப்பு அனுப்பப்பட்டு, பேச அனுமதிக்கப்பட்டது. இப்போது அனுமதிக்கப்படவில்லை.
இதற்கெல்லாம் காரணம் ஆளுனர் மட்டும் தான் பேசவேண்டும் என்ற எண்ணம்தான். மேடையில் அவருக்கு இருக்கைகூட ஒதுக்கப்படவில்லை. இனி பட்டமளிப்பு விழாவை துணை வேந்தரான நீங்களே நடத்துங்கள் என்று சொல்லும் அளவுக்கு ஆளுனர் இனி நடந்து கொள்ளமாட்டார் என நம்புகிறேன், என்றார். மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், இளந்திரையன், கற்பகம், நகர செயலாளர் சக்கரை, பேரூராட்சி செயலாளர் ஜூவா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், வர்த்தக அணி அமைப்பாளர் கோல்டுவெங்கடேசன், மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகர துணை செயலாளர் சோமு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.