அம்பத்தூர், ஆக. 29:பாஜ மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பத்தூர் ஓ.டி.பேருந்து நிலையத்தில் நேற்று அம்பத்தூர் பகுதி எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் லித்தோ ஜெ.மோகன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர், அண்ணாமலையின் உருவ பொம்மையை காலணி மற்றும் துடைப்பத்தால் அடித்தும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையத்தில் திடீரென உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரிடம் அனுமதி பெறாமல், உருவ பொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், பகுதி எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் லித்தோ ஜெ.மோகன், உள்ளிட்டோரை அம்பத்தூர் போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.