திருவண்ணாமலை, ஆக.20: திருவண்ணாமலையில் மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், வெளியூர் பக்தர்கள் கோயில் அருகே வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். திருவண்ணாமலை நினைக்க முக்தித்தரும் ஆன்மிக நகரம். அண்ணாமலையார் கோயில், கிரிவலம், ஆஸ்ரமங்கள் என புகழ்மிக்க இந்நகருக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில மாதங்களாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருக்கிறது. பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி, வார இறுதி நாட்களிலும் அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் தேரோடும் மாட வீதியை திருப்பதிக்கு இணையாக தரம் உயர்த்தும் முயற்சியாக, கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதையொட்டி, முதற்கட்டமாக பே கோபுரம் வீதி மற்றும் பெரிய தெரு பகுதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, தேரடி வீதி, திருவூடல் தெருவில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. அதனால், அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, காந்தி சிலை சந்திப்பில் தொடங்கி, திருமஞ்சன கோபுர வீதி காமாட்சியம்மன் கோயில் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலுக்கு வெளியூர்களில் இருந்து கார் மற்றும் சுற்றுலா வேன்களில் வரும் பக்தர்கள், மாட வீதியில் நடைபெறும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மற்றும் போக்குவரத்து மாற்றங்களை அறியாமல், நகருக்குள் வாகனங்களுடன் வருகின்றனர். அதனால், நெரிசலான பகுதிகளில் கார் மற்றும் வேன்கள் சிக்கித்திணறுவதும், அந்த பகுதிகளில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக, கடம்பராயன் தெரு, சன்னதி தெரு, சின்னக்கடை தெரு, மத்தலாங்குளத் தெரு போன்ற நகரின் முக்கிய சாலைகளில் வெளியூர் வாகனங்களால் பெரிதும் நெரிசல் ஏற்படுகின்றன.
எனவே, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு கார் மற்றும் வேன்களில் வரும் பக்தர்கள், தங்களுடைய வாகனங்களை காந்திநகர் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானம், வேலூர் சாலையில் உள்ள ஈசான்ய மைதானம், சென்னை சாலை வழியாக வரும் வாகனங்கள் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள திறந்தவெளி மைதானம் போன்ற பகுதிகளில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து கோயிலுக்கு செல்லுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். கோயிலுக்கு அருகே கார் மற்றும் வேன்கள் செல்லவும், வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதியும் தற்போது இல்லை. எனவே, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், மாட வீதி தரம் உயர்த்தும் பணி முடியும் வரை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதோடு, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளித்து, நெரிசலை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.