திருவண்ணாமலை, ஆக.19: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகரித்து இருந்த நிலை மாறி, வார இறுதி நாட்களிலும், தொடர் விடுமுறைகளிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனக்காக வருகின்றனர். குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வார இறுதி விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக கூட்டம் அலைமோதியது. அதன்படி, அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது.