திருவண்ணாமலை, அக்.20: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தி தரும் தலமாகவும் அமைந்திருக்கிறது. எனவே, திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் வெகுவாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய திரள்கின்றனர். அதனால், பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதன்படி, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களை ெதாடர்ந்து, வரும் 23ம் தேதி ஆயுதபூஜையும், 24ம் தேதி விஜயதசமியும் அமைந்திருக்கிறது. எனவே, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினங்களாக இருப்பதால், அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, நாளை முதல் வரும் 24ம் தேதி வரை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பொது தரிசனம் மற்றும் ₹50 கட்டண தரிசனம் மட்டும் வழக்கம் போல அனுமதிக்கப்படும். மேலும், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், மாடவீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்காக பெரிய தெரு மற்றும் பேகோபுர வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மாடவீதியை இணைக்கும் சின்னக்கடை வீதியிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள், நகருக்கு வெளியே வாகனங்களை நிறுத்திவிட்டு, கோயிலுக்கு வருமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அண்ணா நுழைவு வாயில் அருகே ஈசான்ய மைதானம், காந்திநகர் பைபாஸ் சாலையில் திறந்தவெளி திடல் ஆகிய இடங்களில் சுற்றுலா வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.