திருவண்ணாமலை, செப்.4: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே, சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை தரிசிக்க தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி கிரிவலம், தீபத்திருவிழா போன்ற விழா காலங்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகரித்திருந்த நிலை மாறிவிட்டது. இப்போது, வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக அலைமோதுகின்றனர்.
மேலும், அரசு அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அதோடு, கடந்த சில மாதங்களாக வெளி நாட்டு பக்தர்கள் வருகையும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால், கடந்த இரண்டு நாட்களாக அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. அதன்படி, நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதிகாலை தொடங்கி, இரவு 9 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதையொட்டி, பொது தரிசனம் மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் காலையில் இருந்தே அலைமோதியது. ராஜகோபுரத்துக்கு வெளியே வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. அதில் வெளி மாநில பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. சுமார் 3 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்த பிறகே சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை வழக்கம்போல் ரத்து செய்யப்பட்டன.
விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால், கடந்த இரண்டு நாட்களாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.