திருவண்ணாமலை, ஆக.21: திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் 2 நாட்களில் 1.89 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு அல்லது அரசு விடுமுறை நாட்களில் பவுர்ணமி கிரிவலம் அமைந்தால் மட்டுமே அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை இருந்தது. ஆனால், சமீப காலமாக வார நாட்களில் பவுர்ணமி கிரிவலம் அமைந்தாலும், வழக்கம் போல பக்தர்கள் வருகை அதிகரிக்கிறது. மேலும், கிரிவலம் செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதை விரும்புகின்றனர். மலையே சிவன் என்றாலும், கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பது பலரது வேண்டுதலாக உள்ளது.
அதனால், நீண்ட தூரம் பயணம் செய்து, 14 கிமீ தூரம் நடந்து கிரிவலம் சென்ற பிறகும் சோர்வை பொருட்படுத்தாமல் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, கடந்த சில மாதங்களாக இதுவரை எப்போதும் இல்லாத அளவில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்திருக்கிறது.
அதனால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மட்டுமின்றி, ஆந்திர அரசு போக்குவரத்துக் கழகமும் பவுர்ணமி சிறப்பு பஸ்களை இயக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், வேலூர் கண்டோன்மென்ட் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயிலிலும், வாராந்திர ரயில்களிலும் ஆந்திர மாநில பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமியான கடந்த 18ம் தேதி மற்றும் 19ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் மட்டும், அண்ணாமலையார் கோயிலில் 1.89 லட்சம் பக்தர்கள் பொது தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்திருப்பதாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வேணடும் என்பதற்காக, கடந்த 2 நாட்களும் பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது. சிறப்பு தரிசனம், ₹50 கட்டண தரிசனம், முன்னுரிமை தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. அம்மணி அம்மன் கோபுரம் வழியாக, முக்கிய பிரமுகர்களும் மிகுந்த கட்டுப்பாடுகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரம் வழியாக பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது. அதோடு, அதிகாலை 5 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை தரிசனத்துக்கு பக்தர்கள் தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்டனர். மேலும், சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி ஆகியவற்றில் மூன்று வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதனால், அதிகபடியான எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வாய்ப்பு அமைந்தது.