திருவண்ணாமலை, ஜூன் 5: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் தினமும் ஒரு மணி நேரம் ‘பிரேக் தரிசனம்’ அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமாகும். பஞ்ச பூத தலங்களில் அக்னித் தலமாக திகழும் இத்திருக்கோயிலை தரிசனம் செய்யவும், கிரிவலம் சென்று வழிபடவும் சமீப காலமாக பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். எனவே, பவுர்ணமி நாட்களைப் போல, அனைத்து நாட்களும் திருவண்ணாமலை பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்திருக்கிறது.
மேலும், அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய வார நாட்களில் அதிகபட்சம் 2 மணி நேரமும், வார இறுதி நாட்களில் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரமும், பவுர்ணமி நாட்களில் அதிகபட்சம் சுமார் 6 மணி நேரமும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதோடு, வரிசையில் காத்திருக்கும் போது ஏற்படும் வாக்குவாதம், கைகலப்பாக மாறும் வேதனை நிலையும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
அதோடு, முக்கிய பிரமுகர்கள் மற்றும் உபயதாரர்களை தரிசனத்துக்காக முன்னுரிமை அடிப்படையில் அனுமதிப்பதால், தரிசன வரிசையில் காத்திருப்போருக்கு ேமலும் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, தரிசன வரிசையை முறைப்படுத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் இடைநிறுத்த தரிசனம் (பிரேக் தரிசனம்) அனுமதிக்கவும், அதற்காக, ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கவும் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும், ஆனி பிரமோற்வசம் 10 நாட்கள், ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள், தீபத்திருவிழா 17 நாட்கள், உத்ராயண புண்ணியகால உற்சவம் 13 நாட்கள், பங்குனி உத்திரம் 5 நாட்கள் ஆகிய நாட்களிலும், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியில் 2 நாட்கள் வீதம் மொத்தம் 24 நாட்கள் மற்றும் பிரதோஷம் நடைபெறும் 24 நாட்கள் உள்பட ஆண்டுக்கு மொத்தம் 103 நாட்கள் மட்டும் பிரேக் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.