திருவண்ணாமலை, ஜூன் 30: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சமீப காலமாக, நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக அலைமோதுகிறது. குறிப்பாக, வார இறுதி விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலை நகரம் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கும்போதே, பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது. அதனால், வட ஒத்தைவாடை தெரு தொடங்கி பூத நாராயணன் கோயில், தேரடி வீதி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பிறகு தரிசனம் செய்ய முடிந்தது.
தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியதால், கட்டண தரிசன வரிசை அனுமதிக்கப்படும் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலில், கிளி கோபுரம் நுழைவு வாயில் போன்ற இடங்களில் பக்தர்களிடையே கடும் நெரிசலும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இரும்பு தடுப்புகளை தாண்டி ஒருவருக்கொருவர் முண்டி அடித்துக்கொண்டு வரிசையில் செல்ல முயன்றதால், நிலை தடுமாறி சில பக்தர்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னுரிமை தரிசனம் எனும் பெயரில் மாற்றுப்பாதை வழியாக சிலரை அழைத்துச் சென்றதால், அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலில் அங்கிருந்த ஊழியர்களிடம் பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.