திருவண்ணாமலை, ஆக.27: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை காணப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை சமீப காலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது. அதனால், ஒவ்வொரு நாளும் திருவண்ணாமலையில் திருவிழா கூட்டம் போல பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் அமைந்ததால், கடந்த 3 நாட்களாக அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி, கிருஷ்ண ஜெயந்தி விழாவான நேற்றும் வழக்கத்தைவிட பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர், அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரம் வழியாக பொது தரிசனமும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ₹50 கட்டண தரிசனமும் அனுமதிக்கப்பட்டது. பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு பிறகு படிப்படியாக பக்தர்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. வழக்கம் போல, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
மேலும், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயில் 2ம் பிரகாரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதேபோல், கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள கலையரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை, ருக்மணி வேடம் அணிந்து கிருஷ்ண ஜெயந்தி விழாவை உற்சாகமாக கொண்டாடினர். மேலும், திருவண்ணாமலை மாடவீதியில் பெரிய தெரு பகுதியில் அமைந்துள்ள பூதநாராயண பெருமாள் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அலங்கார ரூபத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.