சிதம்பரம், மே 24:அண்ணன், தங்கை உறவுமுறை காதலை கண்டித்ததால் சலூன் கடை உரிமையாளர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் மேல்கரை வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் காளிதாஸ்(38). இவர் கனகசபை நகர் காசி மட தெருவில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.45 மணி அளவில் கடையை பூட்டி கொண்டு வீட்டுக்கு செல்ல இருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், கடைக்குள் புகுந்து காளிதாஸை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி விசாரணையில், கொலை செய்யப்பட்ட காளிதாஸின் கடையில், இவரது உறவினரான புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முருகன் மகன் மணி(எ) வேல்மணி (23) என்பவர் ஒரு வருடமாக காளிதாசின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது காளிதாசின் அண்ணன் மகளுக்கும், வேல்மணிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உறவுமுறையில் அண்ணன், தங்கை என்பதால், காளிதாஸ் மற்றும் இவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேல்மணியை, காளிதாஸ் கண்டித்து சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேல்மணி காளிதாஸை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11.45 மணியளவில் கடையில் வேலை முடிந்து, தனியாக வீட்டுக்கு செல்ல முயன்ற காளிதாஸை வேல்மணி, தனது நண்பர் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த ஐயப்பன் மகன் விக்கி என்கிற விக்னேஷ்(21) என்பவருடன் சேர்ந்து பைக்கில் வந்து கத்தியால் மாறி மாறி தலை, கை, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது தெரிந்தது. இது குறித்து காளிதாஸின் மனைவி காயத்ரி, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று காலை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த வேல்மணி, விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். காளிதாசுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சலூன் கடை உரிமையாளரை உறவினரே வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.