திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கூறி பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். திருவெறும்பூர் அடுத்த பெல் வளாகத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பெல் ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால் ஆரம்ப பள்ளியை ஒரு நாளைக்கு 2 ஷிப்ட் முறையில் காலை 8.40 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 1.20 மணி முதல் 4.30 மணி வரையும் என வகுப்புகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதி இல்லை என்று கூறி பள்ளியை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பெல் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று காலை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.