மதுரை, செப். 1: மதுரையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் நடத்திய திடீர் சாலை மறியல் போராட்டத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரையில் மேலபனங்காடி, கருப்பையாபுரம் உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, குப்பை அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தரக்கோரி நேற்று இப்பகுதி மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டிருப்பதாக கூறிய பொதுமக்கள், இதனை சீரமைத்திட கோரி காலி குடங்களுடன் குலமங்கலம் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகலறிந்த மாநகராட்சியினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குழாய்களை சீரமைப்பதாகவும், அந்த பணிகள் நடைபெறும் வரை லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதாகவும்ம், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.