செங்கல்பட்டு, ஆக. 18: அடிப்படை வசதிகளில் சிறந்து விளங்கிய மறைமலைநகர் நகராட்சிக்கு அமைச்சர் கே.என்.நேரு விருது வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் சுதந்திரதினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகளை வழங்கினார். அதன் அடிப்படையில் சிறந்த மாநகராட்சியாக கோயம்புத்தூர், சிறந்த நகராட்சியாக திருவாரூர், சிறந்த பேரூராட்சியாக சூலூர் ஆகியவை தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து விருதுகள் வழங்கினார்.
இதில் இந்த வருடத்திற்கான சிறந்த நகராட்சிகளில் 2ம் இடத்தினைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, இரண்டாம் இடம் பெற்ற மறைமலைநகர் நகராட்சிக்கு அதன் தலைவர் ஜெ.சண்முகத்திடம் விருது வழங்கினார். விருதுடன் சேர்த்து பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராஜ் மற்றும் மறைமலைநகர் நகராட்சி ஆணையர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகராட்சிகளில் சுகாதாரம், வருவாய் நகர புனரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்கல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் சிறந்து விளங்கும் நகராட்சிகளுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.