அஞ்சுகிராமம், ஆக.22: அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் உபகார தாசன் (76), தொழிலாளி. இவரது மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்தார். அருகில் உள்ள வீட்டில் இளைய மகன் ஏசுராஜ விமல் வசித்து வருகிறார். உபகாரதாசனுக்கு மது அருந்து பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2 முறை மாரடைப்பு வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஒழுங்காக மருந்து சாப்பிடுவதில்லை என்றும் தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 18ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் உபகார தாசனிடம் அவரது இளைய மகனும், மருமகளும் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். 19ம் தேதி பாஸ்போர்ட் விஷயமாக ஏசுராஜ விமல் வெளியூர் சென்று விட்டு நேற்றுமுன்தினம் காலை வந்துள்ளார்.
அப்போது தந்தையின் வீட்டு கதவு 2 நாளாக திறக்காமல் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது உபகார தாசன் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஏசுராஜ விமல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.