பட்டுக்கோட்டை, ஆக. 8: இந்திய சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியைப் பறக்க விடத் தேவையான கொடி அஞ்சல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பட்டுக்கோட்டை அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. நமது இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழாவையொட்டி, பாரத பிரதமர் ஹர் கர் திரங்கா 3.0 ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி எனும் திட்டத்தினை அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நமது தேசியக்கொடியாகிய மூவர்ண கொடியை பறக்க விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தின்கீழ் இயங்கும் அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சலகங்கள் என 279 அஞ்சலகங்களிலும் நாட்டின் தேசியக்கொடி ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன், முதல் விற்பனையை பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் துவக்கி வைக்கப்பட்டது. எனவே, இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.