திருச்சி ஆக.15: சுதந்திர தினவிழா இன்று நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வகையில் திருச்சி மாநகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. திருச்சியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்காக திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி நேற்று இரவு மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து காவல்துறையினருடனான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் எஸ்.பி வருண்குமார் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதுதவிர ரயில்வே பாலங்கள், மேம்பாலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் என பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்து இடங்களிலும் இரவு பகலாக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.