கம்பம், ஜூலை 16: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றது முதல் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன், அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்கள் மற்றும் சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம், கம்பம் 14வது வார்டு செக்கடி தெருவில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்கள் மற்றும் சத்து மாவு வழங்கப்பட்டது. கம்பம் நகராட்சி 14ம் வார்டு நகர்மன்ற திமுக உறுப்பினர் அன்புகுமாரி ஜெகன்பிரதாப் குழந்தைகளின் பெற்றோர்களிடம் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் சத்து மாவை வழங்கினார். நிகழ்ச்சியின்போது, அங்கன்வாடி பணியாளர்கள் சுகுணாதேவி, உதவியாளர் செல்வலதா ஆகியோர் இருந்தனர்.