ராமநாதபுரம், ஜூலை 18: பாப்பாக்குடி கிராமத்திற்கு புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டித்தர கிராமமக்கள் மனு அளித்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று டி.ஆர்.ஓ கோவிந்தராஜலு தலைமையில் நடந்தது. இதில் ராமநாதபுரம் அருகே தொளுவளூர் பாப்பாகுடி மக்கள் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, சுமார் 300 குடும்பங்கள் உள்ள பாப்பாகுடி கிராமத்தில் 40 வருடங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டது.
இங்கு தற்போது 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கட்டிடம் கட்டி 40 வருடங்கள் கடந்து விட்டதால் அங்கன்வாடி மையம் சேதமடைந்து காணப்படுகிறது. கனமழை பெய்தால் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.