பாலக்காடு, ஜூன் 18: பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு அருகே கரிம்பா பாலளம் பகுதியிலுள்ள அங்கன்வாடி மேற்கூரையில் மலைப்பாம்பு காணப்பட்டது. அங்கன்வாடி ஆசிரியையும், உதவியாளரும் மேற்கூரையில் மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்து மிரண்டு போயினர். இதையடுத்து சுதாரித்து கொண்டு, உடனடியாக குழந்தைகளை வெளியேற்றி காப்பாற்றினர்.
வனத்துறையினரை வரவழைத்து பாம்பை பிடிப்பதற்கு மேற்கூரையை நீக்கி, பார்ப்பதற்குள் பாம்பு மிரண்டோடி தப்பி விட்டது. அருகிலுள்ள வனத்துக்குள் இருந்து வெளியேறி வந்த பாம்பு என தெரிய வந்தது. ஞாயிறன்று விடுமுறை என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் அங்கன்வாடிக்குள் புகுந்து மேற்கூரையில் எலிகளை பிடித்து தீனியாக உட்கொண்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கன்வாடி அருகிலுள்ள புதர் காடுகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.