விருதுநகர், நவ.21: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தொண்டு நிறுவன உரிமையாளர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபர்கள் மனு அளித்தனர். மனுவில், விருதுநகரை சேர்ந்த தொண்டு நிறுவன உரிமையாளர் கடந்த 2020 முதல் 2021 கால கட்டங்களில், அரசின் சத்துணவு, அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரம்பும் போது தனது தொண்டு நிறுவனத்தில் சில பணியிடங்கள் ஒதுக்கப்படும். அதில் இருந்து வேலைக்கான ஆணை பெற்றுத்தருவதாக கூறி பலரிடம் ரூ.2 லட்சம் முதல் 4 லட்சம் வரை பணம் பெற்று ஏமாற்றி உள்ளார்.
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் அடியாட்கள் வைத்து மிரட்டுகிறார். எனவே பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்துள்ளனர். விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த சாந்தி என்பவர் கூறுகையில், தொண்டு நிறுவனம் நடத்துவதால் அரசு குறிப்பிட்ட அளவு தனது நிறுவனத்திற்கு ஒதுக்கும் பணியிடங்களை அளிப்பதாக கூறினார். அதை நம்பி அரசு வேலை என்பதால் ரூ.3 லட்சத்தை கடந்த 2020ல் கொடுத்தேன். இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டால் அடியாட்கள் வைத்து மிரட்டுகிறார்.
இது தொடர்பாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இதற்கு இருவர் புரோக்கர்களாக செயல்பட்டு வருகின்றனர். எங்களுக்கு தெரிந்தவரை 7 பேரிடம் ரூ.11 லட்சம் வரை பணம் வாங்கி ஏமாற்றி உள்ளார். மேலும் பலர் பணம் கொடுத்து ஏமாறி இருக்கலாம். கலெக்டர் தலையிட்டு தொண்டு நிறுவனம் நடத்தி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வரும் உமையலிங்கத்திடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.