கோவை, ஜூன் 10: கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகள் வராமல் தடுக்க அகழி தோண்டப்பட்டது. குறிப்பாக கோவைப்புதூர் அறிவொளி நகர், அண்ணா நகர், காந்தி நகர், மதுக்கரை மரப்பாலம், மைல்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 கி.மீ தூரம் சில ஆண்டிற்கு முன் அகழி தோண்டப்பட்டது. இந்த அகழியின் இடையே சில இடங்களில் பாறை கற்கள் இருந்தது. இவற்றை வெடி வைத்து அகற்ற வேண்டியிருந்தது. இதற்கு அனுமதி கிடைக்காத நிலையில் அப்படியே வனத்துறையினர் விட்டு விட்டனர்.
இந்த நிலையில் அகழியை தொடர்ந்து பராமரிக்கவில்லை. 3 மீட்டர் ஆழத்தில் தோண்டிய அகழி மண் மூடி மேடாகி போனது. இந்த வழியாக யானைகள் எளிதாக காட்டிலிருந்து கிராமங்களுக்கு வந்து செல்கிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் யானைகள் பாலக்காடு ரோடு, கரடிமடை, சுண்டக்காமுத்தூர், பேரூர் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. யானைகள் வருகையை வனத்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. விவசாய நிலங்களுக்கு யானைகள் வரும் வகையில் வனத்துறையினர் அகழியை சரி செய்யாமல் விட்டு விட்டதாக விவசாயிகள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.