மதுரை, ஜூன் 3: தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகள், கிராம சாலைகளோரம் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றை, அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, மதுரை கோட்ட நெடுஞ்சாலைத்துறையின் கீழ் செயல்படும் மதுரை தெற்கு, வடக்கு, உசிலம்பட்டி, மேலூர், வாடிபட்டி, உசிலம்பட்டி, பேரையூர் என, ஏழு உட்கோட்டங்களில் பயணிக்கும் 1,900 கி.மீ தூர சாலைகளில் வைக்கப்பட்டுள்ள 900 கொடிக்கம்பங்களை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது.
காலககெடு முடிந்தும் பல இடங்களில் கம்பங்களை அகற்றப்படாத நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளே அவற்றை அகற்ற முடிவெடுத்தனர். இதன்படி, பல்வேறு உட்கோட்டங்களில் நேற்று வரை, 250 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றை அகற்றும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.