உத்திரமேரூர், ஆக.10: உத்திரமேரூர் அருகே அகரம்தூளி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ₹89.27 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். உத்திரமேரூர் அடுத்த அகரம்தூளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி, முகாமினை தொடங்கி வைத்தார். ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதாஞானசேகரன், துணை பெருந்தலைவர் வசந்திகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு திமுக மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, 7 மாற்றுதிறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் மற்றும் 2 மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர ஸ்கூட்டர், 5 பேருக்கு இலவச வீட்டுமனை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு கடனுதவி, 84 பேருக்கு பழங்குடியினர்களுக்கான சான்றிதழ், 14 பேருக்கு குடும்ப அட்டை நகல், 14 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி, 5 பேருக்கு தனிநபர் கிணறு, 13 பேருக்கு இஸ்திரி பெட்டி, 8 நபர்களுக்கு தொழிற் கடனுதவி, வேளாண் மற்றும் தோட்டக்கலைதுறை சார்பில் 18 நபர்களுக்கும், அனைவருக்கும் வீடு திட்டம் 5 நபர்கள், 3 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 5 பேருக்கு மக்களை தேடி மருத்துவ பெட்டகம் என மொத்தம் 193 பயனாளிகளுக்கு, ₹89 லட்சத்து 27 ஆயிரத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், சமூக பாதுகாப்புத்திட்ட துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களது துறை ரீதியான அரசின் திட்டப்பணிகள் குறித்து விளக்கி கூறினர். இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி துறையினர் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.