நன்றி குங்குமம் டாக்டர் வரலாறுபல நேரங்களில் நம் பெருமை நமக்கே தெரிவதில்லை. அதை யாராவது கண்டுபிடித்துச் சொன்னால்தான் உண்டு. முருங்கைக் கீரை பற்றிய ஒரு வரலாறும் அதனையே மீண்டும் உணர்த்துகிறது. கியூபா தேசத்தின் முன்னாள் அதிபரான ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.புரட்சியாளரும், பொதுவுடமைவாதியுமான காஸ்ட்ரோ ஏறக்குறைய 17 வருடங்கள் கியூபாவின் பிரதமராக பதவி வகித்தவர். அதன் பின்னர் 32 ஆண்டுகள் அதிபராகவும் பதவி வகித்தார். மருத்துவத்துறையின் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் அதிக அக்கறை காட்டியவர். முருங்கைக் கீரை பற்றிய அவரது ஆர்வமும் அத்தகைய சுவாரஸ்யமான ஒன்று.கியூபாவின் ஹைட்டி என்கிற தீவில் அப்போது பூகம்பம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருந்தார்கள். மிகப்பெரிய அளவில் காலரா நோய் பரவியது. எண்ணற்ற மக்கள் உயிரிழந்தனர். அப்போது நிலைமையை சரி செய்ய மருத்துவர்களுடன், தன்னார்வலர்களுடனும் ஆலோசித்தார் காஸ்ட்ரோ.‘இந்தியாவில் உள்ள முருங்கைக்கீரைக்கு காலராவைத் தடுக்கும் சக்தி உண்டு’ என்று ஃபிடல் காஸ்ட்ரோவிடம் ஆலோசனை சொன்னார்கள். அத்துடன் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் அளவுக்கு உடலுக்கு சக்தியை வழங்கும் வல்லமையும் முருங்கை கீரைக்கு உண்டு என்று பின்லே ஆராய்ச்சி மையம் காஸ்ட்ரோவிடம் பரிந்துரை செய்தது.உடனடியாக ஒரு மருத்துவக் குழுவினரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. தமிழ்நாடு, கேரளா போன்ற பல இடங்களில் ஆய்வு செய்த பிறகு, ஹைட்டி தீவு மக்களுக்காக முருங்கைக் கீரையை பெருமளவில் கியூபாவில் இறக்குமதி செய்தார்கள். தாங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல பலன் கிடைத்ததால் காஸ்ட்ரோவுக்கு முருங்கைக் கீரை மீது மிகப்பெரும் மரியாதை வந்தது.உடனே தங்களது நாடு முழுவதும் முருங்கையைப் பயிரிட ஏற்பாடு செய்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. தன்னுடைய வயிறு தொடர்பான பல பிரச்னைகளையும் முருங்கை இலை சரி செய்ததால் அதனை ‘அதிசய செடி’ என்றும் ஃபிடல் காஸ்ட்ரோ வர்ணித்தார்.இத்தகைய பெருமை வாய்ந்த முருங்கைக் கீரையின் மகத்துவங்களை உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணனிடம் கேட்டோம்…‘‘ஒரு கப் முருங்கைக் கீரையில் கலோரி – 92%, புரதம் – 6.7%, கொழுப்பு- 1.7%, தாதுக்கள்- 2.3%, கார்போஹைட்ரேட்டுகள் – 12.5%, தாதுக்கள், வைட்டமின்கள், கால்சியம் – 440 மி.கி., பாஸ்பரஸ்- 70 மி.கி, இரும்புச்சத்து – 7 மி.கி, வைட்டமின் – சி-220 மி.கி., வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவைஅடங்கியுள்ளன.முருங்கை கீரை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆன்டி ஆக்ஸிடென்டாகவும் ஆன்டிபயாட்டிக்காகவும் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. ரத்தத்தை சுத்திகரித்து ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது. ரத்தசோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறச் செய்கிறது. இது உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தந்து மழை, குளிர் மற்றும்; கோடைக்கு ஏற்ற உணவாக இருக்கிறது. இது பெரியவர் சிறியவர் என அனைவரும் உண்ணலாம். உடலுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 சதவீதம் முருங்கைக் கீரையில் உள்ளது. ஹீமோகுளோபின் அளவு இதனால் பல மடங்கு அதிகரிக்கும். வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது.முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும், தாதுவும் பெருகும், விந்துவை கெட்டிப்படுத்தும். இதனால்தான் இக்கீரைக்கு விந்து கட்டி என்ற பெயரும் இருக்கிறது. முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து!’’;தொகுப்பு : க.இளஞ்சேரன்
ஃபிடல் காஸ்ட்ரோவை பிரமிக்க வைத்த முருங்கைக் கீரை!
previous post