விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை மு.க.அழகிரி அறிவிப்பு
பதிவு செய்த நாள்
11/22/2009 2:32:54 AM
மேலூர்: மதுரை மாவட்டம், மேலூரில் ரூ.36.9 கோடியில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கனிம நிறுவன தலைவர் மணிவாசன் வரவேற்றார். கிரானைட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசியதாவது:
மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் தொடங்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது எங்களின் தாரக மந்திரம். அதன்படி நாங்கள் நடந்து வருகிறோம். 1977ல் தேர்தல் பிரசாரத்திற்கு எம்.ஜி.ஆர். வந்தபோது, மதுரை திடீர்நகர், கீழவாசல் பகுதியை சேர்ந்த மக்கள் இலவச வீட்டு மனை கேட்டு மனு கொடுத்தனர். அவரால் அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. அதை ஒரே நாளில் நான் முடித்துக் கொடுத்துள்ளேன்.
இங்கு பேசிய அமைச்சர்கள், தென்மாவட்டத்திற்கு மட்டும் நான் நிறைய செய்வதாக கூறினர். நான் இந்தியாவுக்கே அமைச்சர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அல்லது திண்டிவனம் பகுதியில் எனது துறை சார்பில் புதிய தொழிற்சாலை விரைவில் துவக்கப்படும். ரூ.290 கோடியில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை புறநகரிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் கிடைக்க செய்ய கோரிக்கை விடுத்தேன். அது தொடர்பாக ஆய்வுப்பணி நடந்து வருகிறது. மக்கள் கொடுக்கும் எந்த கோரிக்கையாக இருந்தாலும் உடனுக்குடன் நிறைவேற்றுவதே எனது பணி. தொடர்ந்து நல்ல காரியங்களை செய்து வரும் எனக்கும், முதல்வருக்கும், அரசுக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அழகிரி பேசினார்.
விழாவில் காந்தி அழகிரி, தொழில்துறை முதன்மை செயலாளர் பரூக்கி, கலெக்டர் மதிவாணன், மாணிக் தாகூர் எம்.பி, எம்எல்ஏக்கள் மூர்த்தி, கவுஸ் பாட்சா, ராஜேந்திரன், லதா அதியமான், நன்மாறன், மாவட்ட ஊராட்சி தலைவர் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.