மேலும் 2 மாணவர்களுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு
பதிவு செய்த நாள்
7/30/2010 12:30:30 AM
நாகர்கோவில் : குமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பன்றி காய்ச்சல் வார்டில் மேலும் 2 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் பன்றி காய்ச்சல் பரவியது. அங்கிருந்து தமிழகத்திற்குள் வந்து செல்வோர் மூலம் குமரி மாவட்டத்திலும் சிலருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் வார்டில் 7 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 4 பேர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். இதில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 3 மாணவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, மேலும் 2 மாணவர்கள் தொடர் காய்ச்சல் காரணமாக பன்றி காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடைய ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தவிர கன்னியாகுமரி அடுத்த ஒசரவிளையை சேர்ந்த சபீமா (17), எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த ஹெப்சிபாய் (50), வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த மனோகரன் ஆகியோரும் பன்றி காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள்.
தற்போது பன்றி காய்ச்சல் வார்டில் மொத்தம் 9 பேர் உள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றும் மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது என்றும் மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.