தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
பதிவு செய்த நாள்
7/29/2010 12:49:13 AM
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதித்த 666 பேரிடம் இருந்து ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் பலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் ராஜேந்திர ரத்னூ கூறியிருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் மூலமாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் கண்காணிப்பு பணிகளும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன. உறுதி செய்யப்பட்டுள்ள நோயாளிகள் அனைவரின் வீடுகள் உள்ள பகுதிகளில் சிறப்பு குழுக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகள், கள ஆய்வும் நடத்துகின்றன.
டெங்கு காய்ச்சல் என சந்தேகப்பட்டு இருந்த 611 நபர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக குமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்துக்கும், நெல்லையில் உள்ள பூச்சியியல் குழுமத்துக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. பன்றி காய்ச்சல் என சந்தேகப்பட்டிருந்த 55 பேரிடம் இருந்து தொண்டை சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.
கொசுக்களை ஒழிப்பதற்காக 200 கிராமங்களில் புகைத்தெளிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நோய் கண்காணிப்பு பணிகளுக்காக 4 சுகாதார உதவி மேடைகள் (ஹெல்த் ஹெல்ப் டெஸ்க்) களியக்காவிளை, தக்கலை, நாகர்கோவில், கன்னியாகுமரி பஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு காய்ச்சல் கண்காணிப்பு பணி மூலமாக கேரளாவில் இருந்து திரும்பி வந்த 2,333 பேருக்கு ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் 3,32,000 விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன என்றார்.