சென்னை : புதிய சட்டப்பேரவை கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உள்பட 9 ஆயிரம் பேருக்கு, முதல்வர் கருணாநிதி நேற்று விருந்து கொடுத்து பாராட்டினார். சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த முதல்வர் கருணாநிதிக்கு, 2007ம் ஆண்டில் பொன்விழா கொண்டாடப்பட்டது. அப்போது, ‘தமிழக சட்டப்பேரவைக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்டமான புதிய கட்டிடம் கட்டப்படும்’ என்று கருணாநிதி அறிவித்தார். அதனை தொடர்ந்து, 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி புதிய சட்டப்பேரவை கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை வடிவமைப்பதில் இருந்து ஒவ்வொரு பணியையும் முதல்வர் கருணாநிதி நேரடியாக கவனித்து வந்தார். கட்டுமான பணிகள் இரவு பகலாக நடந்தது. கடந்த ஒரு மாத காலமாக முதல்வர் தினமும் கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார். சில நாட்கள் பல முறை சென்றார். கட்டுமான பணிகள் எப்படி நடக்கிறது என்று நள்ளிரவில் கூட பார்வையிட்டார். சட்டப்பேரவைக்கான 6 மாடி கட்டிடம் பிரமாண்டமாகவும் உலக தரத்துடனும் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து புதிய கட்டிடத்தை பிரதமர் மன்மோகன் சிங் 13ம்தேதி திறந்து வைத்தார். விழாவில் சோனியா காந்தி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திர முதல்வர் ரோசைய்யா, புதுவை முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய தலைவர்கள் முதல்வர் கருணாநிதியின் உழைப்பு குறித்து புகழாரம் சூட்டினர். பிரமாண்டமான சட்டப்பேரவை கட்டிடத்தின் கட்டுமான பணியில் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று அவர்களுக்கு, திறப்புவிழா நடந்த பந்தலிலேயே முதல்வர் கருணாநிதி பிரியாணி விருந்து கொடுத்தார். சட்டப்பேரவை திறப்பு விழா நடந்த மேடையில் தொழிலாளர்களை மகிழ்விக்கும் வகையில் சங்கமம் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொழிலாளர்களின் விருப்பப்படி ஹிந்தி பாடல்களும் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் உற்சாகமாக ஆடிப்பாடினர். அவர்களுடன் சேர்ந்து பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரமும் நடனமாடினார். பகல் 11.30 மணிக்கு முதல்வர் மேடைக்கு வந்தார். தொழிலாளர்களுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து பேசினார். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கட்டுமான நிறுவன அதிகாரிகளுக்கும் முதல்வர் நினைவு பரிசு வழங்கினார். அதன் பின்னர் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 6 ஆயிரம் பேர் உட்பட பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட போலீசார், பொதுப்பணித்துறை, மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தொழிலாளர்கள் என சுமார் 9 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து கொடுக்கப்பட்டது. தொழிலாளர்களின் உழைப்பை மதித்து, முதல்வர் விருந்து கொடுத்ததையும் அதில் அவரே கலந்து கொண்டதையும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.




