5 தனிப்படை அமைப்பு 50 பேரிடம் விசாரணை
பதிவு செய்த நாள்
11/24/2009 2:02:20 AM
சென்னை : முன்னாள் ஜனாதிபதியின் உறவுக்கார பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 50 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீதேவி அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் கஜபதி (74). இவரது மனைவி ஜெயலட்சுமி (65). இவர்களுக்கு 3 மகன்கள். எல்லாரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்.அமெரிக்காவில் வேலை செய்கின்றனர். சென்னை வீட்டில் முதிய தம்பதிகள் மட்டும் இருந்தனர்.கஜபதி நேற்றுமுன்தினம் மாலை வாக்கிங் சென்றுவிட்டார். வீட்டில் ஜெயலட்சுமி மட்டும் இருந்தார். அவர் திரும்பியபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஜெயலட்சுமி பிணமாக கிடந்தார். 15 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சி அடைந்து சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
கொலை குறித்து விசாரிக்க இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் திருஞானம், உதவி கமிஷனர் அதிவீரபாண்டியன், இன்ஸ்பெக்டர் குமார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட ஜெயலட்சுமி, முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் மற்றும் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஆர்.ராஜகோபாலனின் உறவினர் என்பது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: இந்த கொலை நடந்தது நகைக்காக அல்ல. வீட்டின் முன் அறையில் பீரோ உள்ளது. அதில் சாவி அப்படியே உள்ளது. பீரோவை கூட கொலையாளிகள் திறக்கவில்லை. அதில் நகை, பணம் அப்படியே உள்ளது. ஜெயலட்சுமி போட்டிருந்த நகைகள் மட்டுமே கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.மேலும்,கழுத்தை அறுத்து கொல்லவில்லை. கொலை செய்த பிறகே கழுத்தை அறுத்துள்ளனர். கால்களையும் அறுத்துள்ளனர்.
ரத்தம் அதிகமாக வந்து அறை முழுவதும் பரவியதால் பாதியிலேயே நிறுத்தியுள்ளனர். உடலை துண்டு துண்டாக வெட்டி வீச கொலையாளிகள் முதலில் முடிவு செய்திருக்கலாம். ரத்தம் அதிகம் வெளியேறியதால் பயந்து, கத்தியை போட்டுவிட்டு தப்பி இருக்கலாம்.மாலை 6 மணிக்கு கணவர் வந்து பார்த்த போதுதான் காலை பற்றி தெரிய வந்தது.போலீசார் வந்த போது உடல் விறைத்திருந்தது. இறந்து 6 மணி நேரத்துக்கு பிறகுதான் உடல் விறைக்கும் என்பதால் பகல் ஒரு மணிக்கு முன்பே கொலை நடந்திருக்க வேண்டும். பிற்பகல் 2 மணிக்கு வெளியே சென்றதாக கணவர் கூறியுள்ளார்.வழக்கமாக, தெரிந்தவர்கள் வந்தால்தான் ஜெயலட்சுமி கதவை திறப்பார். இதனால்,தெரிந்தவர்கள் வந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகே கொலை நடத்திருக்கலாம். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.