சீனா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி
பதிவு செய்த நாள்
11/21/2009 3:23:01 AM
காரைக்குடி: சீனா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தமிழக வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவில் பொதுவிநியோகத்திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்களுக்கு ஆண்டுதோறும் 2.72 கோடி டன் அரிசி தேவைப்படுகிறது. நடப்பாண்டில் வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்தது. அதேநேரத்தில் ஆந்திரா, கர்நாடகா பகுதியில் பெய்த அபரீதமான மழையால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. அதனால் நடப்பாண்டில் அரிசி உற்பத்தி 2.6 கோடி டன்னாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அரிசி விலை 63 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த பற்றாக்குறையை போக்க கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக அரிசி இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலக அளவில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, தாய்லாந்து நாடுகளில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இந்தியாவில் விளையும் அரிசி தரம் மற்றும் சுவை மிகுந்ததாக உள்ளது. பாகிஸ்தான், சீனா நாடுகளில் விளையும் அரிசி சற்று சுவை குறைந்ததாகவே இருக்கும்.
தாய்லாந்து நாட்டில் விளையும் அரிசி பெரிய ரகமாக இருக்கும். தற்போது வியாபாரிகளும் அரிசி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இறக்குமதிக்கு வரிவிலக்கும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை ரெட்ல்ஸ், காரைக்குடி புதுவயல், காங்கேயம், ஆரணி, விக்கிரவாண்டி, செஞ்சி பகுதிகளில் அதிகளவில் அரிசி ஆலைகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு நெல் மூடைகள் வர த்து குறைந்துள்ளது. அதனால் இப்பகுதி அரிசி ஆலை அதிபர்கள் பாகிஸ்தான், சீனா நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக அந்நாட்டு வியாபாரிகளிடம் மாதிரி அரிசி மூடைகளை வாங்கி வந்து சமைத்து சோதனை செய்து பார்த்து வருகின்றனர். விரைவில் இந்த நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து காரைக்குடியை சேர்ந்த அரிசி ஆலை அதிபர் ஒருவர் கூறுகையில், வழக்கமாக ரேஷன் விநியோகத்தை சமாளிப்பதற்கே அரிசி இறக்குமதி செய்யப்படும். தற்போது பொதுமக்கள் விநியோகிக்கவும் இறக்குமதி செய்து வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. காரைக்குடி பகுதியில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து வாங்கிய அரிசியை சோதித்து வரு கிறோம். அரிசி இறக்குமதி பற்றாக்குறையை போக்குவதாக மட்டுமே அமையும். அதனால் அரிசி விலை குறைய வாய்ப்பு இல்லை என்றார்.