SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குக்கிராமத்திலிருந்து ஒரு குயில்

2018-01-10@ 14:47:26

நன்றி குங்குமம் தோழி

ரஜினிகாந்தும் விஜய் சேதுபதியும் திரையில் ஜெயிக்க காரணம் அவர்கள் திறமை மட்டுமே இல்லை. நம் வீட்டு பிள்ளைகள் மாதிரியான ஒரு தோற்றம் நம் மனதிற்குள் ஏற்படுத்திய நெருக்கமும்தான். அது போலத்தான் நம்ம ப்ரித்திகாவும். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தன் இசைத்திறமையாலும் மண் மணக்கும் குரலாலும் பாடி ஆறு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நம் மனங்களை மட்டுமல்லாது உலகத் தமிழர்களின் மனதையும் கொள்ளை கொண்ட ப்ரித்திகாவிடம் பேசிய போது…
]
“ திருவாரூருக்குப் பக்கத்தில் இருக்கும் தியானபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். அண்ணன் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறான். அப்பா டிங்கரிங் வேலை பார்க்குறார். சின்ன வயசில் இருந்தே பாட்டு பாட, பாட்டுக் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் சின்ன வயசில் ஸ்கூல்ல தேசிய கீதம் பாடறப்ப எல்லாரும் சொல்வாங்க. “நீ நல்லா பாடற.

உன் குரல் நல்லா இருக்கு”ன்னு. ஒரு சமயம் டீச்சர்ஸ் சென்னையில் நடக்கிற பாட்டுப்போட்டிக்குப் போய் கலந்துக்க சொன்னாங்க. அம்மாவிடம் பேசினாங்க. அவங்க எல்லாரும் தான் பணம் உதவி பண்ணாங்க. ஆக்ஸில்லா வசந்தி மேம் பாட்டுக்களை டவுன்லோடு பண்ணிக்கொடுப்பாங்க. அதை நான் பயிற்சி எடுப்பேன். இப்படி எல்லாரும் எனக்கு உதவியா இருந்தாங்க. பல முறை முதல் இரண்டு ரவுண்டு வரை தேர்வாகி அதுக்குப் பிறகு தோத்துடுவேன்.

என்னோட குரலுக்காக செலக்ட் பண்ணுவாங்க. மற்றபடி அடுத்தடுத்த லெவல் போக எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனா முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தோம். கர்நாடிக் மியூசிக்கும் சரளி வரிசை வரைக்கும் கத்துக்கிட்டேன்.  நாலு வருஷமா முயற்சி பண்ணிட்டே இருந்தோம். நிகழ்ச்சியில் செலக்ட் ஆனவுடன் டாப் 25க்குள் வரணும்னு நினைச்சேன்.

என்னோட பெஸ்ட்டை கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்புறம்  ‘மன்னார்குடி கலகலக்க...’ பாட்டுப்பாடி வழக்கம் போல என் குரலுக்காக முதல் ரவுண்டில் செலக்ட் ஆனேன். எனக்கு நாட்டுப்புறப் பாடல்கள் நல்லா வரும். எனவே ஒரு லெவல் வரை போக் சாங்குகளை பாடி செலக்ட் ஆகி வந்து கொண்டிருந்தேன். நிறைய பயிற்சி பண்ணுவேன்.

செல்வம் சாரும் கலைவாணன் சாரும் எனக்கு ரொம்ப உதவியா இருந்தாங்க. ஆர்கெஸ்ராவுடன் பாடச் சொல்லித் தந்தாங்க. அப்படி கத்துக்கிட்டு நல்லா  ஜுரத்தோட ‘கும்கி’ படத்தில் வரும் ‘கையளவு நெஞ்சத்துல’ பாடலை நான் பாடிய போது எல்லாரும் எழுந்து நின்னு பாராட்டினாங்க. ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பிறகு நிறைய பேருக்கு தெரிய ஆரம்பித்தேன்.

அதற்குப் பிறகு வெஸ்டர்ன், கிளாசிக்கல் பாடல்களையும் பாட வேண்டி வந்தது. சாய் சரண் சாரும், அனந்த் வைத்யநாதன் சாரும் உதவி பண்ணாங்க. நான் தப்பு பண்ணும்போது திருத்தினாங்க. அதனால அந்த லெவல்களையும் என்னால கடக்க முடிந்தது. இந்தப் போட்டியில் 25 போட்டியாளர்களுள் ஒருவராகவாவது வரவேண்டும் என்று நினைத்த நான் வெற்றியாளரானது கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்.

“பட்டத்து ராணி பார்க்கும் பார்வை...” மற்றும் “கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு...” போன்ற பாடல்களை பாடி வெற்றிப்பெற்றேன். அதற்கு ரசிகர்களும் ஒரு காரணம். ஆறு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். நம்மள மாதிரி ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்கிற பாசமோ என்னவோ தெரியலை. மக்களோட சப்போர்ட்தான் இன்று நான் உலகம் முழுக்க தெரியக் காரணம்.

அதுமட்டுமல்ல என்னோட வெற்றிக்கு முழு முதற்காரணம் என்னோட அம்மா, அப்பா மற்றும் அண்ணன். சில நேரங்களில் நான் சென்னையில் தங்க வேண்டி இருக்கும். அப்ப அம்மாவும் உடன் இருப்பாங்க. அப்போது ஊரில் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் சாப்பாட்டுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். எங்க என்னால அண்ணனோட படிப்பு கெட்டுடுமோன்னு ரொம்ப பயந்தேன்.

எல்லாரும் எனக்காக தியாகம் செய்திருக்காங்க. என்னோட அப்பாவும் அம்மாவும் சில பாடல்களை எப்படி பாடணும்னு சொல்லித் தருவாங்க. அது மட்டுமில்லாமல் என்னோட டீச்சர்ஸ், ஃபிரண்ட்ஸ் எல்லாரும் உதவியா இருந்தாங்க. கிட்டதட்ட எட்டு ஒன்பது மாசம் கஷ்டப்பட்டோம். நாங்க பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் நல்ல பலன் கிடைத்தது. நம்ம ஊர் பொண்ணு ஜெயிச்சிட்டு வந்திருக்கு என எங்க ஊர் மக்களுக்கும் சந்தோஷம். நடுவில் போக முடியாமல் விட்டுப்போன கர்நாடக சங்கீதத்தை மறுபடி கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்.
 
நாங்க குடும்பமாக உட்கார்ந்து பேசும் போது ஃப்ளைட்டில் போவது பற்றி பேசுவோம். நம்மால முடியுமா என யோசிப்போம். ஆனா பாடகி சித்ரா மேடம் எங்களுக்கு குடும்பத்தோட ஃப்ளைட்டில் சென்னையில் இருந்து மதுரை போக டிக்கெட் எடுத்துக்கொடுத்தாங்க. போய்ட்டு வந்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத மொமன்ட் அது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சுபாம்மா என்னை நல்லா
என்கரேஜ் பண்ணாங்க.

நான் என்று இல்லை. எல்லா பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். எனக்குப் பாட்டு பாடற திறமை என்றால் அவங்களுக்கு டிராயிங் வரையிற திறமை இருக்கலாம். அவ ஏதோ கிறுக்கிறா என்று சொல்லாமல் அந்த பிள்ளையை தட்டிக்கொடுக்கணும். இது ஒரு உதாரணம் தான். இது மாதிரி வெவ்வேற திறமைகள் இருக்கும். அவங்களை பெற்றோர் ஊக்குவிக்கணும்.

பிள்ளைகளும் நம்மால முடியும்னு முயற்சி பண்ணணும். கொஞ்சம் முயற்சி பண்ணிட்டு தோல்வி வந்த உடன் முயற்சியை விட்டுறாங்க. ஆனால் அப்படி இல்லாம தொடர்ந்து முயற்சி பண்ணணும். அதுதான் நல்லது. தொடர் முயற்சிக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும். எனக்கு இந்த வயசில் கண்டுபிடிச்சிட்டாங்க. சிலருக்கு இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கலாம். ஆனா முயற்சியை மட்டும் கைவிடக்கூடாது”.
 
ப்ரித்திகாவின் அம்மா பொன் மலர் “எனக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும். பாட்டுக் கேட்டா கூட, கூட பாடிட்டு இருப்பேன். சின்ன வயசில பாடி பள்ளிக்கூடத்துல பரிசு வாங்கி இருக்கேன். அது மாதிரி பாப்பாவும் பாடிக்கிட்டு திரியும்போது நான் ஒண்ணும் பெரிசா கண்டுக்கல. அப்புறம் அவங்க டீச்சருங்க என்கிட்ட பேசினாங்க. அவங்க கிளாஸ் டீச்சர் ஆக்ஸில்லா வசந்தி மேடம் ரொம்ப உத்வேகம் கொடுத்தாங்க. உங்க பொண்ணு நல்லா பாடுறா. டிவி நிகழ்ச்சியில் பாடலாமேன்னு சொன்னாங்க.

சம்பளமே 500 ரூபாய் தான். சென்னைக்குப் போய்ட்டு வரணும்னா 1000 ரூபாய் ஆகும்னு இவர் சொன்னார். என்ன செய்வது என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்த போது டீச்சர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் செலவுக்கு பணம் கொடுத்தாங்க. உண்மையைச் சொல்லணும்னா அங்க போய் பாடகி களை, சினிமா பிரபலங்களை பார்த்துட்டு வரலாம்னு நினைச்சி சென்னைக்குப் போனேன். நம்பிக்கையில்லாம சும்மா தான் அவளை அழைச்சிட்டுப் போனேன். ஆனா முதல் ரவுண்டில் ப்ரித்திகா செலக்ட் ஆயிட்டா.

சாக்லெட்டோட  நான் செலக்ட் ஆயிட்டேன்னு சொல்லி சிரிச்சிக்கிட்டே அவ வந்த போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சுற்றி இருந்த எல்லாரும் அவளை விசாரித்த போது ரொம்ப பெருமையாக இருந்தது. ஆனால் அடுத்த ரவுண்டில் தோற்றுப் போயிட்டா. ரொம்ப வருத்தப்பட்டா. அப்ப தான் அவ இதில் எவ்வளவு ஆர்வமா இருக்கான்னு தோணிச்சி. அதோட சீரியஸ்னஸ் தெரிய ஆரம்பிச்சது. அதற்குப் பிறகு இந்த விஷயத்தில் ஜெயிக்கணும்னா பாட்டு கத்துக்கறது அவசியம்னு தோணுச்சு.

அப்ப அவளோட ஸ்கூல் மாஸ்டர் அன்பழகன் சார் தன் பொண்ணு பாட்டு கத்துக்கிற இடத்துல இவளும் கத்துக்க ஏற்பாடு பண்ணார். தினமும் சைக்கிளில் பெரிய குளம் கொண்டு விட்டு கூட்டிட்டு வருவேன். அப்ப ஒரு கடையில் நான் வேலை பார்த்துட்டு இருந்தேன். கொண்டு விட, மறுபடி கூட்டிட்டு வர என இரண்டு தடவை போக வேண்டி இருக்கும். வீட்ல தையல் வேலை பார்ப்பேன். அதனால “இது எதற்கு தேவையில்லாத இந்த வேலை”ன்னு கேட்பாங்க. இவங்க அப்பாவுக்கும் முதலில் இதில் எல்லாம் விருப்பம் இல்லை.

“ஞாயிற்றுக் கிழமையில ஏதாவது நல்லதா செஞ்சு சாப்பிட்டு வீட்ல ரெஸ்ட் எடுக்காம செலவு பண்ணிக்கிட்டு திரியறா” என்பார். ஆனால் அவளுக்கு ஆர்வம் இருந்தது. எனக்கும் இந்தப் பிள்ளை நல்ல நிலைமைக்கு வரும். விடக்கூடாதுன்னு தோணிச்சி. எங்க ளோட ஆர்வத்தைப் பார்த்துட்டு அவங்க அப்பா தான் வேலை பார்க்கும் இடத்தில் கடன் வாங்கி செலவுக்குப் பணம் கொடுப்பார்.

ஒவ்வொரு முறையும் முதல் அல்லது இரண்டாவது ரவுண்டு வரை செலக்ட் ஆயிட்டு மறுபடி தோத்துடுவா. ஊருக்கு வந்தா உங்க ரெண்டு பேருக்கும் இதே பொழப்பான்னு ஊர்ல எல்லாரும் திட்டு வாங்க. இதுக்கு மேலே கடனே வாங்க முடியாதுங்கற நிலையில் காதுல, மூக்குல ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாத நிலையில் மறுபடி என் மகளோட ஃப்ரெண்டு ஜனனியோட அம்மாதான் தெய்வம் மாதிரி வந்து ‘நான் பணம் தரேன் வாங்க’ன்னு சொல்லிக் கூட்டிட்டு போனாங்க.

ஐந்து பிள்ளைகளை கூட்டிட்டு மொத்தம் பத்து பேர் போனோம். வழக்கம் போல் முதல் ரவுண்டில் செலக்ட் ஆயிட்டா. ஆனால் இரண்டாவது ரவுண்டில் வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டுட்டாங்க. நானும் அவளும் ஒரே அழுகை. நல்லவேளையா அவ அந்த ரவுண்டிலும் செலக்ட் ஆனா. அதற்குப் பிறகு ஜனனியின் அம்மாதான் ஆர்கெஸ்ட்ரா குழுவினரிடம் போய் பாட்டு கத்துக்க வைக்கலாம்னு சொல்லி செல்வம் சாரிடம் கூட்டி போய் விட்டாங்க. நாகப்பட்டினம் வரை தினமும் பஸ்ல போகணும்.

ஒண்ணே கால் மணி நேரம் ஆகும். ஆர்கெஸ்ட்ரா குழுவினரும் நிலைமை தெரிஞ்சு இலவசமா பாட்டு கத்துத் தந்தாங்க. அப்புறம் சேனல்ல போக்குவரத்து செலவ ஏத்துக்கிட்டாங்க. அதுக்குப் பிறகு படிப்படியா ஒவ்வொரு ரவுண்டிலும் தேர்வாகி வந்தா. இன்னிக்கு அவ ஜெயிச்சது எங்களுக்கு மட்டுமல்ல ஊருக்கே பெருமையாத்தான் இருக்கு. ஆனா இது அவளோட தனிப்பட்ட வெற்றி இல்லை. அவங்க ஸ்கூல் டீச்சர்களும், நண்பர்களும், தெரிஞ்சவங்களும், அவளை ஊக்குவித்த ஜட்ஜஸும், மக்கள் என எல்லாருமே காரணம் தான். இவங்க எல்லாரும் இல்லைன்னா இந்த வெற்றி சாத்தியமே இல்லை.

இத்தோட என் பெண்ணின் கடுமையான உழைப்பும் இருந்தது. நைட், பகல்னு பார்க்காம ப்ராக்டிஸ் பண்ணுவா. லேட்டாகுது படும்மான்னு சொன்னா கூட முழுமையாக வரும் வரை பயிற்சி பண்ணிட்டு இருப்பா. கஷ்டப்படற அம்மா-அப்பாவை நல்லபடியா வைச்சு காப்பாத்தணும். அதற்கு எதாவது சாதிச்சாகணும் துடிச்சா என் மகள். இந்த மாதிரி ஒரு பிள்ளை யாருக்குங்க கிடைக்கும். இப்படி ஒரு பிள்ளை கிடைக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும்” என்று கண்ணீர் விடுகிறார். சற்று நேரத்துக்குப்பின்  “இது ஆனந்த கண்ணீர். இப்ப எங்க வாழ்க்கை மாறிடுச்சி” என்றபடி சிரிக்கிறார்.
 
பல பிரபலங்களின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பெற்ற ப்ரித்திகா இன்று உலகமறிந்தவராகிவிட்டார். அரசுப் பள்ளியில் படித்தாலும் நல்ல திறமையும் விடா முயற்சியும் இருந்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்பதற்கு ப்ரித்திகா ஒரு நல்ல உதாரணம். நிறைய குழந்தைகள் முன்னுக்கு வர வேண்டும் என ஊக்கமளிக்கும் இந்தப் பிள்ளை மேலும் வளர வாழ்த்துகள்.   
 
- ஸ்ரீதேவி மோகன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்