SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பிக்கையின் ஒளிக்கீற்று

2017-08-11@ 12:34:12

நன்றி குங்குமம் தோழி

-மகேஸ்வரி

உங்கள் தன்னம்பிக்கையின் அளவு குறைந்துவிட்டதா..? ரூபாவைப் பார்த்தால் போதும். தானாகவே எனர்ஜி லெவல் எகிற ஆரம்பிக்கும். ஆம்! தன்னம்பிக்கை நிறைந்த சிரிப்பழகி இந்த ரூபா. எப்போதும் மகிழ்ச்சி, சிரிப்பு... சிரிப்பு... சிரிப்பு... ஒரு மாற்றுத் திறனாளியாய் இருந்தாலும் அவரைச் சுற்றி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி ஓடிக்கொண்டே இருக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள இடத்தை தனக்கானதாக மாற்றி வைத்திருக்கிறார். நினைத்ததைச் செய்கிறார். விரும்பிய இடங்களுக்குச் செல்கிறார். சிரிக்கிறார். நிறைய சிந்திக்க வைக்கிறார்.

‘‘அப்பாவையும் சேர்த்து எனக்கு இரண்டு அம்மா. என் உடன் பிறந்தவர்கள் நான்குபேர். நான் ஐந்தாவது. எல்லாக் குழந்தையும்போல தவழ ஆரம்பிக்கும்போதே நான் சரியாகத் தவழவில்லை. என்னை கவனித்த என் பெற்றோர் மருத்துவர்களிடம் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். பிறவியிலே எலும்பு வளர்ச்சி எனக்கில்லை. இது ஒரு பிறவிக் குறை.

இதை நிவர்த்தி செய்ய முடியாது என கை விரித்திருக்கின்றனர். நாட்கள் வளர வளர நான் வளரவே இல்லை. கை கால் இரண்டிலும் முட்டி பகுதிகள் எனக்குக் கிடையாது. என் வளர்ச்சி தடைபட்டது. எலும்பு தொடர்பான அனைத்து மருத்துவரையும் அணுகியும் தீர்வில்லை. ஆயுர்வேத மருத்துவ முயற்சிகளும் பலன் தரவில்லை.

என் பிறப்பியல் பிழைக்கு தீர்வில்லை என்ற நிதர்சனத்தை என்னுடன் என் குடும்பத்தினரும் எதிர்கொண்டனர்” என்று முட்டிப் பகுதியற்ற அவரின் கை கால்களை நம்மிடம் காட்டுகிறார். பார்க்கும் நமக்கு மனம் பதறுகிறது. ‘‘பள்ளிக்கு யாராவது தூக்கிக் கொண்டுபோய் விடுவார்கள். மறுபடியும் தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் சேர்ப்பார்கள். எனக்கேற்ற வசதிகள் பள்ளிக்கூடத்தில் இல்லை.

அங்கிருந்த கழிவறைகள் என் உடல் நிலைக்கு உகந்ததாய் இல்லை. மாடிகளில் இருக்கும் வகுப்பறைகளுக்கு என்னால் படி ஏறிச் செல்ல முடியாத நிலை வேறு. ஐந்தாம் வகுப்புடன் என் பள்ளிப் படிப்பு முற்றுப் பெற்றது. 13 வயது வரை மெது மெதுவாக நடந்த நான் , உடல் எடை ஏற ஏற ஒரு கட்டத்தில் நடக்கவே முடியாத நிலையினை அடைந்தேன்” என்ற ரூபாவைச் சுற்றி அவரது நண்பர்களாக பைரவன்-வீரா என இரண்டு வளர்ப்பு நாய்கள், சீனு-மீனு என கிளிகள், சில லவ்பேர்ட்ஸ் என எப்போதும் சுற்றி வலம் வருகின்றன. பைரவனும்-வீராவும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற வரவேற்புடன் ரூபாவின் பாதுகாப்புப் படை வீரர்களாய் ‘எல்லையைத் தாண்டி நீயும் வராதே நானும் வரமாட்டேன்’ என மிரட்டுகிறார்கள்.

‘‘எழுதப் படிக்க முயன்று நானே கற்றுக்கொண்டென். நிறைய படிப்பேன். கவிதைகள், கதைகள் படிப்பது பிடிக்கும். கணிப்பொறி மேல் ஏற்பட்ட ஆர்வத்தால், தீவிர முயற்சி செய்து இயக்க கற்றுக்கொண்டேன். இணையம் இவ்வுலகை உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்திருக்கிறது. லேப்டாப், கம்ப்யூட்டர் விளையாட்டு, நண்பர்களுடன் சாட் என பொழுது கரைகிறது.

டிமேட் அக்கவுன்ட் ஓப்பன் செய்து, ஆன்லைன் ஷேர் மார்க்கெட் வழியாக பணத்தை இன்வெஸ்ட் பண்ணி டிரேடிங் செய்கிறேன்” என தன் லேப்டாப் வழி அனைத்தையும் இயக்கிக் காட்டுகிறார். ‘‘ஆன்லைன் பர்ச்சேஸ் மட்டும் எனக்கு பிடிக்காது. நேரடியாக கடைகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்வதுதான் எனக்கு பிடித்தமான விஷயம்” என்கிறார்.

‘‘நானும் நார்மலான பொண்ணுதான, என்னை மட்டும் ஏன் வித்தியாசமாக பார்க்கணும். எனக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு. என் ஆசைகளை நானே முயற்சி செய்து நிறைவேற்றிக் கொள்கிறேன்” என்கிறார். ‘‘நான் வயிற்றில் இருக்கும் போது குழந்தை வேண்டாம் என அம்மா மருந்து சாப்பிட்டதால் எனக்கிது நிகழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.

எனக்கு அது புரிந்தது. அதைப் பற்றி அம்மாவிடம் நான் பேசி அம்மா மனதை புண்படுத்த விரும்பவில்லை. நான் போக முடியாத இடத்திற்கு அம்மா எப்போதும் போக மாட்டார். ஏதாவது குடும்ப நிகழ்ச்சியாக இருந்தால் நான் இல்லாமல் அம்மாவும் அப்பாவும் அங்கே போக மாட்டார்கள். என் பிள்ளையை நான்தான் பார்ப்பேன் என என்னை அசராமல் தூக்கி சுமப்பார்கள்.

எல்லா குடும்ப நிகழ்ச்சிக்கும் என்னை அழைத்துச் சென்று உடன் வைத்துக்கொள்வார்கள். எங்கும் அழைத்துச்செல்ல மாட்டோம் எனச் சொல்லவே மாட்டார்கள். அம்மா இவ்வளவு தூரம் செய்ததால் வெளியில் செல்லும் தயக்கம் எனக்கு ஏற்பட்டதில்லை. அம்மாவுடன் நான் நிறைய பயணப்பட்டிருக்கிறேன். பெண்களின் மிக முக்கியமான பிரச்சனை மாதவிலக்கு.

அதுவும் எனக்கு சரியான பருவத்தில் நிகழ்ந்தது. 15 வயதில் பருவம் அடைந்தேன். முதலில் அம்மா வருத்தப்பட்டாங்க. பிறகு பாசிட்டிவா எடுத்துக்கிட்டாங்க. ரணம் நிறைந்த அந்த மூன்று நாளும், அப்பாவும் சேர்ந்தே எனக்கு உதவுகிறார். அவர் எந்த விதத்திலும் முகம் சுளித்ததில்லை. சின்ன வயதிலிருந்து எனக்குப் பார்த்ததால் அப்பா முகம் சுளித்ததே இல்லை.

அவரின் கவலைகளையும் என்னிடம் காட்டியதில்லை. அம்மா என்னை பார்க்க ஆள் வைத்ததே கிடையாது. அவர்களேதான் பார்ப்பார்கள். பத்து வருடங்களுக்கு முன் வீல் சேர் என்னிடம் இல்லை. அம்மாவும் அப்பாவும்தான் என் கைகால்களாக இருந்தார்கள். ஓராண்டுக்குமுன் என் அம்மா இறந்துட்டாங்க. அம்மாவுக்கு அல்ைஸமர் நோய் தொடர்புடைய டிமன்சியா எனும் மூளைச் சுருக்க நோய்.

ஐந்தாறு ஆண்டுகளாக அம்மா அந்த நோயால் அவதிப்பட்டார். எங்கள் இருவரையும் அப்பா தூக்கி சுமந்தார். என்னைப் பற்றி யோசித்து யோசித்து அம்மாவின் மனக்கவலை அதிகமாகி, அழுத்தம் மனதுக்குள்ளே அம்மாவிற்கு இருந்திருக்கிறது. அதை வெளிக்காட்டாமலே இருந்ததால், அது இந்த நோயில் அவரை கொண்டுபோய்விட்டது.

அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கத் தடுமாறும் நிலையினை அடைந்தார். மூன்று மாதங்கள் படுக்கையிலே இருந்தார். நானும் அம்மாவும் சேர்ந்து அப்பாவிற்கு இரண்டு குழந்தைகளானோம். அப்பா இருவரையும் சேர்த்தே முகம் சுளிக்காமல் கவனித்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை சாதாரண வீல் சேரில் ஒருவர் உதவியுடன் செல்வேன்.

ஒரு கண்காட்சிக்கு சென்றபோது, ரிமோட் மூலம் இயங்கும் இந்த வீல் சேரின் அறிமுகம் கிடைத்தது. இந்த வீல் சேர்தான் இப்போது எனக்கு மிகவும் உதவியாய் இருக்கிறது. எனது கை அருகே இருக்கும் இந்த பட்டனை அழுத்தினால் முன்னால் பின்னால், இடது, வலது, சுற்றுவது என எல்லா இயக்கமும் இதில் உள்ளது. ஒரு சின்ன டாய் காரை இயக்குவது மாதிரி எனக்கேற்ற மாதிரி செய்து தந்தார்கள்.

அதன் பிறகு எனக்கொரு புது வாழ்க்கை கிடைத்தது. நானே எனக்குப் பிடித்த மாதிரி எல்லா இடத்திற்கும் போகிறேன். யார் உதவியும் இன்றி வெளி உலகத்தை காண்கிறேன். எனக்கேற்றமாதிரி படியில்லாமல் என் வீட்டு அமைப்பை மாற்றி இருக்கிறோம். வீட்டில் சுவிட்ச் எனது உயரத்திற்கேற்ப கீழே பொருத்தப்பட்டிருக்கும். எனக்காக எதையும் செய்யத் தயாராக என் அப்பா உள்ளார்.

சன் மியூசிக் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அத்தனைபேரும் என் நண்பர்கள். அனைவருடனும் தொலைபேசியில் பேசி பிடித்த பாடலை போடச் சொல்லி கேட்டிருக்கிறேன். சன் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் அத்தனை பேருடன் நான் கலந்துகொண்டேன். பிரஜ்ஜன், அனிஷா, ரஞ்சித், கார்த்திக், அனுஷ், ஆனந்தக் கண்ணன், மகேஸ்வரி, லோகேஷ், வீணா, நி, மகாலெட்சுமி, லிங்கேஷ், கேமா சின்ஹா எல்லாரும் என் நண்பர்கள்.

லிங்கேஷ் என் வீடுவரை வந்து என்னோடு நட்பு பாராட்டினார். அவர் இப்போது ‘மெட்ராஸ்’ மற்றும் ‘கபாலி’யில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்கூட நான் மெரீனா சென்று கலந்து கொண்டேன். தசைச் சிதைவு நோயால் பாதிப்படைந்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட சேலம் ஆதவ் டிரஸ்ட் மோகன் என் நண்பர்.

அவர் மூலம் போலியோ மற்றும் தசைச் சிதைவு நோய்களால் பாதிக்கப்பட்ட சில மாற்றுத் திறனாளி நண்பர்கள் இணைந்த நட்பு வட்டம் முகநூல் மூலம் கிடைத்தது. தினமும் இணைய வழியாக குரூப் சாட், கான்ஃப்ரன்ஸ் கால் என என் பொழுது கரைகிறது. இணையம் வழி மாற்றுத்திறனாளி நண்பர்களுடன் பழகும்போது மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் நிறையவே கிடைக்கிறது.

அவர்களைப் பார்க்கத் தோன்றினால் உடனே கிளம்பிவிடுவேன். அப்பா டிரைவரையும் காரையும் கொடுத்து என்னை அனுப்பிவிடுவார். அப்பா - அம்மா இருவருடனும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளேன். எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப எல்லா இடங்களையும் வெளிநாடுகளில் எங்களுக்கு சிரமமின்றி வடிவமைத்திருக்கிறார்கள்.

நினைத்த இடங்களுக்கு எங்களாலும் அருகில் சென்று அனைத்தையும் ரசிக்க முடிகிறது. அட்வென்ஞ்சர் விளையாட்டான தீம்பார்க்கைக் கூட வெளிநாடுகளில் எங்களால் அனுபவிக்க முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் நிறைய இடங்களை பார்க்க ஆசையாக இருந்தாலும், உள்ளே சென்று ரசிக்க முடியாத அளவிற்கு படிக்கட்டுகளாக இருக்கும்.

எங்களைப் போன்றவர்களுக்கு உள்ளே செல்ல சரியான வசதிகள் இருக்காது. முக்கியமாக எங்களுக்கான கழிவறை வசதி கண்டிப்பாக இருக்காது. இதெல்லாம் எங்கள் பிரச்சனை. எங்களைப் போன்றவர்களையும் மனதில் இருத்தி எல்லா இடங்களையும் வடிவமைக்கலாமே” என்கிறார் மிகவும் ஆதங்கத்துடன் இந்த தன்னம்பிக்கை நாயகி.

‘‘எல்லா உணர்வுகளும் எனக்குள்ளும் உண்டு. ஆனால் நடைமுறையில் அவை சாத்தியமா? என் கற்பனையில் எல்லா வாழ்க்கையும் வாழ்ந்து விடுவேன். எப்படியெல்லாம் வாழ ஆசைப்படுகிறேனோ அப்படியெல்லாம், தூங்கும் முன் என் கற்பனை உலகத்திற்குள் சென்று வாழ்ந்துவிடுவேன். ஒரு நாள் போலீஸ் ஆபீஸர், மற்றோர் நாள் பத்திரிகையாளர், இன்னொருநாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்.

அட்வென்ஞ்சர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் சிபிஐ ஆபீசர்... அப்புறம் மிலிட்டரியில் கூட இருப்பேன். ஃப்ளைட் ஓட்டுவேன்... பறப்பேன்... கற்பனை… கற்பனை...கற்பனை... என் வாழ்க்கை அழகான கற்பனையும், கனவுகளும் நிறைந்தது. நான் எதையாவது விரும்பினால் அம்மா- அப்பா, உடன் பிறந்தவர்கள் உன்னால் முடியாது வேண்டாம் என மறுப்புச் சொன்னதே இல்லை.

போ... செய் என சுதந்திரம் தருவார்கள். நான் நினைத்துவிட்டால் அதை உடனே அப்பா செய்யச் சொல்லுவார். அம்மா இருந்தவரை அம்மா என்னுடன் வருவார். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் நான் தனியாகவே போகிறேன். என் நண்பர்களை சந்திக்கிறேன். எனக்குப் பிடித்த வாழ்வை தனியாகவே வாழ்கிறேன்.

சமீபத்தில் என் அப்பாவிற்குப் பதிலாக மதுரை வரை சென்று இடம் விற்பனை தொடர்பான வேலை ஒன்றை முடித்துவிட்டு வந்தேன். வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது அதிகம் தண்ணீர் குடிப்பதில்லை. உணவையும் குறைப்பேன். என்னாலும் தனியாக போக முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்கு மகிழ்ச்சி தருகிறது. பாதிக்கப்பட்டவள் என்றே மற்றவர்கள் யோசனையில் நான் இருப்பது எனக்கு சுத்தமாக பிடிக்காது” என்கிறார் தெளிந்த சிந்தனையுடன்.

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து என்னை மாதிரியான ஒரு குழந்தையை சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து சரி செய்தார்கள். அந்தத் தகவல் கிடைத்ததும், நானும் அப்பாவும் அங்கு சென்று டாக்டரை அணுகினோம். ஸ்பைனல் கார்டு ஆபரேசன் என்பதால் என் வயது காரணமாக உயிருக்கு உத்தரவாதம் இல்லை என மருத்துவர் அனுமதிக்கவில்லை” என்கிறார் சற்று ஏக்கமாக.

‘‘என் ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் ஃப்ரண்ட் எனக்கு அப்பாதான். நிறைய சண்டை போடுவோம், அப்புறம் சேர்ந்துக்குவோம். சினிமா, அரசியலென எல்லாவற்றையும் அப்பாவிடம் நிறைய நிறைய விவாதிப்பேன். ரூபா தைரியமானவள்... எல்லாவற்றையும் அவளே பார்த்துக்கொள்வாள் என்ற எண்ணத்தையே நான் அப்பா மனதில் என்னைப் பற்றிய பிம்பமாக விதைத்திருக்கிறேன். அவரின் சிந்தனையும் அதுவே. நம்பிக்கையுடன் எங்கள் இருவர் வாழ்க்கையும் நகர்கிறது” என்று விடை தருகிறார் மிஸ் தன்னம்பிக்கை.

தாயுமானவர்
ராஜேந்திரன், ரூபாவின் தந்தை
ரூபா இங்க் என்ற பெயரில் அச்சுத் துறைக்குத் தேவையான வண்ண இங்க் மற்றும் திருமணப் பத்திரிகைக்குத் தேவையான பிரின்டிங் இங்க் தயாரிக்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், ரூபாவின் தந்தையுமான ராஜேந்திரன் கையில் காசில்லாமல் தன்னம்பிக்கையோடு சென்னைக்கு ரயில் ஏறியவர்.

படிப்பு குறைவு என்றாலும் உழைப்பு, தன்னம்பிக்கை, தொழில் மேல் உள்ள ஆர்வம் எல்லாம் இந்த அளவு உயர்த்தியிருக்கிறது. ரூபாவை கட்டிலில் இருந்து தூக்கி அவரின் நாற்காலியில் அமர வைப்பது, உணவு ஊட்டுவது என ரூபாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாயாய் நிற்பது என தாயுமானவராய் பிரமிப்பில் நம்மை ஆழ்த்துகிறார்.

படங்கள்: ஆர்.கோபால்தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • trump1_putin_met

  ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

 • noida_building_collapse123

  நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

 • 18-07-2018

  18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • YosemityNationalPark

  கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

 • madhyapradeshrain

  மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்