SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Thanks for 90 votes...

2017-05-18@ 15:17:00

நன்றி குங்குமம் தோழி

பெண்களின் உடல் கவர்ச்சிப் பொருளாக மட்டுமே பார்க்கப் பட்டு வரும் நிலையில், தன் உடலையே ஆயுதமாக்கி போராடியவர் இரோம் ஷர்மிளா. எந்த மண்ணின் மக்களுக்காக 16 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் இளமையை தொலைத்துப் போராடினாரோ, அதே மக்கள்தான் ஷர்மிளாவின் நம்பிக்கையை கொன்றிருக்கிறார்கள். மக்கள் மீது நம்பிக்கை வைத்து போட்டியிட்ட இரோம் ஷர்மிளா, விரக்தியில் கண்களில் கண்ணீர் பனிக்க, தனது முகநூல் பக்கத்தில் ‘அந்த 90 பேருக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். அவரது பதிவினை பார்க்கும் அனைவருக்கும் மனசு கனத்துத்தான் போகிறது.சமீபத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின, மணிப்பூரில் ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு’ எதிராக 16 ஆண்டுகளாக தன் உடலை ஆயுதமாக்கி, தன்னையே வருத்தி, உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திய இரோம் ஷர்மிளா, மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் இபோபி சிங்கை எதிர்த்து தவுபால் தொகுதியில் போட்டியிட்டார்.

யாரும் சற்றும் எதிர்பார்க்க முடியாத வகையில், வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்த இரோம் ஷர்மிளா, டெபாசிட்டையும் இழந்தார். தேர்தல் முடிவு குறித்து  வருத்தம் அடைந்த அவர், இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறியதுடன், ‘தேர்தலில் தோல்வியடைந்ததற்காக நான் வெட்கப்படவில்லை, தேர்தல் எனக்கு சலித்துவிட்டது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.தேர்தலில் இனி போட்டியிடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், தனது கட்சியான ‘மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி’ உயிர்ப்புடன் செயல்படவேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார். அது நிகழ்ந்தது 2000ம் ஆண்டு. அச்சுறுத்தும் இறைச்சலுடன் பச்சை நிற வண்டி ஒன்று வந்து நிற்கிறது. அதிலிருந்த அஸ்ஸாம் ரைஃபில்ஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சிலர் தட...தட...வென கையில் துப்பாக்கிகளை ஏந்தி ஓடி வருகின்றனர்.

அப்போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சில இளைஞர்களை நோக்கி,அந்த ராணுவ வீரர்கள்  துப்பாக்கியால் சுட ஆரம்பிக்கின்றனர். நின்று கொண்டிருந்த 10 பேரும் அநியாயமாகப் பலியாகினர். பத்து இளைஞர்களின் உயிரற்ற உடல் தரையில் பொத் பொத்தென்று விழுகிறது. ரத்தம் ஆறாக ஓட, இந்தக் காட்சிகளை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 28 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் நேரில் பார்க்கிறார்.ஏன்..? எதற்கு என்றே தெரியாமல், கண நேரத்தில் அவர் கண் முன் நிகழ்ந்த படுகொலையில், உயிர்கள் செத்து விழுவதைப் பார்த்து பதை பதைக்கிறார், கதறித் துடிக்கிறார். கொதித்து எழுந்த அந்த இளம் பெண், சிறப்பு ராணுவச் சட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் குதிக்கிறார்,  அப்போது மனித உரிமைக்கான அமைப்பான ‘ஹியூமன் ரைட்ஸ் அலர்ட்’ என்ற அமைப்பில் தற்காலிகமாக பணியாற்றிக் கொண்டிருந்தவரும் கவிஞருமான இரோம் ஷர்மிளா அல்லது இரோம் ஷானு ஷர்மிளா.

தீவிரவாத நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தை ஆயுதம் ஏந்தி நடத்தவில்லை, தன் உடலை வருத்தும் பட்டினிப் போராட்டமாக நடத்தினார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, தொடர்ந்து 16 ஆண்டுகளாக நடத்தி முடித்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி துவங்கிய அவரது போராட்டம் 2016 ஆகஸ்ட் மாதத்தில் முடிவிற்கு வந்தது.மணிப்பூர், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, அருணாசலப் பிரதேசம், மிசோரம் எனும் 7 வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகளை கட்டுப் படுத்த என்று கூறி 1958ல் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, சந்தேகத்தின் பேரில் ராணுவம், யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்.

அது குறித்து எந்த நீதிமன்றத்திலும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்ற சிறப்பு அதிகாரம் ராணுவத்திற்கு வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ராணுவம் அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதாகவும், பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில்தான், 2000ம் ஆண்டு நவம்பரில் மணிப்பூர் மலையம் பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட 10 பேரை இந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தித்தான் சுட்டுக்கொன்றது இந்திய ராணுவம்.எங்கோ ஓரிடத்தில் உள்ள ராணுவ முகாமில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவம் நிகழ்த்திய இத்தாக்குதலில், கொல்லப்பட்ட 10 பேரில் ஒருவர் கூடத் தீவிரவாதி இல்லை என்பதுதான் மிகவும் வருத்தமான செய்தி. இந்த அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், இதற்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தார் ஷர்மிளா.

முடிவாக, உணவு மற்றும் நீர் உண்ணா போராட்டத்தை ஆரம்பித்தபோது, அவருக்கு வயது 28. ‘ஆயுதப்படைக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்த மண்ணிலிருந்து திரும்பப் பெறும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன்’ என்ற ஷர்மிளாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருக, பல மகளிர் அமைப்புகள் அவரோடு சேர்ந்து கொண்டன.

இந்நிலையில் அரசாங்கம் பல விதங்களில் அவரது குடும்பத்தினரைப் பயமுறுத்தி போராட்டத்தை கைவிடுமாறு ஷர்மிளாவை அச்சுறுத்தியது. ஆனால் அவர் எந்த அச்சுறுத்தலுக்கும் மசியவில்லை. ஷர்மிளாவுக்கு ஆதரவும், அரசுக்கு எதிர்ப்பும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. மனித உரிமை மீறலுக்கு எதிராய் உண்ணாவிரதம் இருந்த ஷர்மிளா, தற்கொலைக்கு முயன்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டு, மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் மருத்துவமனையில் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டார்.தினந்தோறும் மூக்கின் வழியாக செயற்கை திரவ உணவு செலுத்தப்பட்டு அவரது உயிர் அரசால் கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து தக்கவைக்கப்பட்டது. உண்ணாவிரதம் ஆண்டுக் கணக்கில் நீண்டது. ஷர்மிளாவின் உள்ளுறுப்புகள் பலமிழந்தன. உடல் மிகவும் தளர்ந்தது. மாதவிலக்கும் நின்றுவிட்டது. உதட்டில் தண்ணீர் படக்கூடாது என்பதற்காக பஞ்சின் மூலம் பற்கள் சுத்தம் செய்யப்பட்டது.

தலை முடி சீவுவதில்லை, செருப்பு அணிவதில்லை, கண்ணாடி பார்ப்பதில்லை. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வரும் தன் உடல் நிலை கண்டு வருந்தும் நண்பர்களிடம் அவர் தனது நிலைப்பாட்டின் உறுதியினை தொடர்ந்து காட்டி வந்தார். 2016 ஆகஸ்டில் உண்ணாநிலை போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்த போது அவரின் வயது 44. ராணுவச் சட்டத்திற்கு எதிராய், தன் இளமையையும் சேர்த்தே தொலைத்த ஷர்மிளா, மணிப்பூரின் முன்னேற்றத்துக்காக அரசியல் கட்சி தொடங்கப் போவதாக தெரிவித்தார்.‘மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி’ என்ற பெயரில், புதிய கட்சி ஒன்றையும் துவங்கினார். மணிப்பூரில் மாநிலக் கட்சியாக இக்கட்சி செயல்படும் எனவும் கூறினார். இந்நிலையில்தான் நடந்து முடிந்த மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தன் கட்சி சார்பில் வேட்பாளராக நின்று போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

மக்கள் பிரச்சனைகளைப் பேச அரசியல் களம் காணும் உண்மையான போராளிகளுக்கு, மக்கள் ஆதரவு காட்ட மறுப்பது வலி மிகுந்தது. தனது தேர்தல் பிரசாரத்தின்போது, தான் தேர்தலில் எந்தவித பணபலமும் இன்றி போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார் இரோம் ஷர்மிளா. பணபலம் இன்றி போட்டியிடுபவர்களின் நிலை இதுதானோ?மருத்துவமனை சிறையிலிருந்த தன்னை தன் தாய் பார்க்க வந்தால் அவர் கண்ணீரைப் பார்த்து எங்கே மனம் மாறிவிடுவோமோ என்று எண்ணி போராட்டம் துவங்கிய நாளில் இருந்து போராட்டம் முடியும்வரை தாயைப் பார்க்க இரோம் ஷர்மிளா விரும்பவில்லை. தன் லட்சியத்தை அடையாமல் அம்மாவைப் பார்க்க மாட்டேன் என்று ஷர்மிளா உறுதியாக இருந்தார். தனது மகளைப் பார்க்க மனபலம் இல்லாமல் ஷர்மிளாவின் தாயார் சக்திதேவியும் விலகியே இருந்தார்.ராணுவத்தின் The Armed Forces (Special Powers) Act or AFSPA எனப்படும் சட்டம் என்பது, இந்தியாவில் மணிப்பூர் உள்பட சில மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது. யார் மீதாவது சந்தேகம் எழுந்தால்... ஏன்... என்னவென்று விசாரிக்காமல் சுடலாம். அது 12 வயது சிறுவனாக இருந்தாலும் கூட பின்விளைவுகளை பற்றி ராணுவம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

-மகேஸ்வரி


பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

  • TripleTALAQ

    மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது செல்லாது! : உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு வழங்கியது

  • phiLDAYAVill42padukaYAM

    ஃபிலடெல்ஃபியாவில் ரயில் விபத்து : 42 பேர் படுகாயம்

  • tHREEboyresucedITALY

    பூகம்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்த 3 சகோதரர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்