SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

”நம்ம பாட்டெல்லாம் கேள்விஞானம்தான்”

2017-04-21@ 14:13:09

நன்றி குங்குமம் தோழி

கொல்லங்குடி கருப்பாயி - ஒரு காலத்தில் இவர் பெயர் அறியாதவர்களே கிடையாது. நாட்டுப்புறப் பாடல்களுக்கென்று தனி புகழைப் பெற்றுத் தந்தவர். ஒரு வகையில் புஷ்பவனம் குப்புசாமி, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் போன்ற பலருக்கும் முன்னாலேயே நாட்டுப்புறப் பாடல்களை தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தவர். வித்தியாசமான மண்ணின் மணம் வீசும் குரலுக்குச் சொந்தக்காரர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அகில இந்திய வானொலியில் நாட்டுப்புறப் பாடல்கள் பாடியிருக்கிறார்.அறிவொளி இயக்கத்தில் பல கிராமங்களுக்கும் சென்று பாடியிருக்கிறார்.

1985ல் இயக்குனர் பாண்டியராஜன் ‘ஆண் பாவம்’ படத்தில் இவரை திரையில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சில படங்களில் நடித்த இவருக்கு, தமிழக அரசின் கலைமாமணி விருதும் 1993ல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொஞ்ச காலமாக அவர் வெளியில் எங்கும் தலைகாட்டவில்லை.இப்போது எப்படி இருக்கிறார் கொல்லங்குடி கருப்பாயி? சிவகங்கை மாவட்டம், மதுரை - தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்துக்கு அவரைத் தேடிச் சென்றேன். ஒரு மாலை வேளையில் சந்தித்தபோது, உற்சாகம் பொங்க, ஆடலும் பாடலுமாக பேசினார்.

‘ஆண் பாவம்’ படத்தில் பார்த்த அதே தோற்றத்தில் சற்றும் உடல் தளர்வின்றி தெம்புடன் இருக்கிறார் கொல்லங்குடி கருப்பாயி. உங்களுக்கு என்ன வயது எனக் கேட்டபோது, வயதைப் பற்றி தெளிவாகச் சொல்லத் தெரியாத வெள்ளந்தியாகச் சிரிக்கிறார். பிறந்த தேதி, மாதம், கிழமை என எதுவும் அவருக்குத் தெரியவில்லை.

“கெழவி கெழவி செத்துப்போ… கெழவா கெழவா செத்துப்போ…” என கம்பீரக் குரலால் பாடத்தொடங்கிய அவரை இடைநிறுத்தி எப்படி உங்களுக்கு சினிமா வாய்ப்பு வந்தது எனக் கேட்டபோது, ‘‘திருச்சி வானொலியில் கிராமியப் பாடல் பாட ரெக்கார்டிங் போவேன், அப்போது ‘ஆண் பாவம்’ படத்தோட மேனேஜர் இளங்கோ என்கிட்ட, படத்தில் பாட்டி வேஷம் ஒண்ணு இருக்கு. அதில் நீங்கதான் நடிக்கணும்னு பாண்டியராஜன் சார் விரும்புறார்னு சொல்லிக் கேட்டார்.

முதல்ல பயந்தேன். நடிப்பு பத்தி எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லி முடியாதுன்னு சொல்லிட்டேன். ஆனால்  சென்னை வானொலி நிலையத்துக்கு ரெக்கார்டிங்கிற்கு நான் வந்தபோது நடிகர் பாண்டியராஜன் என்னை சந்தித்து, நடிக்கச் சொல்லிக் கேட்டார். நல்ல வார்த்தை பேசித்தான் நடிப்பேன். கெட்ட வார்த்தை பேசி நடிக்க மாட்டேன். கே.பி. சுந்தராம்பாள் மாதிரி கேரக்டர்னா நடிக்க வரேன்னு சொன்னேன். பாண்டியராஜன் தம்பி என்கிட்ட ‘நீங்க வி.கே.ராமசாமிக்கு அம்மா, எனக்கும், பாண்டியனுக்கும் பாட்டி, நல்ல வார்த்தைகள்தான் உங்கள பேச வைப்போம்’னு சொன்னார்.

பிறகு நாகர்கோவிலில் படப்பிடிப்பில் கலந்துகிட்டேன். “எனக்கு அப்போ சூட்டிங், நடிப்பு, டேக் எதுவும் தெரியாது. திக்குமுக்காடி முழித்தேன். என்னைப் பெத்த ராசா வி.கே.ராமசாமி என்னைப் பார்த்து, ‘அம்மா… வாங்க.. வாங்க.. இப்பத்தான் வந்தீகளா? சாப்புட்டீகளா? சாப்புடுங்க... சாப்புடுங்க… அம்மாவக் கூட்டிப்போயி சாப்பாடு போடுங்க’ ன்னு சொன்னார்” என்று வி.கே. ராமசாமி குரலில் பேசிக் காட்டுகிறார்.

இனி அந்த ராசாவோட எல்லாம் என்னால நடிக்க முடியுமா என அவரை நினைத்து கொஞ்சம் கண்கலங்கியவர், சட்டென நடிகர் பாண்டியனையும் நினைத்து அழுகிறார். ‘‘இனி இவுக கூடவெல்லாம் என்னால நடிக்க முடியுமா? பாண்டியன் இறந்த சேதி கேட்டு அன்னைக்குப் பூராம் சோறு தண்ணியில்லாமல் அழுதேன்” என்றவர் தொண்டை கமர அழத் துவங்கினார். இனி இந்த மாதிரி ஒரு படப்பிடிப்பு, இதுபோல ஒரு படக் குழு சேருமா, திரும்ப நடக்குமா? எப்பவும் பாட்டு, சிரிப்பு, சிரிப்பு தான். எது பேசுனாலும் சிரிப்புதான் என்கிறார்.

‘‘மொத நா சூட்டிங்ல என் தொடை, கால் எல்லாம் நடுங்கி வெடவெடத்து ஆடிருச்சு. குரங்கை கொண்டுபோயி ராஜமுழி முழிக்கச் சொன்னா எப்படியிருக்கும் அப்படி இருந்துச்சு” என்கிறார் உடல் அதிர சிரித்துக்கொண்டு பழைய நினைவில் மூழ்கியவராய். ‘‘சூட்டிங்கில் கருப்பு கருப்பா குழாய் குழாய்யா இருந்துச்சு, வயரா போச்சு” என்று வாய் விட்டு சிரிக்கிறார். ‘‘கேமராவைப் பார்த்தால் எனக்கு பயமா இருந்துச்சு.

கண்ணெல்லாம் கூசிருச்சு. டேக் எடுக்காதீங்கன்னு சொன்னாங்க. எனக்கு டேக்குன்னா என்னென்னே தெரியல” என்றவர் சட்டென அவரின் குரலை மாற்றி பழைய நடிகர் பாலையா குரலில், ‘விட்டியப்பன் இன்னைக்குத்தான் சிக்கிக் கொண்டான்…’ மாதிரி சூட்டிங்கில் மாட்டிக்கிட்டேன்” என்கிறார் உரக்கச் சிரித்து. ‘‘கிராமத்துல பொறந்தவ. படிக்காதவ நான்.திடீர்னு எனக்கு வந்த வாய்ப்பு இந்த நடிப்பு.
பாடுவதில் முன்னணியில இருந்த நாம் நடிப்புல சரியா வருவோமான்னு பயந்துகிட்டே நடிச்சேன். மொத நாளு நான் இந்தப் பாட்டுத்தான் பாடினேன்...” என்றவர் “பேராண்டி…பேராண்டி… பொண்ணு மனம் பாராண்டி…வண்டி கட்டி போனான்டி... இரண்டும் கெட்டு ஆனான்டி…” என்ற பாடலை கணீர் எனப் பாடுகிறார் பாட்டோடு சேர்ந்து நடிப்பும் குதியாட்டமும் அவருக்கு இயல்பாகவே வருகிறது. தொடர்ந்து வேற பாடலுக்கு தாவியவர்

“காள... வயசுக் காளை…
கண்ணாடி நினைப்புக் காளை…
நினைப்பை எல்லாம் மேயவிட்டு…
சொக்கி நிக்கும் மயிலக்காளை…
பரிசம்போட போன பொண்ணு
உன் மனசுக்குள்ள நிக்கிறாளா?”

என அசால்டாக வார்த்தைகளை போட்டு ரசித்து படிக்கிறார். இந்தப் பாடல்களை எல்லாம் எப்படித் தெரியும் என்ற நம் கேள்விக்கு, தன்னம்பிக்கையோடு அவர் சொன்ன பதில்,‘‘எனக்கு கேள்விஞானம். ஞாபக சக்தி ரொம்ப அதிகம். சொல்லித் தர்றதைக் கேட்டு அப்படியே படிப்பேன். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பூரா கேள்விஞானம்தான்” என்கிறார் தன்னம்பிக்கை நிறைந்தவராய். ‘‘ஆறு ஏழு வயசுல இருந்து பாடத் தொடங்கியாச்சு.வயக்காட்டுல, வரப்பு மேட்டுல, குளத்துல, கோயில் திருவிழாவுல அப்படின்னு நடக்கிறதெல்லாத்தையும் அசை போட்டுக்கிட்டே இருப்பேன். நானே வார்த்தைகளைத் தேடிப் போட்டு பாடிக்கிட்டே இருப்பேன். கல்யாணம் ஆன பிறகு என் வீட்டுக்காரர்தான் எல்லாத்தையும் எனக்கு சொல்லிக் கொடுப்பார் என் ராசா” என்கிறார், கணவரின் நினைவில் மூழ்கியவராய்.

சொந்த மாமா மகனை திருமணம் செய்து கொண்டார். ‘‘அவரு ரொம்பப் படிச்சவரு. ஆனால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடையாது. ரேடியோல பாட அவருதான் என்னைய கூட்டிக்கிட்டுப் போவாரு. எனக்கு எல்லாத்தையும் சொல்லிக்கொடுப்பாரு. ரெண்டு பேரும் ரெக்கார்டிங் முடிஞ்சு மதுரை ரோட்டுல நடந்து வந்துக்கிட்டு இருந்தப்போ, எதிருல வந்த வண்டி மோதி ஆக்சிடென்ட்ல என் கண் முன்னாலே போய்ச் சேர்ந்துட்டார்.

அதில் என் மனசு ரொம்ப பாதிக்கப்பட்டிருச்சு” என்றவர், தன் கணவரை நினைத்து கண் கலங்கி அழுகிறார். ‘‘என்னை ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. பிழைச்சுக்கிட்டேன். ஆனா நானும் செத்துட்டேன்னு நியூஸ்பேப்பர்ல எல்லாம் செய்தி வந்துருச்சு. நான் உயிரோட இல்லைன்னு நினைச்சு எனக்கு வரவேண்டிய நடிப்பு வாய்ப்பு எல்லாம் கூட வராமப் போயிருச்சு. அவர் போன பின்னால நான் வருமானம் இல்லாம வீட்டுக்குள்ள முடங்கிட்டேன்.

எனக்கு குழந்தை இல்லாததால் என் தம்பி மகளை குழந்தையா வளர்த்தேன். அவளுக்காக வேலை கேட்டு சிவகங்கை கலெக்டரைப் பார்க்கப் போனேன். அப்போ அங்கிருந்த ஒரு பத்திரிகையாளர் என்னை பார்த்துவிட்டு, நான் உயிரோடு இருக்குறதையும், வருமானமில்லாம கஷ்டப்படுறதையும் செய்தியா வெளியிட்டார். என்னைப் பற்றிய செய்தி நிறைய பத்திரிகைகள்ல வெளியாச்சு.உடனே நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் தம்பி, நடிகர் சங்க உறுப்பினர் அட்டை குடுத்து, எனக்கு உதவித்தொகையும் நடிகர் சங்கத்தில் இருந்து வாங்கித் தர்றதா சொன்னார். விஷால் தம்பி 160, 170 வயசு வாழணும். அவருக்கு நன்றி சொல்லணும். ஆனால் அவரு நம்பரை என்னால வாங்க முடியலை” என்கிறார். தொடர்ந்து ‘‘நாசர் தம்பி, விஷால் தம்பி, கார்த்தி தம்பி எல்லாரும் நல்லா இருக்கணும்” என கையெடுத்து கும்பிட்டு, மனப்பூர்வமாக வாழ்த்துகிறார்.

அவரது வருமானம் பற்றிய நம் கேள்விக்கு நலிந்த கலைஞர்களுக்கு கிடைக்கும் உதவித் தொகை 1500 மற்றும் நடிகர் சங்கம் மூலம் வரும் உதவித் தொகை இவைகளை கொண்டு காலத்தை ஓட்டுவதாக அவருடைய சிறிய ஓட்டுவீட்டைக் காட்டியபடி சொல்கிறார். வறுமையில் அவர் வாழ்வது, அவரது குடியிருப்பான அந்த சிறிய வீட்டை பார்க்கும்போதே நமக்குப் புலப்படுகிறது. தமிழக அரசிடம் அவர் பெற்ற கலைமாமணி விருதை பற்றிக் கேட்டபோது,  ‘‘விருது வாங்க சென்னைக்கு வரச்சொன்னாங்க, போனேன்.

ஜெயலலிதா அம்மா என் கையைப் பிடிச்சு, ‘உங்க பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்லா பாடுறீங்க, உங்களுக்கு என்ன வேணும்’னு கேட்டாங்க. எங்க ஊரு பள்ளிக் கூடத்திற்கு பட்டா கொடுங்கன்னு கேட்டேன்’” என்கிறார் தனக்கென்று எதுவும் கேட்கத் தெரியாத, கிராமத்து வெள்ளை மனம் கொண்டவராய். ‘‘நான் ஊர் வந்து சேருவதுக்குள்ள, பள்ளிக்கூடத்துக்கு பட்டா வந்துடுச்சு” என்கிறார், அதைப் பற்றிய எந்த வியப்பையும் காட்டத் தெரியாதவராக.

அகில இந்திய வானொலியின் முப்பதாண்டுகால நாட்டுப்புறப் பாடகி, சிவகங்கை மாவட்ட முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் குத்ஷியா காந்தி காலத்தில் அறிவொளி இயக்கத்தில், விழிப்புணர்வு பாடல்களைப் பாடி பட்டிதொட்டிகளில் புகழடைந்தவர், திரைப்பட நடிகை என பல தளத்தில் இயங்கி, நாம் அனைவரும் அறிந்த, ஒரு கிராமியக் கலைஞர் வாழ்க்கை இன்று, தனிமையிலும், முதுமையில் கடந்து கொண்டிருக்கிறது.மீண்டும் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்ற நம் கேள்விக்கு, ‘‘நிச்சயமாக நடிப்பேன்” என்கிறார்.

அதற்கான உடல் மொழியும், உடலுறுதியும், குரல் ஒலியும் சற்றும் இளைக்கவில்லை அவரிடம். விடைபெறும்போது ‘‘உங்களை தொடர்பு கொள்ள கைபேசி எண் இருக்கிறதா பாட்டி” என்ற நம் கேள்விக்கு, அவரது ஓட்டு வீட்டின் சிறிய கல்தூணை காட்டுகிறார். அதில் ‘‘கொல்லங்குடி கருப்பாயி - 8489197316” என்ற எண்கள் எழுதப்பட்டிருக்கிறது. கவனிக்குமா திரை உலகம்…?

கட்டுரை மற்றும் படங்கள்: மகேஸ்வரி

naltrexone injections click stopping ldn
naltrexone low dose depression open how to get naltrexone out of your system
naltrexone low dose depression open how to get naltrexone out of your system

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 10thexams_111

  10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

 • hardik_anivaguppu

  பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

 • rahulgandhi_11

  அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

 • kumari_ogi_puyal11

  ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

 • porattam_arasu_11

  அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்