SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாங்க மிஷின்ல நாத்து நடுவோம்!

2017-03-20@ 15:09:50

நன்றி குங்குமம் தோழி

நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். விவசாயிகளின் மரணம் நம் முதுகெலும்பை பலவீனமாக்கிக் கொண்டிருப்பதை உணராமல் மூன்று வேளையும் உணவு உட்கொள்கிறோம். ஆனால் எட்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவி விவசாயத்தைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார். அவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கான உபகரணத்தை வடிவமைத்திருக்கிறார் என்ற செய்தியே நமக்கு ஆச்சரியத்தைக் கூட்டுகிறது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பேட்டை மாணவி நா. சரண்யா எரிபொருள் அற்ற நாற்று நடும் இயந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார். அவரிடம் பேசினோம்...  

“என் சொந்த ஊர் செம்பரவன் காடு. நான் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு 3 அக்காக்கள் இருக்காங்க. நாங்க விவசாயக் குடும்பம். அப்பா, அம்மா இரண்டு பேரும் விவசாயம் பார்க்கிறவங்க. இந்த ஊர்ல விவசாயம் தான் தொழில். அப்பா நாத்து நடற நேரத்துல வேலைக்கு ஆள் பிடிக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. ஒவ்வொரு தடவையும் இந்த மாதிரி ஆள் தேடி அலைவாங்க. ஊரில் உள்ள வேறு விவசாயிகளுக்கும் இந்த சங்கடம் இருக்கும்.

இதை எல்லாம் பார்க்கும்போது நாற்று நடுவதற்குன்னு ஒரு எளிய கருவியை நாமே வடிவமைச்சா என்ன என தோன்றிச்சு. விளையாட்டா இல்லாமல் என் மனசுக்குள் இந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா தீவிரமடைஞ்சுது. இதை யார் கிட்ட சொன்னா இந்த எண்ணம் வடிவம் பெறும்னு யோசிச்சேன். அப்பதான் எங்க ஆங்கில ஆசிரியர் செல்வ சிதம்பரம் சாரின் ஞாபகம் வந்தது. அவர் பள்ளியில் எங்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லித் தருவார். நாங்களே ஊதுபத்தி, சாம்பிராணி, சலவைத்தூள், பினாயில்னு நிறைய விஷயங்கள் செய்வோம்.

அதுக்கு எல்லாம் சார் தான் காரணம். எங்களை நல்லா ஊக்குவிப்பார். அதுமட்டுமில்லாமல் இதே மாதிரி போன வருஷம் ஒரு மாணவி செங்கல் உருவாக்கிற மிஷின் கண்டுபிடிச்சாங்க. அதுக்கும் சார் தான் நிறைய ஆலோசனைகள் கொடுத்து கைட் பண்ணாங்க. நாமும் அவர்கிட்டயே சொல்வோம்னு தோணிச்சி. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொர் ஆண்டும் நடைபெறும் ‘இன்ஸ்பையர் அறிவியல் போட்டி’க்காக பள்ளியில் பங்கேற்க சொன்னபோது நாற்று நடும் எளிய இயந்திரத்தைப் பற்றி என்னுடைய யோசனையைச் சொன்னேன்.

‘விவசாயத்துக்கு தேவையான ஒரு கருவியாக இது அமையும்’ என்று சொல்லி பாராட்டினார். ‘ஆனால் எரிபொருள் டீசல் போன்ற பொருட்களில் இயக்கப்படும் இயந்திரத்தை உருவாக்குவதென்றால் லட்சக்கணக்காக செலவாகும். குறைந்த செலவில் எளிமையான முறையில் முயற்சிக்கலாம். மனித சக்தியால் முடியற மாதிரி செய்யலாம்’ எனச்சொன்னார். பணமும் அவரே ஏற்பாடு பண்ணார். எப்படி அதை வடிவமைக்கலாம்னு நான் சில ஐடியாக்கள் சொன்னேன்.

செல்வ சிதம்பரம் சாரும் எங்க பள்ளியின் வேறு சில ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் எனக்கு வழிகாட்டி உதவினாங்க. 2016ம் ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் இந்த வேலையை ஆரம்பிச்சோம். 10 நாட்கள்ல அதுக்கு ஒரு முழு வடிவம் கொடுத்தோம். மாவட்ட அளவிலான ‘புத்தாக்க அறிவியல் கண்காட்சிக்கு’ச் செல்லும் முன், நேரடியாக வயலில் அதை பரிசோதிக்க முடிவு செய்தோம்.

அந்த சமயம் எங்க ஊரில் நாத்து நடும் வேலை எதுவும் இல்லாததால் ஒரு நாள் மன்னார்குடியில் உள்ள ஒரு நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அனுமதி வாங்கி அந்த நிலத்தில் நாத்து நட்டோம். நன்றாக உழவு செய்யப்பட்டு நாத்து நடும் நிலையில் உள்ள விவசாய நிலத்தில் இதை சரியான இடைவெளியில் இழுத்துச் சென்றால் நாற்றுகளை யாருடைய உதவியும் இன்றி நடமுடியும்.

பொதுவாக 200 நாற்றுகளை நடுவதற்கு 30 முதல் 45 நிமிடம் வரை நேரமெடுக்கும். ஆனால் இந்த இயந்திரத்தின் உதவியோடு 10 நிமிடத்தில் முடித்துவிடலாம். எதிர்பார்த்தபடி இயந்திரம் நல்ல முறையில் செயல்பட்டு எங்களுக்குப் பாராட்டு வாங்கி தந்தது. பிறகு மாவட்ட அளவிலான ‘புத்தாக்க அறிவியல் கண்காட்சி போட்டி’யிலும் இடம் பெற்று எங்களின் இந்த ‘நாற்று நடும் எளிய இயந்திரம்’ முதல் பரிசை வென்றது. மாநில அளவிலான ‘புத்தாக்க அறிவியல் கண்காட்சி போட்டி’யில் எங்களின் கண்டுபிடிப்பிற்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

இப்ப மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சாரின் முதல் நினைவு நாள் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அங்கு தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்  எனக்கு ‘நாளைய கலாம் விருது’ கொடுத்தார்” என்று புன்னகையோடு பேசும் சரண்யாவிற்கு இந்த எளிய இயந்திரத்தை சிறு, குறு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்பதுதான் இப்போதைய பெரிய ஆசை. வாழ்த்துகள் சரண்யா.
 
- ஸ்ரீதேவிமோகன்
படங்கள்: மு.முகைதின் பிச்சை

naltrexone for alcohol cravings link naltrexone pain management

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2017

    29-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2017

    28-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • konnorFRUITSHOW2017

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோலாகலமாக தொடங்கியுள்ள பழக்கண்காட்சி : சிறப்புப் படங்கள்

  • SQUIRELsmothiTONGUE

    வெயிலின் கடுமையால் சோர்வடைந்து குடிநீர் தொட்டியில் இருந்து கசியும் தண்ணீரில் நாக்கை நனைக்கும் அணில்

  • springFESTvlorDMURUG

    வசந்த விழாவின் நிறைவு நாளில் சிங்காரவேலர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார்