SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளம் விஞ்ஞானி மாஷா நசீம்

2018-03-13@ 14:54:19

நன்றி குங்குமம் தோழி

தேசிய இளைஞர் விருதுக்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி மாஷா நசீம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். விஞ்ஞானம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளை கற்பிக்கும் சேவையை பாராட்டி ஜனவரியில் ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

தன்னுடைய பள்ளி பருவத்திலே தன் அறிவியல் ஆக்கத் திறனால் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார். தற்போது ‘மாஷா ஆக்க பயிற்சிப் பள்ளி’ தொடங்கி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி அளித்துவரும் மாஷா நசீமிடம் பேசினேன்.

“நான் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி மாவட்டம், பள்ளிப் படிப்பை அங்கேயே முடித்தேன். சிறுவயதில் இருந்தே புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.

நான் பள்ளியில் படிக்கும் காலகட்டங்களில் சக மாணவர்கள் விளையாட்டு, நடனம், மியூசிக் இப்படியாக பல்வேறு திறன்களை வளர்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் எனக்கு புதிய கண்டுபிடிப்புகள் மீதே ஆர்வம் அதிகமாக இருந்தது. எனக்கு 9 வயது இருக்கும்போது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், வீட்டிற்கு திருடன் வந்தால் எப்படித் தெரிந்து கொள்வது என்பதற்காக அலாரம் ஒன்றை கண்டுபிடித்து வைத்தேன். என்னுடைய இந்த முதல் கண்டுபிடிப்புக்கு நண்பர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அனைவருடைய பாராட்டும் நான் தனித்துவமாக இருப்பதாக உணர்த்தியது. அவர்களின் பாராட்டுகள்தான் எனக்கு மேலும் புதிய கண்டுபிடிப்புகளை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை எனக்குள் விதைத்தது. அதன் பின் அதிநவீன ரயில் கழிவறை மற்றும் அரக்கு சீல் வைக்கும் கருவி, விஐபி பாதுகாப்பு சிஸ்டம், எரிபொருள் வழங்கும் எளிய முறை என 14 புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினேன்.

என்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு 2 சர்வதேச விருதுகளும் 5 தேசிய விருதுகளும் பெற்றிருக்கிறேன். கடந்த 2011ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சோதனை முறையில் என்னுடைய அரக்கு சீல் வைக்கும் கருவியை தேர்தல் கமிஷன் பரிந்துரைப்படி பயன்படுத்தப்பட்டது. தமிழக அரசு எனக்கு ‘மாநில இளைஞர் விருது’ வழங்கியது. அதைத் தொடர்ந்து இப்போது தேசிய இளைஞர் விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்தவர் என்னுடைய தந்தை காதர் நஷீம் முதீன்தான். எங்களுடைய சமுதாயத்தில் பெண்கள் அவ்வளவாக வெளியில் வருவதே கிடையாது.

சொந்தங்களும் என்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சிலரும் அப்பாவிடம் எதற்கு இந்த வேலையெல்லாம் என்று அறிவுரை கூறி னார்கள். அவற்றை எல்லாம் உடைத்து என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த பெருமை என் அப்பாவையே சேரும். அன்று அறிவுரை கூறிய அனைவரும் இன்று என்னை பாராட்டுகிறார்கள்.

அறிவியல் துறையில் என்னுடைய ரோல் மாடல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அய்யா அவர்கள்தான். என்னுடைய கண்டு பிடிப்புகள் மூலம் நான் அப்துல் கலாம் அய்யாவை சந்திக்கும் வாய்ப்பு 14 வயதில் எனக்கு கிடைத்தது. என்னுடைய கண்டுபிடிப்புகளை பார்த்து பாராட்டினார்.

என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள் அவை. நான் எம்.டெக் வரை படித்தி ருக்கிறேன். படிப்பு முடிந்ததும் ஆக்கத் திறன் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடு பட்டேன். மாணவர் கள் பல பேர் அறிவியல் ஆக்கத் திறனில் ஆர்வமாக இருந்தனர். அவர்களுக்காக நாகர் கோயிலில் மாஷா அறிவியல் ஆக்கத் திறன் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறேன்.

இங்கு பல்வேறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்ய மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். மாணவர் களுக்கு தோன்றும் ஐடியாவை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி கற்றுத் தரப்படுகிறது. பொது வாக இது போன்ற புதிய கண்டுபிடிப்புகளை அறிவியல் விஞ்ஞானி கள்தான் செய்வார்கள் என்று சிலர் தவறாக நினைத்து விடுகிறார்கள்.

பெற்றோர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. ‘தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்று சொல்வார்கள். அது போலவே படித்தவர்களாக இருந்தாலும், படிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தோன்றும் வித்தியாசமான எண்ணம்தான் ஒருவரை ஆக்கபூர்வ விஞ்ஞானியாக்கும் என்பது என்னுடைய கருத்து.

எங்களுடைய மாஷா அறிவியல் ஆக்கத் திறன் பயிற்சிப் பள்ளியில் பயின்ற பள்ளி மாணவர்கள் 7 பேரின் புதிய கண்டு பிடிப்புக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. கண்டுபிடிப்பு என்பது மிகவும் எளிமையானது. அதற்கு வயது தேவை யில்லை. ஆண், பெண் பாலின பாகுபாடு தேவையில்லை.

யார் வேண்டுமானாலும் கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம். அன்றாட வாழ்வில் மக்களுக்குத் தேவைப்படுகின்ற அறிவியல் கண்டு பிடிப்புகளே நமக்கு தேவைப்படுகிறது. அப்படியான அறிவியல் கண்டுபிடிப்புகளை பள்ளி மற்றும் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆய்வறிக்கையாக கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது கல்லூரிகளில் கொடுக்கப் படும் ஆய்வறிக்கைகள் மதிப்பெண் அடிப் படையில் வழங்கப் படுவதால் ஏற்கனவே செய்து வைத்திருப்பதை வாங்கிக்கொள்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். மதிப்பெண் மட்டும் மாணவர்களை உருவாக்காது.

திறமைதான் மாணவர்களை உருவாக்கும். தற்போது என்னுடைய பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். இந்த பயிற்சிப் பள்ளியை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்.

அறிவியல் ஆக்கத் திறன் குறித்து தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். இது குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத் துவேன். மாணவர்கள் ‘மாஷாவை போல் விஞ்ஞானியாக வேண்டும்’ என்று சொல்லும்போது கிடைக்கின்ற மகிழ்ச்சி எந்த விருதுக்கும் இணையாகாது” என்கிறார் மாஷா நசீம்.

- ஜெ.சதீஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்