SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியங்கள்

2017-04-21@ 14:11:15

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு எப்போதும் இரட்டைக் குதிரை சவாரி தான். குடும்ப நிர்வாகத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்திலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். இந்தத் தொல்லை வேண்டாம் என்றால் பொருளாதாரரீதியான முன்னேற்றம் இருக்காது. அதனால் சில பெண்கள் தேர்ந்தெடுக்கிற ஒரே வழி வீட்டில் இருந்து சம்பாதிக்கும் வழிமுறை.

அந்த வழிமுறையை தேர்ந்தெடுத்து பொருளாதாரத்தில் முன்னேறியது மட்டுமல்லாது இன்று பலரும் அறிந்த முகமாகி இருக்கிறார் லதாமணி ராஜ்குமார். அதிலும் நம் பாரம்பரியத்தின் மொழி பேசும் தஞ்சாவூர் ஓவியத்தில் கைதேர்ந்தவரான அவர் அதனைப் பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும் அதனுடனான தன் வாழ்வுப் பற்றியும் நம்மோடு பகிர்ந்த சில விஷயங்கள்.

“சின்ன வயதிலே எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகமில்லை. நான் ஒரு ஆவரேஜ் மாணவிதான். ஆனால் கூடுதல் கல்வி சார் திறன் செயல்பாடுகளில் (எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்) ஆர்வம் அதிகம் இருந்தது. நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கி இருக்கிறேன். எனக்கு இருந்த இந்த ஆர்வத்தைப் பார்த்துவிட்டு என் பெற்றோர் என்னை ஓவியப் பயிற்சிக்கு சேர்த்துவிட்டனர்.

இரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஓவியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். தொடர்ந்து கற்று வந்தேன். கேரளாவின் மியூரல், கலம்காரி, மதுபானி, கண்ணாடி ஓவியம், ஆயில் பெயின்டிங் என பல வகையான ஓவியங்களை கற்றுக்கொண்டேன். அது மட்டுமில்லாமல் கைவினை வகுப்புகளுக்கும் சென்று அந்த விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றேன்.

பிறகு பதினோராம் வகுப்பு படிக்கும்போது தஞ்சாவூர் ஓவியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். தஞ்சாவூர் ஓவியத்தில் எனது முதல் குரு எனக்கு அனாடமி வரைவது, பெயின்டிங், கற்கள் பதிப்பது, தங்கத்தகடு பதிப்பது போன்றவற்றைக் கற்றுத் தந்தார். தஞ்சாவூர் ஓவியத்தில், எனது இரண்டாவது குரு இந்த ஓவியத்திற்கான போர்டு எப்படித் தயாரிப்பது, வஜ்ஜிரம் எப்படி செய்வது போன்ற பல நுணுக்கங்களையும் கற்றுத் தந்தார்.

தஞ்சாவூர் ஓவியத்தின் அடிப்படைகளை கற்றுத் தந்தார். எல்லாப் பொருட்களும் ரெடிமேடாக கிடைத்தாலும் நாமே செய்யும் போது நமக்கு செலவு குறையும். பொருளும் தரமாக கிடைக்கும். நமக்கு திருப்தியாகவும் இருக்கும். எனவே அவற்றையும் கற்றுக்கொண்டேன்” எனும் லதாமணி டிப்ளமோ இன் ஆர்ட் படித்திருக்கிறார். “என் பெற்றோருக்கோ உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் யாருக்குமோ ஓவியம் பற்றித் தெரியாது.ஆனால் எனக்கு இதில் எப்படி ஆர்வம் வந்தது என்று எனக்கே தெரியவில்லை.

என் அப்பாவை பொறுத்தவரை பெண்கள் ஆசிரியை தொழில் போன்ற பாதுகாப்பான வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று சொல்வார். அதனால் நான் வீட்டில் இருந்து கொண்டு பலருக்கும் ஓவியக் கலையைக் கற்றுத்தந்ததில் என் தந்தைக்கு உடன்பாடு இருந்தது. அதனால் என்னை இதில் ஊக்குவித்தார்.
 
தஞ்சாவூர் ஓவியத்தை பொறுத்தவரை கிருஷ்ணர் சார்ந்த ஓவியங்கள்தான் அதிகமாக இருக்கும். அதாவது கிருஷ்ணர் தவழ்வது, கிருஷ்ணர் வெண்ணெய் சாப்பிடுவது என்று இருக்கும். அதற்குப் பிறகுதான் மற்ற தெய்வ உருவங்கள். இப்போது அதையும் தாண்டி, சில தினங்களுக்கு முன்பு நான் ராஜஸ்தானி ஓவிய மாடலில் தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை செய்திருக்கிறேன். சமீபத்தில் எனது தோழி ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்த இருவரை அழைத்து வந்தார்.ஏதாவது வித்தியாசமாக செய்ய முடியுமா என்று கேட்டார்.

அதன் பிறகு யோசித்து முக்கோண வடிவில் பெயர்பலகை ஒன்று செய்தேன். அதிலும் கெம்புக்கல் பதித்து அவரது பெயரில் தங்க ரேக் பதித்து தஞ்சாவூர் ஓவியத்தை இந்த விதத்தில் செய்து கொடுத்தேன். அதில் தஞ்சாவூர் ஓவியம் என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன? என்பதைப் பற்றியும் குறிப்பு எழுதி அதில் வைத்துக்கொடுத்தேன்.

அதை அவர்கள் மிகவும் ரசித்து எடுத்துச் சென்றார்கள். நம்ம பாரம்பரியக் கலையை அவர்கள் விரும்பும் வகையில் அவர்களுக்கும் சென்று சேர்த்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. தஞ்சாவூர் ஓவியத்திற்கென்று சிறப்பான வரலாறு உண்டு. இந்தக் காலத்தில் போஸ்டர் கலர் பயன்படுத்துகிறார்கள். அந்த காலத்தில் காய்கறிகள் மற்றும் பூக்கள், இலைகளின் சாறு எடுத்து நிறத்தைப் பயன்படுத்தினார்கள்.இப்ப உதாரணத்திற்கு பீட்ரூட்டின் சாறு எடுத்து அந்த நிறத்தைப் பயன்படுத்துவார்கள். அது போல இப்போது அதற்குரிய ஒரு பேப்பரின் மீது தங்கத்தை பெயின்ட் போல பூசுகிறார்கள் (தங்க ரேக்). ஆனால் முன்பெல்லாம் செப்புத் தகடில் தங்கத் தகடு பதித்துச் செய்வார்கள். அதனால் இன்றும் அந்தக் கால தஞ்சாவூர் ஓவியங்களுக்கு மதிப்பு அதிகம்.

அந்த காலம் 5x7 ஓவியத்திற்கு 30000 மதிப்பு என்றால் இந்த காலத்தில் அதை 4000 ரூபாய்க்கு வாங்கலாம். இப்போது இந்த ஓவியத்தை கதவுகளிலும் பதித்துக்கொள்கிறார்கள். வைரக்கற்கள் வைப்பதாக இருந்தால் ஓவியத்தை வாங்குபவரையே அந்த கல்லையும் வாங்கிவரச் செய்து அவர்கள் முன்பே பதித்துத் தருவோம். செட்டிநாடு ஃபிரேம்தான் போட வேண்டும். 18 வருடங்களுக்கும் மேலாக தஞ்சாவூர் ஓவியத்தைக் கற்றுக்கொடுத்து வருகிறேன்.இன்றுவரை என்னிடம் கிட்டதட்ட 6500 மாணவர்கள் பயின்றிருப்பார்கள்.

குறிப்பாக இரண்டாவது படிக்கும் பிள்ளை தொடங்கி 70 வயது முதிய பெண் உட்பட பலர் என்னிடம் கற்றிருக்கிறார்கள். அதிலும் அந்த எழுபது வயதான அம்மா வந்த போது அவரையும் என்னையும் நிறைய பேர் டிஸ்கரேஜ் செய்தார்கள். ஆனால் அந்த அம்மா தினமும் புரசைவாக்கத்தில் இருந்து மயிலாப்பூருக்கு ஆட்டோவில் வந்தார்.

இந்தக் கலையை சீராகக் கற்றுக்கொண்டு ஒரு வருட காலத்திலே 18x21 அளவான மூன்று ஓவியங்களை முடித்தார். அப்படி சிறப்பான ஒருவருக்கு குருவாக இருந்ததில் மகிழ்ச்சி. இந்த ஓவியத்தை சிலர் ட்ரேஸ் வைத்து வரைகிறார்கள். எல்லா ஓவியங்களையும் ட்ரேஸ் வைத்தே செய்து கொண்டிருப்பதைவிட அடிப்படையாக அனாடமி கற்றுக் கொள்வது அவசியம் என்பதை சொல்லி வருகிறேன்” என்கிறார்.இன்று ஏராளமான மாணவர்களுக்கு குருவாக இருக்கும் இவரது கலைப்பயணம் அவ்வளவு சுலபமாக அமைந்துவிடவில்லை. “ஆரம்பத்தில் மாணவர்கள் யாரும் வராமல் அமர்ந்திருக்கிறேன். அதற்குப் பிறகு ஒரு 5 பேர்தான் வந்தார்கள். கண்காட்சிகள் எல்லாம் சொந்த செலவில் வைத்திருக்கிறேன். தஞ்சைக்கு சென்று அந்த ஓவியம் செய்பவர்களிடம் கற்றுத் தரச்சொல்லிக் கேட்டேன். ஆனால் மறுத்துவிட்டனர்.

அவர்களுக்கு அதைச் சொல்லித் தர விருப்பமில்லை. காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸிலும் கூட ஓவியம் செய்ய மட்டும் தான் கற்றுத்தருவார்கள். பலகை செய்வது போன்ற விஷயங்களை கற்றுத் தரமாட்டார்கள். அதையும் எனது குருவிடம் கற்றுக்கொண்டு எனது மாணவ, மாணவிகளுக்குச் சொல்லித் தருகிறேன்.இன்று எனக்கு நேரமே கிடைப்பதில்லை. அவ்வளவு மாணவ, மாணவிகள் வருகிறார்கள்.

இதனை பல தொலைக்காட்சிகளில் பல தொலைக்காட்சி நேயர்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இரண்டு விரல் பிடித்து கோலம் என்னும் பாரம்பரியத்தை பழகிய நம்மூர் பெண்களுக்கு இதுவும் சுலபமாக வரும் என்பது என் எண்ணம். கேலரிகளில் ஒரு ஓவியத்தை வாங்கும்போது 2 லட்சம் ஆகும் என்றால் நாங்கள் வீட்டிலேயே ஒன்றரை லட்சத்துக்கு கொடுப்போம்.

எங்களுக்கு கேலரி கமிஷன் இல்லாததால் நாங்கள் ஓரளவு லாபம் மட்டும் வைத்துக் கொடுப்பதால் வாங்குபவர்களுக்கும் லாபம். நம் நாட்டு பாரம்பரியக் கலை அழிந்து விடாமல் அதை நாலு பேருக்குக் கற்றுக்கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சி” எனும் லதாமணி ராஜ்குமாருக்கு இரு மகள்கள். அவர்களும் இவரது ஓவியத்தைத் தொடர்கிறார்கள். லதாமணி சமையலிலும் வல்லவர் என்பதால் பல இதழ்களுக்கும் ரெசிபிக்கள் வழங்கி இருக்கிறார். சமையல் ஷோக்கள் நடத்தி இருக்கிறார். ஆர்ட், கிராஃப்ட், தஞ்சாவூர் ஓவியம் இவற்றோடு சமையலும் கற்றுத்தருகிறார். இதற்காக மயிலாப்பூரில் ஒரு பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.

படங்கள்: ஆர்.கோபால்

-ஸ்ரீதேவிமோகன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27PEOPLEdeidINhigHWAYacc

  கென்யாவில் நைரோபி-மம்பசா நெடுஞ்சாலையில் பஸ் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி 26 பேர் பலி

 • PEGGYwhitsonASTRONAUT

  அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை

 • RAM100yauliVECH

  ராமானுஜர் ஆயிரமாவது வருட உற்சவ விழாவை முன்னிட்டு யாளி வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா

 • ooty_pugaiii

  ஊட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியில் பிளவு ஏற்பட்டு கரும் புகை வெளியேறியது

 • strike_governmenn

  அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்