SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாஷிங்டனில் ஒரு வாக்

2017-11-14@ 15:25:29

நன்றி குங்குமம் தோழி

நியூயார்க்கில் இருந்து நான்கு மணிநேரம் கார் பயணம்... “வாஷிங்டன் போகலாமா?" என் கணவர் கேட்டதும், சட்டென எழுத்தாளர் சாவி எழுதிய “வாஷிங்டனில் திருமணம்” நகைச்சுவை கதையை சிலாகித்து படித்தது  நினைவிற்கு வந்தது. கதையுடன், வாஷிங்டனில்  பயணித்த மறக்க முடியாத  நாட்கள் அது. ராக்பெல்லர்  சீமாட்டியின் வெகுளித்தனத்தையும், குரைக்கும் நாய்களை விமானத்தில் வர வழைத்தது, ஜவ்வரிசி  பாயசத்தை, ஜாங்கிரியை சாப்பிட ஆங்கிலேயர்கள் பட்ட அவஸ்தையை, கதையில் சிரிக்க, சிரிக்க விவரித்த அழகு மறக்க முடியாத ஒன்று. நான் பார்க்க நினைத்த, என் கனவு ஊர் வாஷிங்டன். சான்ஸ் கிடைத்ததும் உடனே கிளம்பி விட்டேன். வாஷிங்டனில் மெட்ரோ பயணம் படுசூப்பராக இருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் பறக்கும் மெட்ரோவில் ஏறி நம் இலக்கை அடையலாம். அதற்கு  ஏதுவாக ஆரஞ்சு, சில்வர், ப்ளூ, யெல்லோ என, நாம் போக வேண்டிய ஊர்களுக்கு வண்ணங்களின் பெயரில் மெட்ரோ இயங்குகிறது. மெட்ரோவின் சுத்தம், பயணிக்கும் பயணிகளின் ஒத்துழைப்பு, ஆஹா அருமை. வாஷிங்டனில்  வெள்ளை மாளிகையை மிகத் தொலைவிலிருந்துதான் பார்க்க முடியும். ஆனால் வெள்ளை மாளிகையின் அழகை, அங்கு இயங்கும் வேலைகளை, அங்குள்ள  உறுப்பினர்களுக்கு அவர்களின் ரசனைக்கேற்ப வடிவமைத்துள்ள அறைகளின் நேர்த்தியை 3Dயில் நாமே இயக்கி பார்க்கும் வண்ணம் ஒரு வசதி மியூசியத்தில் உள்ளது. அதைப் பார்த்து  ரசித்தோம்.

வாஷிங்டன் வீதிகளையும், அங்கு நடமாடும் மக்களையும் பார்த்து  வியந்தோம். என்ன ஒரு நேர்த்தி, அங்குள்ள அத்தனை பேரும் கோட்டும், சூட்டும் போட்டுக்கொண்டுதான் காட்சியளிக்கின்றனர். வாஷிங்டனில் ‘Cherry blossom festival’ கொண்டாடப்படுகிறது. ஜெஃபர்சன் மெமோரியலைச் சுற்றி அனைத்து மரங்களிலும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை இளஞ்சிவப்பு வண்ணப் பூக்கள், கொத்து கொத்தாக எங்கெங்கும் பூத்துக்குலுங்கும். அதன் அழகைப் பார்க்கவும்,  ரசிக்கவும், படம் பிடிக்கவும், பல ஊர்களிலிருந்து வாஷிங்டன் வரும் மக்களின் எண்ணிக்கை ஆண்டாண்டு அதிகமாகிறதாம்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கனின் நினைவகத்தில் அவரின் ஆளுயர சிலையை நிறுவியுள்ளனர். மிகப்பெரிய விஸ்தாரமான அழகு பூங்காவின் நடுவில் ‘மார்ன்யூமென்ட்’ உள்ளது... இதன் உச்சியில் ஏறி, முழு வாஷிங்டனைப் பார்த்தது த்ரில்லான அனுபவம். ‘லிங்கன் மெமோரியல்’, ‘மார்ன்யூமென்ட்’, ‘கேபிடல்’ மூன்று கட்டிடங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. ‘Segway tour’ என அழைக்கும் இந்த வாகனத்தில் பயணிக்கும் நபர்களை பார்த்து வியந்தோம். வாடகைக்குக் கிடைக்கும் இதை வாங்கி  ஊர் முழுக்க சுற்றி பார்க்கலாம். இப்படிப் பயணிக்க வசதியாக வாஷிங்டனில் அனைத்து சாலைகளும் மேடு பள்ளம் இல்லாது, சமமாக உள்ளது.

சாலையோரக் கடைகளில் சாப்பிடுவது போன்று  வாஷிங்டன்  ஓட்டலின் முகப்பில் (Burrito) போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து  வீட்டிலிருந்து தயாரித்து எடுத்து  வந்த புளி அவலை நாங்கள்  சாப்பிட, நடந்து சென்று கொண்டிருந்த சிலர் இதைப் பார்த்து பெருங்காய வாசனையை நுகர்ந்து ஓட்டலுக்குள் சென்று, “வெளியே சிலர் ஏதோ சாப்பிடுகிறார்களே, புதிய வகை உணவு ஏதேனும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்களா’ ?  எனக் கேட்க,  ஓட்டல்காரருக்கு ஒரே திகைப்பு. எங்களுக்கோ ஒரே சிரிப்பு. வாஷிங்டனில் அனைத்து இடங்களுக்கும் போய்  பார்க்க ஓபன் டாப் பஸ் இயங்குகிறது. சுற்றுலா பயணிகளுக்கு மிக சௌகரியமாக இருப்பதால், அனைவரும் அந்த ஹாப் ஆன் பஸ்களில் பயணிக்கின்றனர்.

வாஷிங்டனில் டாலர் அச்சடிக்கும் இடமான Bureau of Engraving and Printing மற்றும்  Capital, Trump International  hotel என ஊர் முழுவதும் அட்டகாசமாக சுற்றிப் பார்த்தோம். அனைத்து கட்டடங்களையும் பார்க்கவே கொள்ளை அழகு. வாஷிங்டனில் சுமார் 30க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. அனைத்தையும் சுற்றிப்பார்க்க   ஒரு வாரம் போல் ஆகும்.   நிறைய நடக்கவேண்டும். ஒவ்வொரு கட்டடத்தையும் வியந்து பார்த்தபடி கால் வலியையும் மறந்து ஒரேயடியாக வாக் வாக்தான். நாங்கள் National Museum of American history, National Geographical Museum இரண்டையும் பார்த்தவுடன் பிரமித்து நின்றோம். கலை,ஜோடனை, பாரம்பரிய பழக்க வழக்கங்கள், விவரித்த விதம் அருமை, அழகு, பிரமாண்டம். ஐ லவ் வாஷிங்டன்!

- ராதா நரசிம்மன், பெங்களூரு.
எழுத்து வடிவம்: தோ. திருத்துவராஜ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்