SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைவிட்டபோது...முசெட்

2017-10-12@ 15:17:55

நன்றி குங்குமம் தோழி

இப்பிரபஞ்சத்தில் சிறு துளி நேசத்திற்காக ஏங்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் தனிமையை, துயரை, சிரமத்தை மென்மையான உணர்வுகளுடன் பிணைத்து அற்புதமான காட்சிகளினூடாக நம் இதயத்திற்குள் ஒரு சோக கீதமாக ஒலிக்கச் செய்யும் படம் ‘முசெட்’.

ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறாள் பதினான்கு வயதான சிறுமி முசெட். நாம் அன்றாடம் பேருந்திலும், சாலையிலும், வழியிலும் கையில் ஒரு புத்தகப்பையுடன் சந்திக்கும் அரசாங்க பள்ளிக்கூட மாணவியை நினைவுபடுத்துபவள். அவள் வீட்டுக்கு அருகிலிருக்கும் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள். போரினால் நாட்டையும், வீட்டையும் இழந்து நண்பர்கள், சொந்த பந்தங்கள் யாருமின்றி உலகின் ஏதோ ஒரு மூலையில் அகதிகளாக, அனாதைகளாக வாழும் இதயங்கள் எப்படி அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்குமோ அந்த மாதிரி அன்பிற்கு ஏங்கித் தவிப்பவள்.

ஆனால், அவளுக்குக் கிடைத்தது எல்லாம் ஏமாற்றமும், நிராகரித்தலும்தான். அதே நேரத்தில் முசெட் அனாதையோ அகதியோ இல்லை. அவளுக்கென்று அழகான குடும்பம் இருக்கிறது. பெற்றோர்கள் இருக்கிறார்கள். முசெட்டின் தாய் நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடக்கிறாள். அவளின் தந்தையும், சகோதரனும் மிகுந்த அயோக்கியர்கள்; குடிகாரர்கள். பெற்றோர்களுக்கு முசெட் மீது எந்த அக்கறையும் இல்லை. கவனிக்க ஆளில்லாமல் எப்பொழுதுமே தன்னந்தனியாக இருக்கிறாள். அவளைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் கூட முசெட்டிடம் அன்பாக நடந்து கொள்வதில்லை.

அன்பு காட்டாவிட்டாலும் பரவாயில்லை அனைவரும் அவள் மீது மிகுந்த வெறுப்பையே உமிழ்கின்றனர். பள்ளியிலும் அவளுக்கு நண்பர்கள் என்று யாருமில்லை. ஆசிரியரும் கூட அவள் மீது கனிவாக நடந்து கொள்வதில்லை. பதிலுக்கு முசெட்டும் தன் சக மாணவிகள் மீது ஒருவித வெறுப்பையே காட்டுகிறாள். இந்நிலையில் முசெட்டிற்கு ஒரு பையனுடன் நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பு அவளை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு நகர்த்துகிறது. முதல் முறையாக முசெட்டின் முகத்தில் மகிழ்ச்சியின், புன்னகையின் மொட்டுகள் விரிகின்றன.

ஆனால், முசெட்டின் தந்தை இடையில் புகுந்து அந்தப் பையனை விரட்டியடித்து, முசெட்டையும் தாக்கி அவளை பழையபடி இருளுக்குள் தள்ளிவிடுகிறார். தன்னைச் சுற்றி நடக்கும்  நிகழ்வுகளால் வெறுப்படைந்த முசெட் யாரிடமும் பேசாமல் மௌனமாகிவிடுகிறாள். பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு எல்லோரும் செல்லும் பாதையில் செல்லாமல் காட்டின் வழியாக தனியாகச் செல்கிறாள். ஒரு நாள் இந்த மாதிரி செல்லும்போது மழையில் சிக்கி விடுகிறாள். அவளுக்கு ஒருவன் அடைக்கலம் தருகிறான். அவனை முசெட் நம்புகிறாள். அவனிடமும் அன்பையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கிறாள்.

ஆனால் முசெட்டை அவன் பாலியல் வன்புணர்வு செய்துவிடுகிறான். இறுதியில் முசெட் தன்னை வெறுத்து ஒதுக்கிய இந்த உலகத்தை வெறுத்து ஆற்றில் மூழ்குவதோடு படம் நிறைவடைகிறது. நம்மை நேசிக்க, கவனிக்க இப்பிரபஞ்சத்தில் எவருமில்லையென்றால் வாழ்க்கை எவ்வளவு துயர் மிகுந்து இருக்கும் என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் உணரச் செய்யும் இந்தப் படத்தை இயக்கியவர் ராபர்ட் பிரெஸ்ஸான். இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் சுற்றியுள்ள மனிதர்களின் மீது நம்பிக்கை இழந்து, தன்னை வெளிப்படுத்த வழிகளற்று, கையறு நிலையில் சிறுதுளி நேசத்திற்காக, அரவணைப்புக்காக ஏதோ ஒரு நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இதயத்திற்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமானவள் இந்த முசெட்.

இந்தச் சிறுமியைப் போல எண்ணற்ற பெண்கள், இன்றைக்கும் நம் பார்வைக்கு அகப்படாமல்,  ஏதோ ஒரு மூலையில் அல்லது நமக்கு அருகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இன்னுமொரு துயரம். அதே நேரத்தில் முசெட் போன்றவர்களை நேசிக்க, கவனிக்கத் தவறிய ஒவ்வொருவரையும் மனசாட்சியின் முன் குற்றவாளியாக நிற்க வைக்கும் படைப்பும் கூட. முசெட் என்ற பெண் இந்த சமூகத்தில் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் இந்த உலகை விட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.

அவள் தற்கொலை செய்யவில்லை; மாறாக இந்த சமூகம்தான் அவளை கொலை செய்து விட்டது என்றுதான் சொல்ல முடியும். அதே நேரத்தில் அந்த தற்கொலை இந்த குரூரமான உலகத்தில் இருந்து அவளே தேடிக்கொண்ட ஒரு விடுதலையாகவும் பார்க்க முடியும். முசெட் பாலியல் வன்புணர்வு செய்யப்படும் காட்சி மிகுந்த வேதனையைத் தருவது. அது மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது. முசெட் வன்புணர்வு செய்யப்படும்போது கூட ஓர் அரவணைப்பை எதிர்பார்க்கிற மாதிரி அந்த காட்சி அமைந்திருக்கும். இந்த மாதிரியான ஒரு சூழலில்கூட ஒரு பெண் அரவணைப்பை எதிர்பார்ப்பாளா என்பது கேள்விக்குறி.

முசெட் இறுதியில் ஆற்றில் விழப் போகும்போது கூட அரவணைப்பை வேண்டி ஒருவனைப் பார்த்து தன் கையை அசைப்பாள். ஆனால், அவனும் கூட முசெட்டை கண்டுகொள்ள மாட்டான். அந்த நிகழ்வுக்குப் பிறகே அவள் ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்துகொள்வாள். இப்படி முசெட் என்ற பெண்ணின் வழியாக அன்பற்ற, கருணையற்ற இந்த உலகத்தின் குரூரத்தை நமக்குக் காட்டுகிறார் ராபர்ட் பிரெஸ்ஸான். படம் பார்த்து முடித்த பிறகு நாம் வெறுத்து ஒதுக்கிய யாரோ ஒருவரின் நினைவு நம்முடைய தூக்கத்தைக் கெடுக்கும். குறைந்தபட்சம் அந்த நபரை நினைத்துப் பார்க்கவாவது செய்யும். அதுவே இந்தப்படம் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-01-2018

  23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • annanagar_iknt

  அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 • perunthu_makkal11

  பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

 • thamilgam_porattam1

  வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

 • thamilgam_porattam1

  வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்