SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும்

2017-08-11@ 12:32:05

நன்றி குங்குமம் தோழி

-ஸ்ரீதேவி மோகன்

கண் பார்த்தா கை வேலை செய்யணும்’ என்பார்கள். அத்தகைய திறமை ஒரு சிலருக்கே வாய்க்கும். அது மாதிரியான ஒரு பிறவிதான் உஷா. ‘கந்தர்வ் கலைக்கூடம்’ ஆரம்பித்து கடந்த 18 ஆண்டுகளாக கைவினைப்பொருட்கள் மட்டுமல்லாது பொம்மைகள், ஓவியம், ஜடை தைத்தல், ஆரத்தி தட்டு அலங்காரம், காய்கனி அலங்காரம், மெழுகுவர்த்தி தயாரித்தல், செயற்கை நகைகள் தயாரித்தல், மருதாணி இடுதல், குக்கிங் அண்டு பேக்கிங் போன்ற பல விஷயங்களின் செய்முறையை பலருக்கும் கற்றுத்தருகிறார்.

உஷா தனது சிறுவயதிலே யார் என்ன பொருட்கள் செய்தாலும் அதை அப்படியே செய்ய முயற்சி செய்வாராம். வீட்டில் இருக்கும் எதாவது ஒரு பொருளை பார்த்து அது போல செய்ய முயற்சிப்பாராம். விளையும் பயிரை முளையிலே அறிந்து கொள்ளலாம் என்பார்கள். அது அத்தனை உண்மை என சிறு வயதிலே நிரூபித்திருக்கிறார் உஷா.

இவரின் திறமையைக் கண்டறிந்த இவரது தாயார் அது முதல், பெண்ணுக்கு கைவினைப் பொருட்கள் செய்வதில் இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அந்தத் துறையிலே இவரை ஊக்குவித்திருக்கிறார். அதனால் இன்று பலருக்கும் கைவினைப் பொருட்களைக் கற்றுத் தரும் ஆசானாய் வளர்ந்திருக்கிறார் உஷா. தன் வளர்ச்சி குறித்து அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டவை.

“ரொம்ப சின்ன வயசிலே அடுத்தவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே செய்வேன் என அம்மா சொல்லுவார். எனக்கு நினைவு தெரிந்த நாளாக எந்த ஒரு கலைப்பொருளைப் பார்த்தாலும் அதைச் செய்ய வேண்டும் என ஆசை பிறக்கும். அதை என்னால் முடிந்த அளவு செய்து பார்ப்பேன் அல்லது உரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

என் சொந்த ஊர் நாகர்கோவில். அங்கே ஏதாவது விசேஷ நாள் என்றால் என் வீட்டில் கோலம் போடுவது போக அந்த தெருவில் உள்ள முக்கால்வாசி வீட்டுக்கு நான்தான் கோலம் போடுவேன். நான் நன்றாக கோலம் போடுவதால் அனைவரும் விரும்பிக் கேட்பார்கள். எனக்கும் அதில் ஆர்வம் அதிகம்.

அம்மாவும் பாட்டியும் வயர் கூடை பின்னுதல், வயர்களில் பலவிதமான வேலைப்பாடுகள் உள்ள பொருட்களை செய்வார்கள். அவர்களோடு சேர்ந்து விடுமுறை நாட்களில் நானும் செய்வேன். வயர்களில் விதவிதமாக பல வண்ணங்களில் கிளி பொம்மைகள் செய்வேன். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும் பதினொன்றாம் வகுப்பில் கைவினைப் பொருட்கள் மீது கொண்ட தீராத ஆசையால் ஹோம் சயின்ஸ் குரூப்பில் சேர்ந்தேன்.

இதனால் நிறைய பேர் என்னை கடிந்து கொண்டார்கள். ஆனாலும் எனக்கு இதுதான் பிடித்திருந்தது. அதன் பிறகு ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றபோதும் அடிப்படை ஓவியம் மற்றும் எம்ப்ராய்ட்ரி ஒர்க்கில் டிப்ளமோ படித்து ஹையர் கிரேடு முடித்தேன். பள்ளியிலும், கல்லூரியிலும் நடைபெற்ற கைவினைப்பொருட்கள் போட்டிகளில் பங்கேற்று நிறைய பரிசுகள் வாங்கினேன்.

அப்பா கல்வித்துறையில் பணியாற்றியவர். நான் படிப்பு முடித்ததும் நானும் அந்த துறையில் வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. மேலும் கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக்கொள்ளவே ஆசைப்பட்டேன். பஞ்சு வைத்து தயாரிக்கும் சாஃப்ட் டாய்ஸைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கு வெகுநாளாக ஆசை.

நிறைய பேரிடம் கேட்டும் யாரும் கற்றுத் தரவில்லை. அதன்பிறகு பெங்களூரில் இருந்த எங்கள் உறவுக்காரர்களின் பக்கத்து வீட்டில் இருந்த தெரிந்த பெண் ஒருவர் எனக்கு அந்த பொம்மைகள் செய்யக் கற்றுத் தந்தார். நான் அதற்குப் பதிலாக அவருக்கு தஞ்சாவூர் பெயின்டிங் கற்றுக்கொடுத்தேன். இது மாதிரி பல கைவினைப்பொருட்களின் செயல்முறைகளை தெரிந்து கொண்டேன்.

1999ம் ஆண்டு கணவர் லஷ்மணன் உதவியோடு ‘கந்தர்வ் கலைக்கூடம்’ ஆரம்பித்தார் உஷா. இக்கலைக்கூடம் மூலம் பலர் பல செய்முறைகளைக் கற்றுக்கொண்டிருக்கின்றனர். நிறைய பெண்கள் என்னிடம் இதனைக் கற்று பலன் பெற்று வருகின்றனர். சம்பாதிக்கவும் செய்கின்றனர். குழந்தைகளுக்கும் கற்றுத்தருகிறேன்.

ஒரு தனியார் நிறுவனத்தின் எக்ஸ்பர்ட் டீச்சராக இருக்கிறேன். பல எக்ஸிபிஷன், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நடத்தி வருகிறேன். விடுமுறைக் காலங்களில் பிள்ளைகளுக்காக ஸ்பெஷல் பயிற்சி முகாம்களும் நடத்தி வருகிறேன். பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்றவற்றில் ‘டெமோ’ வகுப்புகள் நடத்தி சான்றிதழ்களும் வழங்கி வருகிறோம்.

மூன்று நாட்கள் கைவினைப்பொருட்கள் சம்பந்தப்பட்ட ஒர்க் ஷாப் மற்றும் கண்காட்சியினை எங்கள் செலவில் நானும் என் கணவரும் இது சம்பந்தப்பட்ட சில ஆசிரியைகளுடன் இணைந்து நடத்தினோம். அங்கு வந்த அனைவருக்கும் இலவசமாக பயிற்சிகள் வழங்கினோம். இன்றைக்கு அதை நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு கல்யாணத்தை நடத்துவதும் இத்தகைய ஒர்க் ஷாப்பை நடத்துவதும் ஒன்று தான். அவ்வளவு சிரமங்களுக்கிடையே அதனை செய்தோம். நல்ல வரவேற்பு இருந்தது. இன்னும் பலருக்கும் இந்த கைவினைப்பொருட்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஆசை. இதன் மூலம் பெண்கள் தனக்கான பொருளாதார சுதந்திரத்தையும் பெற முடியும், வீட்டில் இருந்தபடியே குழந்தைகள், குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள முடியும்.

தனது சொந்தக் காலிலும் நிற்க முடியும். பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதே என் எண்ணம். இது மட்டுமல்லாது பலரும் பயன்படும் வகையில் மேலும் பல பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் மூலம் பயிற்சிகள் அளித்து வருகிறேன். பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கும் முறைகளை அவர்களுக்குக் கற்றுத்தருகிறேன் என்பதில் திருப்தி அடைகிறேன்” என்பவர் இத்துடன் நிற்கவில்லை, பத்திரிகைகளில் சமையல் வகைகளை எழுதுவது, க்ளே மாடலிங் செய்வது, செயற்கை பூக்கள் தயாரிப்பது என இவரது திறமையின் பட்டியல் நீள்கிறது.

படங்கள்: ஆர்.கோபால்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-07-2018

  23-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-07-2018

  22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2018

  21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • DryingClothingfestival

  சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

 • unmanedbookshopchina

  சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்