SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லென்ஸ்

2017-07-17@ 12:54:51

நன்றி குங்குமம் தோழி

கலை என்பது எந்தக் கட்டுக்குள்ளும் அடக்கி விட முடியாத ஒரு பரந்து பட்ட வெளி. உயர்மட்டத்திலிருந்து அடிநிலை வரை அனைத்து மக்களையும் சென்றடையும் கலை வடிவம் என்றால் அது சினிமாதான். திரைப்படங்களின் தாக்கம் யதார்த்த வாழ்வில் பிரதிபலிக்கும் உளவியலை யாராலும் மறுக்க முடியாது. இப்படியான சூழலில் திரைப்படங்கள் சமூகத்தின் மீதான பொறுப்புணர்வுடன் எடுக்கப்பட வேண்டும் என்கிற குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்கிறது.

கொலை, பாலியல் வன்முறை, போதை என எல்லாம் நிஜ வாழ்வில் நடந்தேறுபவைதான். அந்த யதார்த்தத்தை அப்படியே காட்சிப்படுத்துவது கலைக்கு செய்யும் நேர்மையாக இருக்கலாம். ஆனால் அது சமூக மனநிலையில் ஏற்படுத்தும் பாதிப்பையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

‘பருத்தி வீரன்’ படத்தில் இறுதிக்காட்சியில் நாயகி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் காட்சியில் பலருக்கு தலைசுற்றல் வந்தது. கதைக்களம் மற்றும் அதன் சூழலுக்குத் தேவையான காட்சியாக அது இருந்தாலும் கூட அதனை கிரகித்துக்கொள்ள முடியாத பண்பாட்டுப் பின்னணி கொண்டவர்கள் நாம். இந்த அடிப்படையில் அணுகும்போது இச்சமூகத்தின் மீதான பொறுப்புணர்வுடனும், நேசத்துடனும் வெளியாகியிருக்கிறது ’லென்ஸ்’ திரைப்படம்.

‘லென்ஸ்’  பேசியிருப்பது சம காலத்தின் பிரச்னையை. எந்த ஒரு கண்டுபிடிப்பும்/ தொழில்நுட்பமும் நேர்மறையாக மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. இன்றைய டிஜிட்டல் உலகில் நமது ஒவ்வொரு அசைவும் யாரோ ஒருவரால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இச்சூழல் பெரும் அச்ச உணர்வைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

‘இணையத்தில் தனது அந்தரங்கம் வெளியானதால் தற்கொலை செய்து கொண்ட பெண்’ என்கிற செய்தியை நாம் படிக்கிறோம். அப்பெண்ணின் மீதான கரிசனம் ஏதுமின்றி அவளின் அந்தரங்கத்தை இணையத்தில் தேடிக் கண்டு களிப்புறும் மன நிலை இன்றைக்கு சர்வ சாதாரணமாகி விட்டது. இந்த மன நிலையின் மீதுதான் கல்லெறிந்திருக்கிறது ‘லென்ஸ்’ திரைப்படம்.

புதிதாக திருமணம் செய்துகொண்ட ஜோடியின் முதலிரவு ரகசிய கேமராவில் படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் தீயாய் பரவுகிறது. வாய் பேசவியலாத மாற்றுத்திறனாளி மனைவி இதன் பொருட்டு பெரும் உளவியல் பாதிப்புக்கு ஆளாகிறாள். இணையம் என்பது ஒரு வழிப்பாதைதான்.

ஒரே ஒரு முறை பதிவேற்றப்பட்டு விட்டால் போதும் எந்த பெரிய சக்தியாலும் அதனை திரும்பப் பெறவே முடியாது. அந்த வீடியோவை எதிர்காலத்தில் தன் குழந்தையும் பார்க்க நேரிடும் என்கிற அச்சத்தின் கலக்கத்தால் அவள் கருக்கலைவுக்கு ஆளாகிறாள். பின்னர் தன் மரண சாசனத்தை வீடியோவில் பதிவேற்றி விட்டு தற்கொலை செய்துகொள்கிறாள். வாழ்தலுக்கான பெரும் கனவுகள் யாவும் சுக்கு நூறானது ஒரு வீடியோ பதிவேற்றத்தால்தான்.

அந்த வீடியோவை பதிவேற்றியவனைக் கண்டறிந்து அவனை இவ்வுலகத்தின் முன் அம்பலப்படுத்துவதோடு ரகசியமாக எடுக்கப்படும் பாலுறவு வீடியோக்களை கண்டு ரசிக்கும் குரூர மனநிலை மீதும் காறி உமிழ்கிறது யோஹன் கதாபாத்திரம். நிர்வாண உடலோடு தன்னை மார்பிங் செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டதால் தற்கொலை செய்து கொண்ட வினுப்ரியாவை நாம் மறந்திருக்க மாட்டோம்.

இன்றைக்கு இணையத்தில் கேமரா கண்களுக்கு எத்தனையோ பெண்கள் இரையாகியிருப்பதை ஒரு கிளிக்கில் கண்டுகொள்ளலாம். இதற்குப் பின்னால் ஒரு மெய்நிகர் சந்தையே இருக்கிறது. இது போன்ற தரவேற்றங்கள் தொழிலாகவும் நிகழ்த்தப்படுகிறது. பெண்களே பெரும்பாலும் இதற்கு இரையாகிறார்கள்.

ரகசியமாக வீடியோ எடுப்பவர்களும், அதைத் தரவேற்றுபவர்களும் மட்டுமே வக்கிர மனநிலை கொண்டவர்கள் அல்ல. அந்த வீடியோவைப் பார்த்து குதூகலிக்கிற, அதை மற்றவர்க்குப் பகிர்கிற ஒவ்வொருவரிடமும் வக்கிரம் இருக்கிறது என்பதை லென்ஸ் ஆழமாகக் கூறுகிறது. அதே சமயம் தனது அந்தரங்கத்தை தானே வீடியோ பதிவு செய்யும் மனநிலையையும் பலர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கண்ணீர் சொட்டச் சொட்ட தனது மரண சாசனத்தை நம் முன் காண்பிக்கும் அந்தப் பெண்ணின் வார்த்தைகள் யாவும் முள்ளாய் நெஞ்சைத் தைப்பவை. பல ஆயிரம் கண்கள் என்னை அனுதினமும் பாலியல் வன்புணர்வு செய்கின்றன என்கிறாள் அவள். எதிர்காலத்தில் தனது குழந்தையும் அந்த வீடியோவைக் காண நேரிடும் என்கிற அவளது அச்சம் எவ்வளவு நியாயமானது!

ஸ்கேண்டல் வீடியோக்கள் பார்க்கும் ஒவ்வொருவரையும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கும் விதத்தில் இந்தப் படம் சமூகத்துக்கான படமாக உருக்கொள்கிறது. ஆனால் நம் பெண்களுக்கு முதலில் சொல்லித் தரவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. பெண்ணின் நிர்வாணப் புகைப் படமோ அல்லது அந்தரங்க வீடியோவோ கயவர்களால் பதிவேற்றப்பட்டால் அதற்குப் பின் வாழ்க்கையே இல்லை என்று எண்ணிக்கொள்வது, அதற்காக உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடத் தேவையில்லை.

உடல் பற்றிய பார்வை பெண்களுக்கும் மாறவேண்டும். அதை ஒரு விபத்தாக எண்ணி அதிலிருந்து மீள்வது அவசியம். அதோடு மானம் போய்விட்டதென்று கருதிக்கொள்ளத் தேவையில்லை. ஏதோ ஒரு வகையில் லென்ஸ் பெண் உடல் மீதான சமூகத்தின் பார்வை  மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இனி வரும் படங்களில் லென்ஸுக்கு அடுத்து ஓர் அடி வைக்க வேண்டியது அவசியம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • neelakkrinji11

  பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் - 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து குலுங்குகிறது

 • bhuvaneshkumar_marriage

  இனிதாக நடந்த புன்னகை பொங்கும் இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாரின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்

 • PrimeMinisters

  பிரதமர் மோடி - இலங்கை பிரதமர் இடையே பேச்சுவார்த்தை

 • 24-11-2017

  24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • YuvaraniVinayakaPrize

  சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்