SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீராலானது இவ்வுலகு

2017-07-14@ 14:18:53

தமிழக ஆறுகளின் அவல நிலை!!

மு.வெற்றிச்செல்வன்
சூழலியல் வழக்கறிஞர்

கங்கை மற்றும் யமுனை நதிகளை ‘சட்டப்பூர்வமான நபர்களாக’ அறிவித்து கடந்த மார்ச் மாதம் ஆணையிட்டுள்ளது உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம். பலவித கழிவுகளால் மாசடைந்துள்ள கங்கை மற்றும் யமுனையை காக்க இத்தகைய நடவடிக்கை மிகவும் அவசியமானது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கோவில் சிலைகளை ‘சட்டப்பூர்வமான நபர்களாக’ அறிவித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மூலம் இந்திய குடிமகனாக பெறக்கூடிய அனைத்துவிதமான உரிமைகளையும் பெற தகுதி பெற்ற ‘நபர்களாக’ மாறியுள்ளன கங்கை மற்றும் யமுனை நதிகள். இவ்விரண்டு நதிகளுக்கும் மத்திய அரசு பாதுகாவலராக செயல்படும் என்றும் கூறியுள்ளது உயர் நீதிமன்றம். இவ்விரண்டு நதிகளை பாதுகாக்க தனி வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.

மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்க இருப்பதாகவும் கூறியுள்ளது உயர் நீதிமன்றம். இதேபோல நாட்டில் உள்ள எல்லா நதிகளும் பாதுகாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

நீர் பாதுகாப்பு சட்டம்
நாட்டின் இயற்கை வளங்களின் பயன்பாடு அனைத்து மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் அதனை மேம்படுத்துவதும் அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது அரசமைப்புச் சட்டம். அதேபோல வனங்களை பாதுகாப்பதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் அரசின் கடமை என்று கூறுகிறது அரசமைப்புச் சட்டம்.

1972ம்ஆண்டு ஸ்டாக்ஹோம் பிரகடனம் வெளியானதை தொடர்ந்து 1974ம் ஆண்டு இந்தியாவில் நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் இயற்றப்பட்டது. இருந்த போதிலும் 1982ம் ஆண்டு தான் இந்த சட்டத்தினை கொண்டு தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் அமைக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் எந்தவகை தொழிற்சாலையாக இருந்தாலும் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெற்ற பின்பே செயல்பட முடியும் என்னும் நிலை உருவானது.

இந்த சட்டத்தின் படி அனுமதி பெற்று நிர்ணயிக்கப்பட்ட அளவில் நீரை மாசுப்படுத்தும் அனுமதியை நிறுவனங்கள் பெறுகின்றன. மாசு கட்டுப்பாடு வாரியம் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களை முடக்கும் அதிகாரத்தை இவ்வாரியம் பெற்றுள்ளது. அதேபோல இவ்வாரியம் அனுமதி தந்துள்ள முறைகளின் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னரே நீர்நிலையில் கலந்திட வேண்டும் என்பது சட்டம். காகிதத்தில் மட்டுமே இந்த விதிமுறைகள் இருப்பதை பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளில் வெளியேறிய கழிவு நீர் பாலாறில் கலப்பதனால் ஏற்பட்டுள்ள சீர்கேடை நாம் யாவரும் அறிவோம். அதேபோல ஆடை நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காரணமாக நொய்யல் ஆறு மடிந்து வருவதை நாம் அறிவோம். இத்தனைக்கும் இந்த மாவட்டங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் கூறியுள்ளது. சமீபத்தில் கூட, தமிழகத்தில் போதிய அளவில் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்படாததை கண்டித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

தமிழக ஆறுகளின் அவலநிலை
கூவம், அடையாறு, பாலாறு, பொன்னையார், வெள்ளார், காவிரி, வைகை, வைப்பார் மற்றும் தாமிரபணி என அனைத்து தமிழக ஆறுகளும் பல்வேறு தொழிற்சாலை கழிவுகளால் கடுமையாக மாசடைந்துள்ளதாக எஸ்.ஜனகராஜன் கூறுகிறார். மேலும் “காவிரி ஆறு மாசுபடுவதன் வீச்சும் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில் அடுத்த 20 ஆண்டுகளில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை மாசுபடுதலின் தாக்கமாகத்தான் இருக்குமே தவிர நீர் தகராறாக இருக்க முடியாது” என்று கூறுகிறார்.

காவிரியின் பெரிய உபநதிகளான பவானி ஆறு, நொய்யல் ஆறு, அமராவதி ஆறு, கொடகனாறு, காளிங்கராயன் கால்வாய் ஆகிய அனைத்தும் இன்று மிக அதிக அளவில் மாசுபட்டுள்ளன. காவிரியின் உபநதியாக உள்ள நொய்யலாறு உலகின் பாவப்பட்ட ஆறு என்று கூறலாம். உண்மையில் நொய்யலாறு தற்போது திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாயப் பட்டறை மற்றும் பிளீச்சிங் தொழிற்சாலைகளின் கழிவு நீர்க் கால்வாயாக உள்ளது.

இதன் காரணமாக ஒரத்துப்பாளையம் அணை மிகவும் மாசடைந்து உள்ளது. இந்த அணையை திறக்க வேண்டாம் என விவசாயிகள் போராடும் அளவிற்கு நீர் மாசடைந்துள்ளது. அந்தப் பகுதி நிலத்தடி நீரையும் கடுமையாக இது பாதித்துள்ளது. மாசடைந்த நீரை குடிப்பதால் கால்நடைகள் இறப்பது இந்த பகுதியில் தொடர் நிகழ்வாக உள்ளது.

நீர்நிலைகளிலிருந்து 1 கி.மீ. வரை சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் எந்தத் தொழிற்சாலையையும் அமைக்கக் கூடாது என 1989ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை (எண்.213) ஒன்று வெளியிட்டது. ஆனால் இந்த விதி தொடர்ந்து பல நிறுவனங்களால் மீறப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மற்றொரு முக்கியமான ஆறான பாலாற்றின் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது. பாலாற்றில் மொத்தம் 606 ஆற்றுக் கால்வாய்கள் இருந்ததாக அரசு ஆவணங்கள் கூறுகின்றன.

இன்று அனேகமாக எல்லா ஊற்றுக் கால்வாய்களும் பயனற்றதாகிவிட்டன. இந்த ஆற்றின் மற்றொரு முக்கிய அம்சம் ஆற்றடி நீரோட்டமாகும். இந்தக் கீழ் நீரோட்டம் 30ல் இருந்து 40 அடி ஆழம்வரை உள்ளது. இந்தக் கீழ் நீரோட்டம் இன்றும் பல நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குத் தண்ணீரையும் ஆயிரக்கணக்கான கிணறுகளுக்கு நீரூற்றையும் அளித்து வந்தது. ஆனால் இன்று இவை மடிந்து விட்டன. பாலாறு மடிந்து போனதற்கு காரணம் தோல் தொழிற்சாலைகள்.

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் மொத்த தோல் தொழிற்சாலைகளில் 75%க்கு மேலானவை பாலாற்றுப் படுகையில்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. பாலாற்றுப் படுகையில் அமைக்கப்பட்டுள்ள தோல் தொழிற்சாலைகளினால் ஆகும் மொத்த ஏற்றுமதியின் மதிப்பு அகில இந்திய ஏற்றுமதியின் மதிப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும்.

1980களுக்கு பின்பாக தான் தோல் தயாரிப்பில் தாவரப் பொருட்களை பயன்படுத்தும் தொழில்நுட்பம் மாற்றப்பட்டு குரோமியம் மற்றும் பல ரசாயனப் பொருட்களை பயன்படுத்தும் தொழில்நுட்பம் பரவலாக பின்பற்றப்பட்டது. பாலாற்றுப் படுகையில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலைகள் ஒவ்வொரு நாளும் 45ல் இருந்து 50 மில்லியன் லிட்டர்வரை தண்ணீரை உபயோகப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதே அளவு தண்ணீர் தொழிற்சாலைக் கழிவுகளாக வெளியேற்றப்படுகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் கணக்குப்படி ஒரு வருடத்தில் வெளியாகும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் 13.5 மில்லியன் கன மீட்டர்கள். இதன் காரணமாக இந்த பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. பாலாறு சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி பரப்பு 50% மேலாகக் குறைந்துள்ளது. நெல் உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது.

தோல் பதனிடுவதற்காக பொடியாகவோ, திரவமாகவோ பயன்படுத்தப்படும் குரோமியம் புற்றுநோயை வரவழைக்கக்கூடியது. அதனை வெறுங்கைகளால் தொடுவது கூட உடல்நலனுக்குத் தீங்கானது. நீர், நிலம் , சுற்றுச்சூழல் என அனைத்தையும் நாசப்படுத்தக் கூடியது. ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்க வல்லது. நுரையீரல், சிறுநீரகங்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை செயலிழக்க வல்லது.

மாசு கட்டுப்பாடு வாரியம்
நீர் சட்டத்தின் மூலம் அதிகாரம் பெற்று இருக்கும் மாசு கட்டுப்பாடு வாரியம், எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் தண்ணீர் மாதிரிகளையும், கழிவு நீர் மாதிரிகளையும் எடுத்து சோதனை செய்து, அதன்படி சம்பந்தப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் படைத்தது. இதே போன்று எந்த ஒரு புதிய தொழிற்சாலை அமைக்கப்படவும் செயல்படவும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி நிச்சயம் தேவை.

மேலும் கழிவுநீரைச் சுத்திகரித்தோ, சுத்திகரிப்பதற்காகவோ தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றுவதற்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மாசுக் கட்டுப்பாடுவாரியவிதிகளைமீறுபவர்களுக்கு 18 மாதங்களிலிருந்து 6 வருடம் வரை சிறைத் தண்டனையும், அபராதத் தொகையும் விதிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் மற்றும் காற்று பாதுகாப்பு சட்டம் மூலமாகவும் மாசு கட்டுப்பாடு வாரியம் அதிகாரம் பெறுகிறது.

இருந்த போதிலும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடு போதியளவில் இல்லை என்றே கூறவேண்டும். போதிய அளவில் நீர்நிலைகள் பற்றிய ஆய்வுகளை வாரியம் மேற்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். வாரியத்தின் கண்காணிப்பு திறனையும் மேம்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது. மாறி வரும் சூழலுக்கு ஏற்ப அதிகாரமும் கொடுக்க வேண்டி இருக்கிறது. நமக்கு தொழிற்சாலை தேவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அவை சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

அவ்வாறு அவை செயல்படுகின்றனவா என்பதை வாரியம் கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறுகின்ற நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் அதிகம் மேற்கொள்வதில்லை.

என்ன காரணமோ தெரியவில்லை. தமிழக ஆறுகள் அனைத்தும் இன்று சீர்கெட்ட நிலையிலேயே உள்ளது. இதனை தடுத்து ஆறுகளை பாதுகாக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. அரசை செயல்பட வைக்க வேண்டிய கடமை மக்களாகிய நமக்கு உள்ளது.  

(நீரோடு செல்வோம்!)

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai_meenut11

  மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

 • berlin_bomb_war

  இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

 • 10schooldata

  10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

 • governor_palace11

  பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

 • ANDHIRA_MANILAM11

  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மாநிலமெங்கும் ஏராளமானோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்