SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீராலானது இவ்வுலகு

2017-04-21@ 14:15:24

நன்றி குங்குமம் தோழி

கடல் என்னும் குப்பைத் தொட்டி


கடந்த ஜனவரி மாதம் சென்னைக்கு அருகே எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதை நாம் அறிவோம். விபத்தின் காரணமாக கப்பலில் இருந்து பல நூறு டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. கடலில் கலந்துள்ள எண்ணெய் அளவு பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலை காமராஜர் துறைமுகம் இதுவரை வெளியிடவில்லை. நிச்சயம் 200 டன்னுக்கு அதிகமாக இருக்கும் என ஊடக செய்திகள் கூறுகின்றன. இந்த விபத்து காரணமாக எந்தவித பாதிப்பும் இல்லை என விபத்து நேர்ந்த அன்று காமராஜர் துறைமுகம் அறிவித்தது. எண்ணெய் படலங்கள் கடலில் பல கீலோ மீட்டர் அளவு பரவிய பின்பே விபத்து பற்றி பேச துவங்கியது காமராஜர் துறைமுகம்.

தமிழக அரசோ இந்த விபத்தை தாம் கையாள முடியாது இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது என்று கூறியது. இதனிடையே மீன், ஆமை, நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கின. சென்னை பெரு வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளானபோது அரசை நம்பாமல், தாமே முன்வந்து மக்களுக்கு உதவிய இளைஞர் கூட்டம் இந்த எண்ணெய்க் கழிவை அகற்றத் தயாரானது.சில இடங்களில் கழிவுகளை அகற்றவும் செய்தனர். பின்பு முறையான பயிற்சி இல்லாமல் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடக் கூடாது என்று இவர்களுக்குக் கூறப்பட்டது. ஒவ்வொரு பேரிடரும் நமக்கு பல பாடங்களை கற்பிக்கின்றன. அவற்றில் இருந்து கற்றுக்கொள்கிறோமா என்பதே முக்கிய கேள்வி.

விபத்தின் பாதிப்புகள்

இந்த விபத்தின் பாதிப்புகள் இரண்டு வகையானவை. உடனடி பாதிப்புகள் மற்றும் நீண்ட கால பாதிப்புகள். உடனடி பாதிப்பு கடல்சார் உயிரினங்கள் மற்றும் அதனை நம்பி உள்ள மீனவ மக்களுக்குத்தான். கச்சா எண்ணெய் கடலோடு கலந்து நீண்ட நாள் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இவை எத்தகைய பாதிப்புகளை கடல் சுற்றுச்சூழலுக்கும் மனித சமூகத்திற்கும் உண்டாக்கும் என்பதை, முறையான ஆய்விற்குப் பின்பே கூற முடியும்.கச்சா எண்ணெய் திறந்த வெளியில் கலக்கின்றபோது பலவித விஷ வாயுக்களை உற்பத்தி செய்யும்.

குறிப்பாக பென்சீன் (benzene) போன்ற வாயுக்கள் வெளியாகும். இவை புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. இந்த எண்ணெய்ப் படலம் கடலோரப் பகுதியின் தட்பவெப்ப நிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகும். எண்ணெய்ப் படலங்கள் பாறைகள் மீது படிந்துள்ளதால் இவையும் நீண்ட நாள் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உணர்த்தும் பாடங்கள்

கடல் மீது நாம் கொண்டிருக்கும் அக்கறையின்மையை இந்த விபத்து நமக்கு உணர்த்தி உள்ளது. இப்படி ஒரு விபத்து நடந்தால் அதனை மேலாண்மை செய்ய வேண்டியது மத்திய அரசா அல்லது மாநில அரசா என்னும் அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்களாக நம் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்திஉள்ளது. கடலில் விபத்து நேர்ந்து சூழல் சீர்கேடு நிகழும்போது அதனை முறையாக கையாளத் தெரியாத வகையில்தான் நமது துறைமுகங்கள் இயங்கி வருகின்றன. மத்திய அரசோ சூழல் சீர்கேடுகளை பற்றி எவ்வித கவலையும் இன்றி இருப்பதை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டியுள்ளது. மேற்கூறியவை எல்லாம் ஒட்டுமொத்தமாக நமது அரசு இயந்திரம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எந்த அளவிற்கு செயலற்ற தன்மையில் உள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

கடல் சூழல் பாதுகாப்பு

1985ம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷவாயு விபத்திற்கு பின்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இப்படி ஒரு கோர விபத்து நேர்ந்து பல ஆயிரம் நபர்கள் செத்து மடிந்து, சுற்றுச்சூழல் சீர்கெட்ட பின்பே இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சட்டங்கள் போதிய அளவில் இல்லை என்பதை இந்திய அரசு உணர்ந்தது. அதற்கு பின்புதான் 1986ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.இந்தச் சட்டத்தின் கீழ் 1991ம் ஆண்டு கடலோர ஒழுங்காற்று நெறிமுறைகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டன.

இந்த நெறிமுறைகளின்படி கடலோரப் பகுதிகளில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும், கட்டுமானங்களும் உரிய அனுமதி பெற்ற பின்பே கொண்டு வர முடியும். இந்த நெறிமுறைகளின் கீழ் அனுமதி வாங்க சில ஆய்வுகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்.அதில் முக்கியமானது, காமராஜர் துறைமுகம் போன்ற துறைமுகங்கள் கட்டப்படுவதற்கு முன்பாக இந்த கட்டுமானத்தால் கடலின் சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்புகள் உண்டாக வாய்ப்பு உள்ளது என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த பாதிப்புகளை குறைக்கவும் மேலாண்மை செய்யவும் திட்டம் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இந்தியாவில் இத்தகைய விபத்து நடப்பது இதுதான் முதல் முறை. இது யாரும் எதிர்பாராதது. எனவேதான் எங்களால் இந்த விபத்தை முறையாக கையாள முடியவில்லை என்னும் சாக்கு அரசு தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. ஒரு ராணுவ வீரர் எல்லாவித ஆபத்துகளையும் எதிர் நோக்கியே இருக்க வேண்டும், அதுதான் ஒரு சாமானியனுக்கும் அவனுக்குமான வேறுபாடு. அதுபோலவே அரசு என்பது இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராகவே இருக்க வேண்டும்.

இதற்காகவே பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. தற்போது நடந்துள்ள விபத்து போன்ற நிகழ்வுகள் நடைபெற்றால் அதனை மேலாண்மை செய்ய பேரிடர் மேலாண்மை திட்டங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. காமராஜர் துறைமுகமும் பெயரளவில் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது. அதன் செயல்திறனைத்தான் நாம் எல்லோருமே பார்த்தோமே!

பொதுவாக எண்ணெய் கடலில் கலந்து விபத்திற்குள்ளானால் அதனை கையாள மூன்று வித பிரிவுகள்  சர்வதேச விதிமுறைகளில் உள்ளன. கடலில் கலந்துள்ள எண்ணெய்ப் படலத்தின் அளவை அடிப்படையாக எடுத்துக்கொண்டு இந்தப் பிரிவுகள் வரையறை செய்யப்படுகின்றன.சுமார் 10 முதல் 200 டன் அளவிலான எண்ணெய்ப் படல கசிவு - டயர் I, 200 டன் முதல் 1000 டன் வரையிலான கசிவு  டயர் II, 1000 டன்னுக்கு அதிகப்படியான கசிவு  டயர் III.

சென்னையில் நடந்துள்ளது டயர் II பிரிவை சார்ந்தது. இப்படி டயர் II பிரிவில் வரக்கூடிய வகையிலான விபத்து நேர்ந்தால் அதனைக் கையாள என்ன திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதற்கு சர்வதேச சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் போதிய சட்டங்கள் இல்லை.கடலோர பாதுகாப்புப் படை சில நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதுவும் காமராஜர் துறைமுகத்தில் பின்பற்றப்படவில்லை. இத்தகைய விபத்துகளை கையாள காமராஜர் துறைமுகத்தில் எந்தவித வசதியும் இல்லை, திட்ட நடைமுறையும் இல்லை என்பது வெட்கக்கேடான ஒன்று.

கடலின் முக்கியத்துவம்

கடல் தோன்றிய விதம் இன்னும் புதிராகவே உள்ளது. ஆனால் உயிரினங்கள் கடலில்தான் தோன்றின. கடல் நமக்கு தேவையான பிராண வாயுவை கொடுக்கிறது. கரியமில வாயுக்களை உள்வாங்கி புவி வெப்பமாவதை தடுக்கிறது. பூமியின் தட்பவெப்ப நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. மழை தரும் மேகங்களை கொடுக்கிறது. பல கனிமங்களை கொடுக்கிறது. சத்தான உணவுகளை தருகிறதுஆனால் நாம் கடலை குப்பைத்தொட்டியாகப் பார்க்கிறோம். வீட்டில் உண்டாகும் குப்பை முதல், தொழிற்சாலை குப்பைக் கழிவுகள், அணுக்கழிவுகள் வரை கடலில்தான் கொட்டப்படுகின்றன.

இவை கடலின் தன்மையை வெகுவாக மாற்றி வருகின்றன. இதன் காரணமாக கடலின் இயல்புத்தன்மை மாறி வருகிறது. கடலின் இயல்புத்தன்மை மாறும்போது அதன் நீரை பாதிக்கும்.பிராணவாயு வெளியேற்றத்தை பாதிக்கும், தட்பவெப்பநிலையை பாதிக்கும். எண்ணூர் எண்ணெய் விபத்துகள் போன்ற நிகழ்வுகள் கடலின் சூழல் சீர்கேட்டை அதிகரிக்கும். கடல் நிலத்தின் முடிவு அல்ல. உயிரினங்களின் தோற்ற புள்ளி, நம்மை வாழவைக்கும் சூழல் மையம். கடலின்றி உயிரினம் இருப்பது சாத்தியமற்றது. இந்த உலகில் கடல் மட்டுமே எல்லோருக்கும் பொதுவானது. அதனை அப்படியே இருக்கச் செய்வோம். கடலை கடலாக இருக்க விடுவோம்.

(நீரோடு செல்வோம்!)

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27PEOPLEdeidINhigHWAYacc

  கென்யாவில் நைரோபி-மம்பசா நெடுஞ்சாலையில் பஸ் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி 26 பேர் பலி

 • PEGGYwhitsonASTRONAUT

  அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை

 • RAM100yauliVECH

  ராமானுஜர் ஆயிரமாவது வருட உற்சவ விழாவை முன்னிட்டு யாளி வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா

 • ooty_pugaiii

  ஊட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியில் பிளவு ஏற்பட்டு கரும் புகை வெளியேறியது

 • strike_governmenn

  அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்