SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்லுலாய்ட் பெண்கள்

2017-04-21@ 14:07:43

நன்றி குங்குமம் தோழி

துன்பம் நேர்கையில் ஆடியும் பாடியும் துயர் தீர்த்தவர் லலிதா


‘எழில் ராணி போலே என்னைக் காண்பதாலே…’ இந்தப் பாடல் வரிகளை கேட்கும்போதும், தொலைக்காட்சிகளில் இக்காட்சியைப் பார்க்கும்போதும் அச்சு அசலாக எழிலான ஒரு ராணியைக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் லலிதா. மிக ஒயிலாகக் கழுத்தைச் சற்றே வளைத்து, கால் மேல் கால் போட்டபடி ஒரு கம்பீரத்தையும் ஒருசேரக் கண் முன் நிறுத்துவதோடு, மிக அலட்சியமாக இடதுகையால் நாக ரூபத்தில் இருக்கும் கிரீடத்தை எடுத்துத் தலையில் சூடியவாறு இந்த வரிகளை அவர் பாடியவாறே போதையூட்டும் கண்களால் ரசிக மனங்களைக் கிறங்கடிக்கும் அவரது தோற்றம் நம் மனங்களில் நிரந்தரமாகத் தங்கி விடும்.

நாகலோக ராணியல்ல, நம் மனங்களை கொள்ளையிட்ட ராணி
‘உன்னைக் கண் தேடுதே’ என்று நம் கண்கள் அவரைத் தேடத் தொடங்கி விடும். நாகலோகத்தின் ராணியாக லலிதா பாடி ஆடும் அத்தகைய ஓர் காட்சியமைப்பு ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் இடம் பெறுவது. படத்தின் கதாநாயகி என்னவோ அஞ்சலிதேவி என்றாலும், இந்த ஒரு காட்சியிலேயே அனைவரையும் கொள்ளை கொண்டு விடுவார்.அந்தக் காட்சிக்கு அடுத்து மேற்சொன்ன அத்தனை வர்ணனைகளும் உடைந்து தூள் தூளாகும் வண்ணம், கொதித்தெழுந்து தன்னை சாதாரண ஒரு மானிடன் ஏமாற்றியதைப் பொறுக்க மாட்டாமல், சீறி சினந்து சாபமிடும்போது நாகலோக ராணி நம்மைப் பதறவும் வைத்து விடுவார். ஆம், அதுதான் அவர் நடிப்பின் சிறப்பு. இரண்டு எல்லைகளை ஒரு சேரத் தொட்டு நிற்கும் வண்ணம் வானுக்கும் பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நடிப்பு.

இப்படத்தில் ஒரு வில்லி வேடம்தான் லலிதாவுக்கு. ஆனாலும் மறக்க முடியாத வேடம். முதலில் இந்த வேடத்துக்காக அழைக்கப்பட்டவர் அஷ்டாவதானி பானுமதி அவர்கள்தான். ஆனால், ஏதோ சில காரணங்களால் அது நிகழாமல் போனது. நமக்கும் லலிதாவின் அற்புதமான நடிப்பு கிடைத்தது. லலிதா, பெயருக்கேற்ப மிக நளினமான அழகுக்கு சொந்தக்காரர்.

திருவாங்கூர் சகோதரிகளில் இரண்டாமவரான பத்மினி ஒரு எழிலரசி என்றால், லலிதாவின் அழகு வேறு விதம். ஆரம்ப காலப் படங்களில் பத்மினியை விட லலிதாவே மிகவும் கவர்ச்சிகரமாகத் தோற்றமளித்தார். கன்னத்தில் விழும் குழியுடன் வசீகரிக்கும் அழகு அவருடையது. இருவரும் இணைந்து நடனமாடினாலும் பெண் வேடங்களை லலிதாவே ஏற்றார்.

இருவரும் அக்காள் தங்கையாக, தோழிகளாக, கதாநாயகியும் வில்லியுமாக, ஓரகத்திகளாக என்று பல வேடங்களில் வேடமேற்று நடித்தவர்கள். இருவரும் ஒரே நேரத்தில் திரையுலகில் நுழைந்தாலும் பத்மினியைப் போல மிக நீண்ட காலம் அவர் திரையில் ஜொலிக்கவில்லை. தங்கப்பன் பிள்ளை - சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகளாக, ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியில் அமைந்த திருவனந்தபுரத்தில் 1930 ல் பிறந்தவர் லலிதா.தங்கை பத்மினியுடன் நடனப்பயிற்சி என துவங்கிய கலை வாழ்வு சோர்வுறாத வகையில் தொடர்ந்தது என்றே சொல்லலாம். சகோதரிகள் சென்ற இடமெங்கும் கால்களில் கட்டிய சதங்கைகளின் ஒலி ‘கலீர் கலீர்’ என ஒலித்தன.

திருவிதாங்கூர் சகோதரிகள் என பெரும் புகழையும் அடைந்தவர்கள் லலிதா, பத்மினி, ராகினி மூவரும். நாட்டிய மேதை உதயசங்கரின் ‘கல்பனா’ இந்திப்படம் மூலம் முதல் திரையுலகப் பிரவேசம்.அடுத்து 1947ல் ‘கன்னிகா’ படம் மூலம் தமிழ்த் திரையுலகப் பிரவேசம். அடுத்த ஆண்டில் ‘ஆதித்தன் கனவு’ தமிழ்ப்படம் மூலம் தொடர்ந்தது திரை நடனம். சகோதரிகளின் பங்களிப்பு இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்ற நிலையை நோக்கி அவர்களை உந்தித் தள்ளியது. அதன் பின் நிற்பதற்கு நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்றாடினார்கள் ஆடலரசிகள் இருவரும்.

குவிந்தன பங்களாக்கள்
‘வேதாள உலகம்’ படத்தின் மூலம் மேலும் பெரும் புகழையும் பொருளையும் அடைந்தார்கள். ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அந்தளவுக்கு விளம்பரங்களை செய்ததன் மூலம், கோடம்பாக்கமே சகோதரிகள் இருவரையும் அதிசயத்துடன் திரும்பிப் பார்த்தது. நாட்டியத்தில் சகோதரிகள் செய்த சாதனைகள் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள். அது கொஞ்சமும் மிகையில்லை எனலாம்.

1944ல் திருவிதாங்கூர் சகோதரிகள் தங்கள் தாயார் மற்றும் தம்பியுடன் சென்னை வந்திறங்கியபோது அவர்களுக்கென்று சொந்தமாக இடமோ வீடோ இல்லாத நிலையில், அவர்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு இடமளித்து, அவர்களை காத்தவர் முன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்கள் தான். அங்கு தங்கியிருந்தே தங்கள் கலைப்பணியை தொடங்கினார்கள் சகோதரிகள். இப்படியொரு திருப்பம் தங்கள் வாழ்வில் நிகழும் என்று அவர்களே கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

அப்படியானதொரு பெரு வாழ்வு சகோதரிகளுக்கு வாய்த்தது. நடிப்பும் நாட்டியமும் இரு கண்களென நினைத்து ஓய்வின்றி உழைத்ததன் பலனாக மிகக் குறுகிய காலத்தில் சென்னையின் மிக முக்கிய பகுதியான மயிலாப்பூர் எட்வர்ட் எலியட் சாலையில் (பின்னாளில் அது டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை) 12 பங்களாக்களை வாங்கிக் குவித்தார்கள். இவர்களின் தாயார் சரஸ்வதி அம்மாள், ‘லலிதா பவன்’, ‘பத்மினி நிவாஸ்’, ’ராகினி ஹவுஸ்’ என்று மகள்கள் மூவரின் பெயரிலேயே அவற்றுக்கெல்லாம் பெயர் சூட்டி அதனை நிர்வகித்தார்.

நேரு விரும்பிய ‘கீதோபதேசம்’
‘டான்ஸ் ஆஃப் இந்தியா’ என்று சொந்தமாக நடனக்குழு அமைத்து சிறு சிறு நாட்டிய நாடகங்களை தாங்களே உருவாக்கி அரங்கேற்றத் துவங்கினார்கள். இவர்களுடன் மேலும் சிலரும் இணைந்து இக்குழுவினர் பல ஊர்களுக்கும் சென்று நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதியன்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முன்னிலையில் நடனம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.எவருக்கும் கிடைக்காத அபூர்வமான வாய்ப்பு என்றே இதனை சொல்லலாம். ‘டான்ஸ் ஆஃப் இந்தியா’ குழுவின் மூலம் ‘கீதோபதேசம்’ என்ற நாட்டிய நாடகத்தை மிகச் சிறப்பாக நடத்துவார்கள். நேருவுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நாட்டிய நிகழ்ச்சி அது. வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு அது.

‘ஏழை படும் பாடு’ உருவாக்கிய நடிப்பு
விக்டர் ஹியூகோவின் புகழ் பெற்ற நாவலான ‘லே மிஸரபிள்’ 1950 ஆம் ஆண்டில் ‘ஏழை படும் பாடு’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் லலிதா வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெண்ணாக, அதே சமயம் இளம் வயதுப் பெண்ணுக்கே உரிய குறும்புத்தனமும் இயல்பான ஆசைகளும் கொண்ட பெண்ணாக மிகப் பிரமாதமாக நடித்திருந்தார். பட்சிராஜா ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படத்தை கே.ராம்நாத் இயக்கியிருந்தார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க படங்களின் வரிசையில் இடம் பெறத்தக்க ஒரு படம் இது. அதுவரையிலும் நடனங்களில் மட்டுமே தோன்றிய சகோதரிகள் இருவருக்குமே நடிப்பதற்கான வாய்ப்பையும் அளித்த முதல் படம் இது.

எல்லாம் இன்ப மயமானது
1951ல் வெளியான ‘மணமகள்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும், இப்படத்தின் கதாநாயகி பத்மினி. ஆனால், அதற்கு  சற்றும் குறையாத நடிப்பு லலிதாவுடையது. வயதான ஒருவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு, எந்நேரமும் அது பற்றிய குறையும், குமைதலுமாக ஒரு இளம் பெண்ணின் அபிலாஷைகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். நொடிக்கொரு தரம் குணம் மாறுவதும், நொடித்துக் கொள்வதுமாக நடுத்தர வர்க்கத்துப் பெண்ணைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்.

பாட்டு சொல்லிக் கொடுக்க வரும் சபல புத்தி வாத்தியார் (டி.எஸ்.பாலையா), பகட்டு வாழ்க்கைக்கு ஏங்கித் தவிக்கும் அந்த இளம் பெண்ணின் ஏக்கங்களை சரியாக புரிந்து கொண்டு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் என கதை வேறு மாதிரியாக நகரும். என்.எஸ்.கிருஷ்ணன் சொந்தமாகத் தயாரித்து, அவரே இயக்கிய படம். கலைஞர் கருணாநிதியின் வசனங்களை குறைவறப் பேசியிருப்பார். ‘எல்லாம் இன்ப மயம்’ பாடல் கேட்கும் எந்நேரமும் இன்பம் பயக்கும். மிகப் பிரமாதமாக ஓடிய சூப்பர் ஹிட் படம் இது.

‘கண்ணே… ஆடிக் காட்ட மாட்டாயா?’
இதே ஆண்டில் வெளியான ‘ஓர் இரவு’ லலிதாவுக்குக் கிடைத்த பம்பர் பரிசு என்றுதான் சொல்ல வேண்டும். அறிஞர் அண்ணா ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் இது. படத்துக்கும் வசனம் அவரேதான். பல பரபரப்பு சம்பவங்களால் கோர்க்கப்பட்ட நேர்த்தியான கதை. ஜமீன்தாரின் ஒரே மகள் சுசீலாவாக நடித்திருப்பார். இவருக்கு இணை நாகேஸ்வர ராவ். இப்படத்தில் இடம் பெற்ற ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்ற எவர்க்ரீன் பாடலை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியுமா?

அதிலும் பாடலுக்கு இடையில் ஒலிக்கும் ‘கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன் பார்க்கிறீங்க’ என்ற அந்த வசனத்தைதான் மறந்து விட முடியுமா? பாடலின் இறுதியில் ‘ஆடிக் காட்ட மாட்டாயா?’ என்று கேள்வி எழுப்பியதும், சற்றும் தயங்காமல் எழுந்து லலிதா ஆடும் அந்த ஆட்டம் எத்தனை பரவசமானது. இன்றும் பலரது கைபேசிகளில் ரிங் டோனாகக் காலம் கடந்தும் நிற்கிறது அந்த கானம். பாடல், ஆடல் மட்டுமல்லாமல் நடிப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் இருந்தது. பத்மினி ஒரேயொரு பாடலுக்கு மட்டும் அக்காளுடன் வந்து இணைந்து கொண்டார்.

காஞ்சனையின் கனவுக்குக் கிடைத்த வெற்றி
அந்த நாட்களில் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் வெளியாகும் தொடர்கதைகள் பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவை. அதிலும் எழுத்தாளர் லக்ஷ்மி பெண்களின் மனதைக் கவர்ந்தவர். ‘காஞ்சனையின் கனவு’ என்ற தொடர்கதையை  விகடனில் எழுதி வந்தார். அக்கதை ‘காஞ்சனா’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இந்தக் கதையில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று வாசகிகளுக்கு ஒரு போட்டியும் அறிவிக்கப்பட்டது.பெண்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவர்களாக பரிந்துரைக்கப்பட்டவர்கள் லலிதாவும் பத்மினியும். இருவரும் அப்படத்தில் நடித்தார்கள். ‘காஞ்சனா’ என்ற முதன்மைக் கதாநாயகியின் பாத்திரம் ஏற்றவர் லலிதா.  1952ல் வெளியான இப்படத்தையும் தயாரித்தவர்கள் பட்சிராஜா ஸ்டுடியோ நிறுவனம்தான்.

இயக்கம்: ஸ்ரீராமுலு நாயுடு. தேவதாசி குலத்தில் பிறந்தவளான அழகிய இளம்பெண் பானுவுக்கும் (பத்மினி) இளம் ஜமீன்தாருக்கும் (கே.ஆர்.ராமசாமி) இடையில் ஏற்படும் காதல், அந்தஸ்து மற்றும் சாதிகளின் ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில், இருவரும் இணைந்து வாழ்கிறார்கள். ஆனால், பெற்றவளின் சொல்லுக்கு மதிப்பளித்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார் ஜமீன்தார்.அப்பெண்ணோ அவர்கள் தோட்டக்காரரின் மகள் காஞ்சனா (லலிதா).

மனைவி, காதலி இருவரிடமும் மாறாத அன்பை செலுத்தும் ஜமீன்தாருக்கு, நடைமுறை  சிக்கல்கள் ஏற்படுவதும், மூவருக்குள்ளும் எழும் மனநிலை கொந்தளிப்புகளுமாகப் படம் நகரும். முக்கோணக் காதல் என்று வரும்போதே இரு பெண்களில் யாராவது ஒருத்தி உயிர்த் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.

அன்றைய சமூகத்தின் மனநிலைக்கேற்ப தேவதாசிக் குலப் பெண்ணான காதலி பானு உயிர் துறக்கிறாள். கணவனோடு எந்தத் தொந்தரவுமின்றி இணைந்து வாழ்வதன் மூலம் ‘காஞ்சனையின் கனவு’ பலிக்கிறது. உணர்வுப்பூர்வமான பாத்திரத்தை ஏற்று மூவருமே சிறப்பாக நடித்த படம் இது. இந்தப் படமும் தயாரிப்பாளரை ஏமாற்றாமல் பெரும் வசூலை வாரிக் குவித்தது.

கொலையும் செய்வாள் பத்தினி
1954ல் வெளியான படம் ‘தூக்குத்தூக்கி’. கர்ண பரம்பரைக் கதை இது. ராஜா ராணிக் கதைக்குள், ‘கொண்டு வந்தால் தந்தை’, ‘கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்’, ‘சீர் கொண்டு வந்தால் சகோதரி’, ‘கொலையும் செய்வாள் பத்தினி’, ‘உயிர் காப்பான் தோழன்’ என்ற ஐந்து தத்துவங்களை உள்ளடக்கி, கதாநாயகன் அதைத் தன் வாழ்வில்  பரிசோதித்துப் பார்ப்பதுதான் கதை.

இதில் முக்கியமாக ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்ற தத்துவத்தை விளக்கும் விதமான கதையில், கொண்ட நாயகனுக்கு துரோகம் செய்வதுடன் அவனைக் கொலை செய்யவும் துணியும் நாயகியாக நடித்தவர் லலிதா. திருமணத்துக்குப் பின்னும் கணவன் அரண்மனைக்குச் செல்லாமல் பிறந்த நாட்டு அரண்மனையில் தங்கியிருக்கும் பெண்ணாக, அரண்மனை அந்தப்புரம் வரை வந்து துணிகள் விற்கும் ஒரு வட நாட்டு சேட்டிடம் மனதைப் பறி கொடுப்பவளாகவும் சொல்லப்படும் கதை நம்ப முடியாததாக இருந்தாலும், அந்தப் பாத்திரங்களுக்கு உயிரூட்டிய வகையில் முதலிடம் பெறுபவர்கள் லலிதாவும் பாலையாவும். கொச்சையான தமிழில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் சேட் பாலையா, அவன் கொண்டு வரும் துணிகளுக்காகவும் அவன் கையால் செய்து கொடுக்கும் பீடாவுக்காகவும் மயங்கும் லலிதா. இருவரின் நடிப்பும் அபாரம், ஆஹா… ரகம்தான். அதிலும் அந்த ‘நம்பள்கி மஜா’ பாடல் ரசிக்க வைக்கும்.

நாட்டிய மங்கை சந்திரமுகி
சாவித்திரி, நாகேஸ்வர ராவ் நடிப்பில் புரட்டிப் போட்ட படம் என்றால் அது ‘தேவதாஸ்’. இன்றளவும் காதலுக்கு அடையாளமாகச் சொல்லப்படுகின்ற படம். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் சக்கைப்போடு போட்டது அந்தப் படம். மூன்றாவதாக ஒருவரும் அதில் நடித்து கலங்க வைத்தார். அவர் லலிதா. ஆம், நாட்டியக்காரியாக தேவதாஸை மயக்கும் தாசிப் பெண் சந்திரமுகியாக நடித்து அமர்க்களப்படுத்தியவர் லலிதாவேதான்.

‘உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்று தெருவோரத்தில் ஒரு பிச்சைக்காரனைப் போல வீழ்ந்து கிடக்கும் தேவதாஸ் மீது கொண்ட மாறாத காதலால், அவனைத் தேடி வரும் சந்திரமுகி அவனுக்கு மட்டும் வாழ்வளிக்கவில்லை. அரை நூற்றாண்டு கடந்தும் பலரையும் வாழ வைத்திருக்கிறாள். இந்த சந்திரமுகியின் பெயர்த் தாக்கம்தான் ஜோதிகாவை சந்திரமுகியாக மறு அவதாரம் எடுக்கவும் வைத்திருக்கிறது.

திரை வாழ்விலிருந்து நிஜ வாழ்க்கைக்கு
திருவிதாங்கூர் சகோதரிகள் மூவரில் பத்மினி ஒருவர்தான் நீண்டகாலம் திரையுலகில் நீடித்தவர். அவரளவுக்கு லலிதா நடிக்கவில்லை. பத்மினியைப் போல மிகை நடிப்பையும் அவர் கைக்கொள்ளவில்லை. இயல்பான நடிப்பு அவரிடம் வெளிப்பட்டது. வசனங்களை உச்சரிக்கும் பாணி மென்மையாக இருக்கும். இயல்பிலேயே குறும்புத்தனம் அவரிடம் குடி கொண்டிருந்தது. அது நடிப்பாக வெளிப்பட்டபோது பார்ப்பவர்களை மயங்கவும் கிறங்கவும் பரவசப்படவும் வைத்தது.

‘திகம்பர சாமியார்’, ‘வேதாள உலகம்’ போன்ற படங்களில் இடம்பெற்ற நாட்டியங்களை பார்க்கும்போது அது மிகத் தெளிவாகத் தெரியும். தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முதன்மை நாயகியாகவே நடித்தவர். நடிப்பின் உச்சத்திலிருந்தபோதே திருமணம் செய்து வைக்கப்பட்டார். குடும்பத்தின் மூத்த பெண் என்பதாலும், தந்தை இளம் வயதிலேயே தாயாரையும் குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து போய் விட்டதாலும் அவருடைய தாயார் அந்த முடிவை எடுத்தார்.

லலிதாவும் மறுக்காமல் அதை ஏற்றுக்கொண்டார். கேரளாவைச் சேர்ந்த சிவசங்கரன் நாயர் மணமகனாகத் தேர்வு செய்யப்பட்டார். திருமணத்துக்குப் பின் லலிதா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு, முழு நேர இல்லத்தரசியாக கேரளாவிலேயே குடியேறினார். திறமையான ஒரு நடிகையை, நாட்டியத்தாரகையை திரையுலகம் இழந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருடைய பேரன் கிருஷ்ணா மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரையுலகை விட்டுச் சட்டென்று நீங்கியதைப் போலவே, 1983 ஆம் ஆண்டில் தன் 53வது வயதில் இம்மண்ணுலக வாழ்க்கையையும் துறந்து மறைந்து போனது இந்த நாட்டிய நட்சத்திரம். இன்றும் அவருடைய நாட்டியம் மற்றும் நடிப்பின் வழியாக நம் மனங்களில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டே இருக்கிறார்.

(ரசிப்போம்!)

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27PEOPLEdeidINhigHWAYacc

  கென்யாவில் நைரோபி-மம்பசா நெடுஞ்சாலையில் பஸ் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி 26 பேர் பலி

 • PEGGYwhitsonASTRONAUT

  அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை

 • RAM100yauliVECH

  ராமானுஜர் ஆயிரமாவது வருட உற்சவ விழாவை முன்னிட்டு யாளி வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா

 • ooty_pugaiii

  ஊட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியில் பிளவு ஏற்பட்டு கரும் புகை வெளியேறியது

 • strike_governmenn

  அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்